
ஒரு பெரிய பிசினஸை இயக்குவதாக இருந்தாலும் சரி, அல்லது விற்பனைக் கலையை வெகு உயர்ந்த நிலையில் செயல்படுத்திக் காட்டிக் கொண்டிருந்தாலும் சரி, விஞ்ஞானமோ அல்லது நாட்டின் பாதுகாப்புத் துறையோ, அல்லது அரசு அலுவல்களோ, செயலில் இறங்கும் மனிதர்களே தேவைப்படுகிறார்கள்.
இவர் இந்த காரியத்தைச் செய்து முடிப்பாரா? செய்து முடித்த பின் தேவையான வகையில் தொடருவாரா? தனக்குதானே முனையும் பழக்கம் இவரிடம் இருக்கிறதா?' போன்ற கேள்விகள்தாம் முக்கியமான ஊழியர்களை அமர்த்தும் முன் முதலாளிகள் மனத்தில் எழும் கேள்விகள். இவரால் எதிர்பார்க்கப்படும் முடிவுகளைக் கொண்டுமுடியுமா அல்லது வெறும் பேச்சோடு நின்றுகொண்டு விடுவாரா?
இந்த கேள்விகள் எல்லாம் ஒரே குறிக்கோளைத் தான் எதிர்நோக்கி இருக்கின்றன. அதாவது சம்பந்தப்பட்ட நபர் தேர்ந்தெடுக்கப் படுவதற்கு முன் உண்மையிலேயே செயல்வீரரா அல்லது வெறும் சொல் வீரரா என்று அறியப்படுவதற்குத்தான்.
மிக அழகானதும் செயல்படுத்தப்படக் கூடியதுமான யோசனை செயலாற்றப் படாமல், இருப்பதைவிட ஏதோ ஒரு யோசனை அல்லது ஒரே ஒரு யோசனை மட்டும் முழுமையாக செயல் படுத்தப்பட்டு விட்டால் 100 சதவீதம் மேலாகும்.
ஒன்றைப் பற்றி சிந்திப்பதால் மட்டுமே அது நடந்து விடாது என்றார் தன்னைத்தானே முழுவதுமாக உருவாக்கி கொண்ட ஒரு வியாபாரி, ஜான் வான மேக்கர்.
அதைப் பற்றி சிந்தியுங்கள். நன்றாக சிந்தியுங்கள். இன்று உலகத்தில் நாம் கண்ணால் காணக்கிடைக்கும் மிக அரிய பொருட்கள் எல்லாமே, செயற்கைக் கோள்களிலிருந்து வெகு உயரமான கட்டடங்கள் வரை, யாவும் என்றைக்கோ, யாருக்கோ தோன்றிய யோசனையின் விளைவுதான்.
மிகச் சாதாரண அல்லது சராசரியான மனிதரிலிருந்து மாமேதை அல்லது மிகப் பெரிய வெற்றியாளர் வரை நீங்கள் பார்த்து அறியும்பொழுது, அவர்கள் இருவகைப்படுவார்கள் என்பதைப் பார்க்கலாம். வெற்றியாளர்கள் யாவருமே செயல் வீரர்கள் என்பதைக் கண்கூடாகப் பார்க்கலாம். அவர்களை நாம், 'செயல் வீரர்கள்' என்று அழைப்போம்.
சராசரியானவரோ அல்லது நடுத்தர வல்லமையே உடையவரோ அல்லது வெற்றி அடையாதவர் எல்லாம் மிக மிக கிளர்ச்சியே இல்லாத மனிதர்கள் ஆவர். அவர்களைத் தூண்டுவது மிகக் கடினம். அவர்கள் செயலில் இறங்கத் துணிச்சல் இல்லாதவர்கள். அவர்களை 'மந்தப் போக்கு மனிதர்கள்" என்போம்.
இரண்டு வகையினரையும் பார்த்து அறிந்தாலே, நமக்கு உண்மையான நிலை புரியும். செயல்வீரராகத் திகழ்பவர், செயலில் இறங்குபவர். உடனடியாக களத்தில் இறங்கி இயங்கும் போர் வீரரைப் போல இருப்பார் அவர். செய்ய வேண்டிய செயலைப் பற்றிய முடிவை எடுத்த அதே கணத்தில் விர்ரென்று அம்பு போலப்பாய்ந்து உடனுக்குடன் செயலில் இறங்குபவர் அவர். இல்லை,முடியாது போன்ற சொற்கள், பொதுவாக அவருடைய அகராதியில் இல்லை. தன்னால் நிச்சயம் முடியாது என்று அறியும்வரை, அவர் சளைப்பதில்லை. அல்லது காலம் மிகக் கடந்து விட்டது. இனி முடியாது எனும் வரை அவர் சளைப்பதில்லை.
ஒவ்வொருவரும் செயல்வீரராக இருக்க விரும்ப விரும்பும்போது இந்த துடிப்பை உங்கள் தனித்தன்மையின் ஒரு அங்கமாக்கிக் கொள்ளுங்கள். எங்கு மன உறுதிப்பாடு இருக்கிறதோ அங்கு நிச்சயமாக வழி பிறக்கும்.
செயலில் இறங்கி செயல்திறனை கூட்டி சாதனை அடையுங்கள்.