

எந்த செயலும் வரைமுறை இல்லாமல் வடிவமைக்க முடியாது. அதைப்போல் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட எண்ணங்கள் விரிந்து செயல் ஆற்றும் திறனை மனதில் வெளிப்படுத்த முயற்சி செய்யுங்கள்.
உங்கள் மனதுக்கு சரி என்று படுவதை, செயலாற்ற வைராக்கியமாய் இருங்கள். அடுத்தவன் நம்மை திமிர் பிடித்தவன் என்று பட்டம் கொடுத்தாலும், கவலைபடாமல் செயலாற்றுங்கள். எழும் விமர்சனங்களை கவனிக்க தொடங்கினால், இலக்கின் பயணம் தடைபடும்.
வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற ஆசை எல்லோருக்கும் உண்டு. தனக்கு உகந்ததை மனதுக்குள் விதைத்து, ஊக்கம் என்னும் உரம் போட்டு, உழைப்பு நீர் ஊற்றினால் வாழ்க்கையில் வசந்தம் பூக்கும்!
மனம் என்பது கடல் அலை போன்றது. ஒன்றன் பின் ஒன்றாக, நம் எண்ணங்களை அடித்து இழுத்துச் செல்லும். நெஞ்சுரம் தடை போட்டு, அலைகளில் சிக்காமல், அதன் மேல் பயணம் செய்யும் கலையை கற்று, முன்னேறும் வழிதேடுங்கள்.
எப்படியும் வாழ்வது வாழ்க்கை அல்ல. இப்படித்தான் வாழ வேண்டும் என்பதை புரிந்து கொளுங்கள். அதற்கு உங்கள் மனதை துடுப்பாக பயன் படுத்தி, வாழ் வாங்கு வாழப்பழகுங்கள்.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டு வாழ, மனதை வைராக்கியமாக பண்படுத்தும் நிலையை உருவாக்கிக் கொள்ள முயற்சி செய்யுங்கள். மனம் போல் வாழ்க்கை என்பது அவ்வளவு எளிதல்ல. ஆற்றுக்கு கரை போல், நல் வாழ்க்கைக்கு மனமே கரை என்பதை உணர்ந்து, வெற்றிக்கு வித்திடுங்கள்!
சிந்தனையில் ஆயிரம் எண்ணங்கள் வந்து போகும். சரியான செயல் ஆற்றும் எண்ணங்களை வடிவமைத்து, அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை சிந்தித்து, நடைமுறை படுத்துங்கள். அப்போதுதான் தெளிவான புரிதல் உங்களிடையே தோன்றி, வழிமுறைகள் தென்படும்.
வாழ்க்கையில் பல புதிர்கள் தோன்றி, உங்களை தலைசுற்றச் செய்யும், அதற்கு விடைகள் தேடி, காலத்தையும் நேரத்தையும் உழைப்பையும் வீணாக்கி சோர்ந்து போகாமல், அப்போது தேய்பிறை நிலவாக மாறாமல், முழுமதி நிலவாக செயலாற்றும் திறமையை வளர்பிறையாக எண்ணங்களை மனதில் பதிவிட்டு, களமாடி முன்னேறுங்கள்.
உங்கள் செயலில் நம்பிக்கை குறைவோ அல்லது பயமோ ஏற்ப்பட்டால், உடனடியாக மனதை ஒரு நிலைப்படுத்தி, தனிமைப் படுத்திக் கொள்ளுங்கள். அப்போதுதான் அது எதனால் ஏற்ப்பட்டது என்பதன் காரணம் உங்களுக்கு புலப்படும். இல்லையேல் மனபலம் இழந்து, உடல் பலமும் குறைந்து இருமுனைக் கத்தியாக உங்களைத் தாக்கும். அதில் இருந்து மீள்வது கடினம் என்பதை புரிந்துகொள்ளுங்கள்.
உங்கள் மனதில் தைரியமும் உறுதியும் நிலைப் பெறுவதற்கு, தினமும் முடிந்த அளவுக்கு தியானம் பண்ணுங்கள். அப்போது தான் எதிர்வரும் எந்த கடினமான சூழலையும் எதிர்நோக்கும் மனப்பக்குவம் உருவாகும். அதுவே எதையும் சமாளிக்கும் அருமருந்து,
நீங்கள் செயலாற்றும்போது ஏற்படும் தவறுகளுக்கும் தாமே காரணம் என்று உணர்ந்து, கவனமாக ஒவ்வொரு முயற்சியிலும், தன்னை திருத்திக்கொள்ளும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.
உங்கள் மனம் எஃகு கோட்டையாக இருந்தால், வாழ்க்கையிலா ஏற்படும் துயரங்களுக்கு வானம் கூட வானவிலாக குடை பிடிக்கும்.
வானவில் வண்ணங்கள் போன்று உங்கள் எண்ணங்களை நல்வழியில் பயணித்து, முன்னேறும் கலை அறிந்து, சிந்திக்கும் மனதில் ஞானஒளி ஏற்றுங்கள்!