

நூறு ஆண்டு உயிர் வாழ்கின்றவர்களுள் நோய் நொடி இல்லாமல் வாழ்வதையும் பார்க்கிறோம். வேறு சிலர் இளமைப் பருவத்திலேயே நோய்ப் வாய்ப்பட்டு அல்லல்படுவதையும் காண்கிறோம்.
இதற்குக் காரணம் இயற்கையைச் சார்ந்த உணவுப் பழக்க வழக்கங்கள், போதுமான உடல் உழைப்பு, மாசுபடாத சுற்றுச் சூழ்நிலை, ஆக்கப்பூர்வமான சித்தனை ஆகியவற்றைக் கொண்டவர்களை நோய்கள் அணுகுவதில்லை. நோய்த் தடுப்புச் சக்தி இவர்களின் உடலில் மிகுந்த வீரியத்துடன் செயல்படுவதால், நோய்களின் பாதிப்புகளுக்கு இவர்கள் அதிகமாக ஆளாவதில்லை.
வயதைப் பற்றியும் தனக்குள்ள நோய்களைப் பற்றியும் ஒருவர் எப்போதும் எண்ணிக் கொண்டிருப்பதை முதலில் தவிர்க்க வேண்டும். வாழ்க்கையில் நாம் பெற்றிருக்கும் ஒவ்வொரு நிமிடத்தையும் மகிழ்ச்சியாகப் பயன்படுத்தக் கற்றுக்கொள்வது அவசியம்.
மனத்தை நிறைவாக வைக்க இயற்கையோடு ஒன்றிக் கலந்து விடுங்கள். சோர்வு தோன்றினால் அதைப் பொருட்படுத்தாமல் சுறுசுறுப்பாக இயற்கைச் சூழ்நிலைகள் நிறைந்த இடங்களில் உலாவச் செல்லுங்கள்.
தாவரங்களும், பிராணிகளும் சீக்கிரமே முதுமை அடையலாம். ஏனெனில் சிந்திக்கின்ற சக்தி அவற்றுக்கு கிடையாது. நிர்ணயிக்கப்பட்ட கால வரம்புக்குள் அவை வாழ்ந்து மடிகின்றன.
மனிதர்களின் கதை வேறு. சிந்திக்கத் தெரிந்தவன் மனிதன். விரும்புகின்ற எண்ணங்களை அவனால் தோற்றுவித்துக்கொள்ள முடியும். இயற்கை அவனுக்கு அந்த வாய்ப்பினை அளித்திருக்கிறது. அதை அவன் முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
இளமையாக இருக்க விரும்புகிறேன் என்று மிருகங்களால் எண்ண முடியாது. ஆகவே கால நியதிப்படி அவை வாழ்ந்து மடிகின்றன. ஆனால் மனிதன் எதையும் எண்ண முடியும். எண்ணத்தின்படியே வாழவும் முடியும்.
இந்த அருமையான வாய்ப்பினை மனிதர்களாகிய நாம் எதற்காக இழக்க வேண்டும். எண்ணங்களை இளமையாக வைத்திருங்கள். அதுஉங்களுடைய இளமையைப் பாதுகாக்கும். இயற்கை அளித்துள்ள இந்த வரப்பிரசாதத்தை மனிதன் முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டால் என்றும் இளமையுணர்ச்சியுடன் வாழ்ந்து அரிய சாதனைகளைப் புரியலாம்.
இராஜாஜி, பெரியார், பெர்னாட்ஷா போன்றவர்கள் தொண்ணூறு வயதைத் தாண்டிய நிலையிலும் உற்சாகமாகச் செயல்பட்டுக் கொண்டு இருந்தார்கள். தங்களுடைய எண்ணங்களைச் சுறுசுறுப்பாக அவர்கள் வைத்திருந்ததே இதற்குக் காரணம்.
இளமையுணர்வும், சுறுசுறுப்பும் உள்ள உடலை நோய்கள் அணுகு வதில்லை. மனம் சந்தோஷமாகவும், இளமையுணர்ச்சியுடனும் இருக்கிற போது உடலின் செல்கள் ஆரோக்கியம் பெறுகின்றன. உடலிலுள்ள நோய்த் தடுப்புச் சக்தி அதிகமாகிறது. இதனால் நோய்களைப் பற்றிய அச்சமின்றி வாழ முடிகிறது.
ஆரோக்கிய வாழ்க்கை பற்றி அறிய வேண்டிய இரகசியம் என்று எதுவுமில்லை. இயற்கையான வாழ்க்கை வாழக்கற்றுக் கொண்டால் போதும். செயற்கைச் சூழ்நிலைகளுக்கு மத்தியிலும், எந்த அளவுக்கு இயற்கையாக வாழ முடியுமோ அந்த அளவுக்கு இயற்கையாக வாழக் கற்றுக்கொள்ள வேண்டும். ஆரோக்கியத்தின் திறவுகோல் நமக்கு வெளியில் இல்லை. நமக்குள்ளேயேதான் இருக்கிறது.
நம்முடைய ஞானிகளும், சித்தர்களும் பல்லாண்டுகள் ஆரோக்கிய வாழ்க்கை வாழ்ந்து, அவர்களாகவே சமாதி நிலையினை அடைந்தார்கள் என்று படிக்கின்றபோது வியப்பில் ஆழ்ந்து போகிறோம்.
ஆனால், அவர்கள் வாழ்ந்த வாழ்க்கையினை ஆராய்ந்து இது அவர்களுக்கு எப்படிச் சாத்தியமாயிற்று என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
இயற்கையோடு இணைந்து வாழ்ந்தார்கள். இயற்கையில் இன்பம் கண்டார்கள். தம் மனத்தை எப்போதும் மகிழ்ச்சியின் இருப்பிடமாக மாற்றிக் கொண்டார்கள் அதனால் நீண்ட ஆயுளும் இளமையும் பெற்றிருந்தார்கள்.