
சிலர் எந்தக் கேள்வி கேட்டாலும் எதிர் கேள்வி கேட்க முடியாத அளவுக்கு ஒரே வார்த்தையில் பதில் சொல்லி வாயை அடைத்து விடுவார்கள். அதற்கு சாதுரியம் அவசியம். அதுபோல் ஒரு முறை கலையின் சிகரம் என்று பெர்னாட் ஷாவால் அழைக்கப்பட்ட டூமாஸ், கரிபால்டியின் நண்பனாகவும் திகழ்ந்தார். எழுத்தின் வழியாக பெரும் புகழையும், பெரும் பணத்தையும் சம்பாதித்து வைத்திருந்தார். டூ மாஸ் வாழ்ந்த ஆண்டுகள் 68 அதற்குள் அவர் எழுதிய நூல்கள் 1200. உலகிலேயே அதிக நூல்களை எழுதி குவித்தவன் என்ற சிறப்பு இன்று வரைக்கும் டூமாஸூக்கே உண்டு.
இப்பேர்ப்பட்டவரை எழுத்தாளர் நண்பர் ஒருவர் தான் எழுதிய நாடகம் ஒன்றிற்கு அழைத்துச் சென்றார். அவர் டூமாசிடமிருந்து எப்படியேனும் பாராட்டு பெற்றுவிட வேண்டும் என்னும் ஆவல் அதிகம் இருந்தது. இருவரும் நாடகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். நண்பர் டுமாஸின் அருகில் நகர்ந்து எப்படி இருக்கிறது நாடகம்? என்று கேட்டார். டூமாஸ் வாயைத் திறந்து பேசவில்லை. கைவிரலைத்தான் சுட்டிக்காட்டினார். அவர் காட்டிய இடத்தில் நாடகம் பார்க்க வந்த ஒருவன் குறட்டைவிட்டு உறங்கிக் கொண்டிருந்தான். நண்பருக்கு என்னவோபோல் ஆகிவிட்டது.
அடுத்தநாள் அவரை டூ மாஸ் தம்முடைய நாடகம் ஒன்றிற்கு அழைத்துச் சென்றார் .இருவரும் சுவையோடு பார்த்துக் கொண்டிருந்தபோது திடீரென்று நண்பர் "அதோ பார்த்தீர்களா? "என்றார். டூ மாஸ் திரும்பிப் பார்த்தார். ஒருவன் நன்கு உறங்கிக் கொண்டிருந்தான். " ப்பூ! இதற்குத்தானா? "அவன் நேற்று பார்த்த அதே தூங்கு மூஞ்சிதான். நேற்று பிடித்த உறக்கம் இன்னும் விடவில்லை என்றார் அமைதியாக. நண்பர் வாயைத் திறக்கவில்லை. பிரசன்ஸ் ஆப் மைண்ட் என்பது இதைத்தான்.
இப்படி டூ மாஸ் வாழ்வில் நடந்த நிகழ்வை வைத்து டூமாஸின் சாதுர்யத்தன்மையையும் அவரின் புத்திசாலித்தனத்தையும் மெச்சிக்கொள்ளலாம்.
என் தோழி ஒருவர் அப்படித்தான் வீட்டு வாசலில் அழகாக மிகப்பெரிய வண்ணக்கோலம் ஒன்றை போட்டு வைத்திருந்தார். அதை ஒவ்வொரு நாளும் வருவோரெல்லாம் பார்த்து புகழ்ந்து விட்டு சென்றார்கள். அவர் வீட்டிற்கு வந்த ஒரு தோழி அதை பார்த்துவிட்டு எதையும் சொல்லாமல் அவருடன் பேசிக் கொண்டிருந்தார். இதைக் கவனித்த என் தோழி கோலத்தைப் பற்றி ஏதும் சொல்லவில்லையே என்று கேட்டார்.
ஏற்கனவே சொல்லி ஆகிவிட்டது. ஒரு வாரமாக இந்த கோலத்தை பார்த்து வருகிறேன் என்றார். ஆதலால் ஒருவருக்கு நாம் ஏதாவது உணவுப் பொருள் கொடுத்தாலும், கலை, இலக்கியங்களில் தேர்ச்சி பெற்றிருந்தாலும், நம்முடைய படைப்புகள் அழகாகவும், அர்த்தமுள்ளதாகவும், விரும்பத்தக்கதாகவும் இருக்கும் பட்சத்தில், நாம் யாரிடமும் எதையும் அதைப் பற்றிக் கேட்க வேண்டிய தேவை இருக்காது.
அதற்கு உண்டான வெகுமதிகளை பார்த்த உடனேயே கூறிவிடுவார்கள். அதிலிருந்தே நாம் அதற்கு உரிய சிறப்புத்தன்மை என்னவென்று புரிந்துகொள்ளலாம். ஆதலால் நாமாக ஒருவரை வழிய சென்று நம்மை பற்றி கூறிக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.
அவர்களிடமிருந்து பாராட்டு பெறுவதற்காக முயற்சி எடுக்கப்பட வேண்டிய அவசியமும் இல்லை என்பதை இதிலிருந்து தெரிந்து கொள்ளலாம். அவர்களின் ஒற்றை வார்த்தையோ, செ(சை)ய்கையோ அதற்கான பதிலை கூறிவிடும் என்பதையும் புரிந்துகொள்ளலாம்.