பார்வைகள் பலவிதம்..!

There are many different views..!
Lifestyle articles
Published on

ந்த ஒரு விஷயத்தையும் பல கோணங்களில் இருந்தும், வேறுபட்ட பார்வைகளின் மூலமாகவும் அணுகுதல் வேண்டும். ஒரு விஷயத்தை பற்றிய நமது எண்ணங்களும், உணர்வுகளும் பிறருடைய எண்ணங்களுடனும், உணர்வுகளுடனும் ஒத்துப் போகாது. இதுவே பார்வைகள் பலவிதம் எனப்படும்.

ஒரு விஷயத்தை நாம் பார்ப்பதற்கும் மற்றவர்கள் பார்க்கும் கோணத்திற்கும் நிறைய வித்தியாசம் இருக்கும். நாம் பார்க்கும் கோணம்தான் சரி என்று வாதிட முடியாது. நம்மைப் பொறுத்தவரை சரியாக இருக்கலாம். மற்றவர்களுக்கு இது தவறான எண்ணமாகத் தோன்றலாம். ஒருவர் ஒரு விஷயத்தை நேர்மறையாக பார்த்தால் மற்றொருவர் அதை நேர்மறையாகதான் பார்க்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. எதிர்மறையாகவும் பார்க்கக்கூடும்.

நமக்குப் பிடித்த பொருளோ, விஷயமோ, செயலோ மற்றவர்களுக்கும் பிடிக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை. விருப்பு, வெறுப்பு, நல்லது, கெட்டது எல்லாம் அனைவருக்கும் ஒன்று போலவே இருப்பதில்லை. சிலர் மற்றவர்களுக்கு உதவி செய்வதாக நினைத்துக்கொண்டு தொந்தரவு செய்வார்கள். இவரைப் பொறுத்தவரை அது உதவியாக தோன்றும். ஆனால் எதிரில் இருப்பவருக்கோ தொந்தரவு தருவதாக இருக்கும்.

இவன் ஏன் நம் விஷயத்தில் தேவையில்லாமல் தலையிடுகிறான் என்று எண்ணத் தோன்றும். எனவே எதையும் நம் கோணத்தில் இருந்து அணுகாமல் அடுத்தவர் கோணத்திலிருந்து பார்த்து அவர்கள் எதிர்பார்ப்பதை செய்யும் மனப்பக்குவம் இருந்தால் போதும்.

இதையும் படியுங்கள்:
இப்படிப்பட்ட குணங்களுடைய பெண்களிடம் பழகுவது மிகவும் சிரமமானது!
There are many different views..!

ஒவ்வொருவரும் தனக்கே உரிய பார்வையில் தனக்குத் தெரிந்த புரிதல்கள் மூலமும், அனுபவங்கள் மூலமும் ஒரு விஷயத்தை அணுகுகிறார்கள். பறவைகள் பலவிதம் என்பதுபோல் மனிதர்களும் பலவிதம். மனிதர்களுடைய எண்ணங்களும், பார்வைகளும் பலவிதம். எனவே நாம் புரிந்து கொள்வதைப் போலவே மற்றவர்களும் புரிந்துகொள்ள வேண்டும் என்று நினைப்பது தவறு.

மற்றவர்களுடைய கருத்துக்களையும், உணர்ச்சிகளையும் மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும். ஒருவரை நம் பார்வை மூலம் அணுகாமல் அவர்களின் பார்வையில் புரிந்து கொள்ள முயல வேண்டும். பிறரையும் நம்மைப்போல் எண்ணி அனுதாப நோக்கத்துடன் புரிந்துகொள்ள முயல்வது வாழ்க்கையில் சிக்கலை ஏற்படுத்தாது. 

வாழ்க்கை மீது தெளிவான பார்வை வேண்டும். வாழ்வில் எதுவும் நிலை இல்லை என்பதை புரிந்துகொள்ள வேண்டும். வாழ்வில் எதிர்ப்படும் ஒவ்வொன்றும் அதன் தன்மையில் இருந்து மாறிக்கொண்டே இருக்கும் பொழுது நம் பார்வையும் குறுகி விடாமல் விரிந்து சென்று கொண்டே இருந்தால்தான் நல்லது.

மனிதனுக்கு மனிதன் காலத்திற்கு ஏற்றார் போல், இடத்திற்கு ஏற்றார் போல் பார்வைகளும் கருத்துக்களும் மாறிக்கொண்டே தான் இருக்கும். மாற்றம் ஒன்றே மாறாதது. எனவே நம் பார்வையையும் மாற்றிக் கொள்ள பழகவேண்டும். இதனை சுலபமாக புரிந்துகொள்ள ஒரு வழியுள்ளது. எப்படி? தண்ணீர் ஒன்றுதான்.

ஆனால் அது மழையாகவும், புயலாகவும், மலையிலிருந்து கொட்டும் பொழுது  அருவியாகவும், தேங்கி நிற்கும் பொழுது குளமாகவும், குட்டையாகவும் பார்க்கப்ப டுகிறதோ அதுபோல்தான்  மனிதர்களின் பார்வையும் ஒரே மாதிரி அமைந்து விடுவதில்லை. 

இதையும் படியுங்கள்:
பின்னடைவுகளில் இருந்து மீண்டு வர உதவும் 8 விஷயங்கள்!
There are many different views..!

எதையும் பார்க்கிற கண்ணோட்டத்தில்தான் இருக்கிறது. பக்தனுக்கு தெய்வமாகத் தெரியும் கற்சிலைதான் சிலருக்கு சிற்பமாகத் தெரிகிறது. சிலர் சின்ன விஷயத்தைக் கூட பூதாகரமாக நினைத்து பயப்படுவார்கள். வேறு சிலரோ இதெல்லாம் ஒரு விஷயமாக  என்று சாதாரணமாக எடுத்துக் கொள்வார்கள்.

இப்படி மாறுபட்ட சிந்தனையும் பார்வையும் இருப்பது சகஜம்தானே! பார்வைகள் பலவிதப்பட்டாலும் காலத்திற்கும் வாழ்நிலைக்கும் தகுந்த பார்வையை, கண்ணோட்டத்தை ஏற்று நடக்க வேண்டியது அவசியம்தானே!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com