
இன்றைய இனிய பொழுது திருவருளால் கொடுக்கப்பட்ட தித்திக்கும் திருநாள்தான். வாழ்வில் ஒவ்வொரு நாளும் திருநாள்தான். இந்த நாளை பயன்படுத்துகின்றவனது திறமையையும், எண்ணங்களையும் பொறுத்து அமைவதே சுகமும் சோகமும்.
காலச்சக்கரம் மிக வேகமாகச் சுற்றக் கூடியது. இருபத்து நான்கு மணித்துளிகள் எவ்வளவு வேகமாக கடந்து செல்கிறது என்பது சோம்பேறிகளுக்குத் தெரியாமல் இருப்பது விந்தையல்ல. சுறுசுறுப்பான செயல்வீரர்கள் "காலம் போதவில்லையே" என புலம்புகின்ற புலம்பலே அவர்களது வெற்றியின் முதற்படி.
தள்ளிப்போடுவதும், ஒத்திப்போடுவதும் நமது முயற்சிக்கு நாமே தடைக்கற்களை வைத்துத் தடுப்பதாகும்.
சின்னஞ்சிறு மழலையைப் பாருங்கள். அந்தப் பிஞ்சு என்றைக்காவது நேற்று விளையாடியபோது காலில் பட்ட காயத்தைக் கண்டு கண் கசிவை நிலையாக ஆக்கிக் கொண்டதா? இல்லை நாளைக்கு வாங்கிக் கொடுப்பதாகச் தாய் சொன்ன தலையாட்டிப் பொம்மையை நினைத்து மகிழ்ந்ததுண்டா? இல்லையே! மாறாக இன்றைக்குத் தன் கையில் உள்ள ரப்பர் பந்தை வீசியெறிந்து ஓடி விளையாடவில்லையா?
இந்தப் பக்குவத்தை நாம் வயது வந்த பிறகும் வளர்த்து தக்க வைத்துக்கொண்டால் நமது எண்ணங்கள் இன்றைய பொழுதைவிட்டு "படிதாண்டாது".
உங்களது எண்ணங்கள் நாளைய நிகழ்வுகளுக்கு தாவாமல் இருக்க இதோ ஒரு சூட்சுமக் கயிறு.
உங்கள் படுக்கை அறையின் சுவரிலோ முகம் பார்க்கும் கண்ணாடியிலோ நீங்கள் அதிகாலை கண் விழித்தவுடன் தெரியும் வண்ணம் கீழ்க்கண்டவாறு பெரிதாக ஒரு வண்ண அட்டையில் எழுதி ஒட்டி வையுங்கள்.
"இன்றைய நாள் எனக்காக இறைவனால் வழங்கப்பட்ட திருநாள். நல்லவைகளையே செய்வேன். நல்லறங்களுக்கே துணையாவேன். மகிழ்வும் மகிழ்ச்சியும் எனக்குச் சொந்தம்."
மேலை நாட்டுத் தத்துவஞானி ஜான் ரஸ்கின் தனது மேஜை மேலே ஒரு சிறிய கல்லில் ஒரே ஒரு சொல்லை செதுக்கி வைத்திருந்தான். அந்த வார்த்தைதான் அவனை உலகிற்கு அடையாளம் காட்டியதாகத் தனது சுயசரிதத்திலே குறித்துப்போனான். அந்த மந்திரச் சொல்தான் "Today" என்பதாகும்.
"நன்றே செய்க அதுவும் இன்றே செய்க" என்றுதானே நமது தமிழும் சொல்லிக் காட்டுகிறது.
எதிர்கால நம்பிக்கையை நாம் கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருக்கின்ற வரை இன்றைய பொழுதில் நமது கண் உறங்கப் போவதில்லை என்று சத்தியம் செய்துகொண்டால் இன்றைய வாழ்வு தேனாக இனித்திருக்கும்.
நம் வாழ்வை வளமாக்கிட வைக்காது தடையாக இருக்கின்ற சுமைகளை, துன்பங்களை வேரறுத்து வெட்டி வீழ்த்திட நாம் செய்ய வேண்டிய, முதற்படி என்ன என்பதைச் சிந்திப்போம்.
நேற்றும் நாளையும் நம் நினைவுக்கு வராது தொலைந்தே போகட்டும். இன்றையப் பொழுதை வணங்கி வரவேற்றுச் செயல்படுங்கள். சுகம் உங்களைத் தேடிவந்து சொகுசாக வாழவைக்கும்.