
காட்டில் உள்ள மரங்களை வெட்டி அந்த விறகுகளை விற்று அதன் மூலம் வாழ்ந்து கொண்டிருந்தார்கள் இரண்டு விறகு வெட்டிகள்.
அதில் ஒருவன் முதல்தாள் 5 மணி நேரம் உழைத்தார், 100 கிலோ மாங்களை வெட்டினார். இரண்டாவது நாள் அதேபோல் 8 மணிநேரம் உழைத்த பின்பும் அவரால் 90 கிலோ மரங்களைத்தான் வெட்ட முடிந்தது. மூன்றாம் நாள் 8 மணி நேர உழைப்பில் 75 கிலோ அளவுக்குத்தான் விறகுளை வெட்ட முடிந்தது. நாளுக்குநாள் அவனது உழைப்பின் திறன் குறைந்தது.
ஆனால் அதேவேளையில் இன்னொரு விறகு வெட்டி முதல்நாள் 8 மணி நேரத்தில் 100 கிலோ வெட்டினார். இரண்டாவது நான் 110 கிலோ மரங்களை அவரால் வெட்ட முடிந்தது. மூன்றாம் நாளில் 120 கிலோ எடை அளவுக்கு விறகுகளை வெட்டினார்.
விறகு வெட்டும் தொழில் செய்யும் அந்த இருவரும் ஒரே வயதுடையவர்களாக இருந்தாலும் அவர்களது உழைக்கும் திறனில் மாற்றம் இருப்பதைக் கவனித்தார் ஒருவர்.
முதல் விறகு வெட்டியிடம் சென்று, "நீங்கள் இரண்டுபேரும் ஒரே மாதிரிதான் வேலை செய்கிறீர்கள். ஆனால், உம்மைவிட உமது நண்பர் அதிகமாக விறகுகளை வெட்டுகிறாரே. அது ஏன்? எப்படி?" என்று கேட்டார்.
விறகு வெட்டிக்கு காரணம் புரியவில்லை. "இது ஏன்? என்றே எனக்குப் புரியவில்லை, என்னால் முடிந்த மட்டும் உழைக்கிறேன். அவரைவிட என்னால் அதிகமாக விறகுகளை வெட்ட முடியவில்லை. இது என் தலைவிதி" என்றார்.
இதே கேள்வியை அடுத்த விறகு வெட்டியிடம் அந்த நபர் கேட்டார்.
நான் விறகு வெட்டும்போது விறகுகளை தொடர்ந்து வெட்டுவதில்லை. இடையிடையே ஒய்வெடுத்துக் கொள்கிறேன். அந்த ஓய்வு நேரத்தில் எனது கோடாரியை நான் கூர்மையாகத் தீட்டுவதற்கு நேரத்தை செலவு செய்கிறேன். அடிக்கடி தீட்டப்பட்ட கோடரியைக் கொண்டு வேலை செய்வதால் மரம் வெட்டும் வேலை எனக்கு எளிதாகிப்போய்விடுகிறது. இதனால், மிக அதிக அளவு மரத்தை என்னால் வெட்ட முடிகிறது" என்று சொன்னார்.
"இந்த விறகு வெட்டிகளின் செயல்முறை வாழ்க்கை இன்றைய இளைஞர்களுக்குப் பாடமாக அமையவேண்டும். இருவரும் ஒரே அளவில் உழைத்தாலும், 'முறைப்படுத்தப்பட்ட உழைப்பு' என்பதுதான் வெற்றியைத் தருகிறது" என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
உழைக்கும்போதே ஓய்வெடுக்கவும், அவ்வப்போது கோடாரியைத் தீட்டவும் அந்த விறகு வெட்டி முயற்சி செய்ததைப்போல, பாடங்களைப் படிக்கும்போதும் முறைப்படி அறிவை வளர்க்கும் செயல்களில் ஈடுபட வேண்டும்.
வெறும் பாடப்புத்தகங்களை மட்டும் படித்து தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறுவது சிறந்த உழைப்பைக் குறிக்கும். ஆனால், அதேவேளையில் பாடப்புத்தகங்களோடு சேர்த்துப் பொது அறிவை வளர்க்கும் புத்தகங்களையும், வாழக்கைக்குத் தேவையான தன்னம்பிக்கையை வளர்க்கும் இதழ்களையும், நூல்களையும் முறைப்படி படித்து, கோடாரியைத் தீட்டுவதைப்போல அறிவை தீட்டுவதிலும் அக்கறைக்கொண்டால் வாழ்க்கையில் வெற்றி பெறுவது எளிதாக மாறும்.
"நாள் முழுவதும் படித்தப் பின்பும் என்னால் அதிக மதிப்பெண்கள் பெற முடியவில்லையே" என்று வருத்தப்படுபவர்கள், படிக்கும் வழக்கத்தை முறைப்படுத்தவும், நினைவாற்றலை நெறிப்படுத்தவும் பழகிக்கொள்ள வேண்டும்.
தேவையான அளவுக்கு ஓய்வெடுக்கவும், அந்த ஓய்வு நேரத்திலும் அறிவினை அகலப்படுத்தவும், சிந்தனையை ஆழப்படுத்தவும் பழகிக்கொள்பவர்கள் மட்டுமே வெற்றியை எளிதில் பெற்றுவிடுகிறார்கள்.