
கார் ஒன்று வாங்க வேண்டுமென்று ஒருவனுக்கு ஆசை எழுகிறது. அந்த ஆசையை நிறைவேற்றுவதற்காக அவன் கடினமாக உழைத்து அதனை வாங்கியும் விடுகிறான். கார் அவன் வீட்டு வாசலில் வந்து நிற்கும்போது அந்தக் கணத்தில் தாளமுடியாத சந்தோஷத்தில் தத்தளிக்கிறான். அந்தச் சந்தோஷம் அவனுக்குக் காரிலிருந்து கிடைத்ததா? இல்லை.
அந்தப் புதிய பொருளின் வரவு அவன் மனத்தைக் கடந்த காலத்திற்கும் எதிர்காலத்திற்கும் பயணப்பட விடாமல் செய்து விடுகிறது. சில மணித்துளிகள் அவன் கடந்த காலக் கவலைகளிலிருந்தும், எதிர்காலம் குறித்த எதிர்நோக்குதல் களிலிருந்தும் விடுதலையாகி நிற்கிறான். அந்தச் சில மணித்துளிகளில் அவனுக்குப் பெரும் பரவசம் கிட்டுகிறது. ஆனால், இந்தப் பரவசம் நிலையானதல்ல. நேரம் செல்லச் செல்ல அந்தப் பரவச நிலை படிப்படியாக மறைய ஆரம்பிக்கிறது. காரணம்,
நிகழ்காலத்தில் நின்றிருந்த மனம், இப்போது கடந்த காலத்திற்கோ வருங்காலத்திற்கோ தாவத்தொடங்கியிருப்பதுதான்.
கார்தான் அவனுக்குச் சுகத்தை வழங்கியிருக்குமெனில் அவன் அந்தக் காரைக் காணும்போதெல்லாம் சந்தோஷ வெள்ளத்தில் மிதக்க வேண்டும், அதனைத் தொடும்போதெல்லாம் மகிழ்ச்சியடைய வேண்டும். அதனுள் அமர்ந்து பயணிக்கும் போதெல்லாம் வான்வெளியில் பறப்பது போன்ற மிதப்பு நிலை உண்டாக வேண்டும். ஆரம்பத்தில் சில நாள்கள் வேண்டுமானால் அவன் இத்தகைய இன்ப உணர்வுகளுக்கு ஆட்பட்டிருக்கலாம்.
அதுவும் இந்தச் சுகஉணர்வு, காரைப் பெற்ற முதல் விநாடியில் இருந்ததைவிட ஒவ்வொரு விநாடியும் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்து நாளுக்கு நாள் வெகுவாகச் சுருங்கத் தொடங்கி விடுகிறது. சில தினங்கள் கழித்து அந்தச் சுக உணர்வு முற்றிலும் இல்லாமல் போய்விடுகிறது. சுகத்தை வழங்கிய அதே கார், அதன் பராமரிப்பையும் பாதுகாப்பையும் குறித்த கவலையையும் ஏற்படுத்தலாம். இன்றும் வேறுவிதமான பிரச்னைகளையும் இழுத்து வரலாம்.
மனிதன் உலகில் ஆசை வயப்பட்டு ஈட்டுகின்ற ஒவ்வொரு பொருளுக்கும் தன்மை இதுதான்.
உலகியல் பொருள்களில் நிலைத்த சுகம் கிட்டுவதில்லை என்பதனாலோ, அவை புதுப் புதுப்பிரச்னைகளுக்கு வித்தாகும் என்பதனாலோ நீங்கள் அவற்றையெல்லாம் பெறாமல் இருக்க வேண்டும் என்று அர்த்தமில்லை. அவற்றைத் துறந்துவிட வேண்டுமென்று பொருளில்லை.
சுகம் வெளிப்பொருள்கள் எவற்றிலும் இல்லை. வெளிப் பொருள்களிலும், புற விஷயங்களிலும் சுகம் இருப்பதாக நினைத்துக்கொண்டு மனிதர்கள் அவற்றைப் பெறுவதற்காகப் போராடுகிறார்கள். உண்மையில் அந்தப் பொருள்களும் விஷயங்களும் மனிதர்களுக்குச் சுகத்தை வழங்குவதில்லை. அவை செய்வதெல்லாம் மனத்தைக் கொஞ்ச நேரத்திற்கு நிகழ்காலத்தில் நிறுத்தி வைப்பது மட்டுமே.
மனம் நிகழ்காலத்தில் நிலைபெறுவதன் மூலம் அது எவ்வளவு நேரத்திற்கு நிலைபெறுகிறதோ அவ்வளவு தோத்திற்குச் சுகம் கிடைக்கிறது. நித்தியமான நிலைத்த பரிபூரண சுகம் நிகழ்காலத்தில் மட்டுமே உள்ளது. அதுவே உண்மையான சுகம்.