பணத்தை பெருகச் செய்யணுமா? இதோ சில அதிரடி டிப்ஸ்!
பணம் குட்டி போடுமா? அப்படின்னு கேள்வி கேட்டா, அது நிச்சயமா குட்டி போடும். இன்றைய ஒரு ரூபாய்தான் நாளைய ஒரு லட்ச ரூபாய். பணத்தை சரியான விதத்தில் முதலீடு செய்வதன் மூலம் மிகப்பெரிய வருமானம் பெறமுடியும். உலகில் உள்ள பெரிய பணக்காரர்ககள் எல்லாருமே தங்களது வியாபாரத்தை மிகவும் சொற்பமான ரூபாயில் இருந்துதான் துவங்கியுள்ளனர். ஆனால், எல்லாருமே வியாபாரத்தில் முதலீடு செய்வது சரியானதாக இருக்காது.
அனுபவம் உள்ளவர்களும், வியாபாரத்தில் தங்களால் நிச்சயம் ஜெயிக்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளவர்கள் மட்டுமே அதில் இறங்க முடியும். பொதுவாக பலரும் தங்களது பாதுகாப்பு பகுதியை (Safe zone) விட்டு வெளியேவர யோசிப்பார்கள். அவர்கள் முதலீடுகளை எல்லாம் பலரைப்போல நிலங்களிலோ, தங்கத்திலோ, இன்சூரன்ஸ் அல்லது மியூச்சுவல் ஃபண்ட் போன்றவற்றில் முதலீடு செய்து இருப்பார்கள். பெரும்பாலான மக்களுக்கான பணத்தை மூலதனம் செய்து, பணம் சம்பாதிக்கும் அல்லது பணத்தை சேமிக்கும் வழியினை இங்கு பார்ப்போம்.
ரியல் எஸ்டேட்:
முதலீடு என்ற முடிவுக்கு வந்துவிட்டால், பலரும் முதல் தேர்வாக பெருநகரங்களில் அப்பார்ட்மெண்ட்களில் வீடு வாங்குவதை முதன்மையான நோக்கமாக வைத்திருக்கின்றனர். ஆனால், இது லாபகரமாக இருக்காது. நீங்கள் ₹50 லட்சத்தில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பை வாங்கினால் 10 வருடங்கள் கழித்து அந்த வீட்டின் மதிப்பு ₹40 லட்சமாக குறைந்து இருக்கும். அந்த குடியிருப்பை 10 வருடங்கள் நீங்கள் வாடகைக்கு விட்டிருந்தாலும் வெறும் ₹10 லட்சம் மட்டும்தான் உங்களுக்கு வருமானமாக அதிலிருந்து கிடைத்திருக்கும்.
வீட்டின் மதிப்பு ₹40 லட்சம், 10 வருடம் வாடகை ₹10 லட்சம் என சரியாக இருக்கிறது என்று நாம் நினைக்க முடியாது. காரணம் 10 வருடங்களில் ₹50 லட்சத்தில் மதிப்பு பண வீக்கத்தின்படி ₹95 இலட்சமாக இருக்கும். ₹45 லட்ச லாபத்தை அந்த நபர் இழக்கிறார். இதே நீங்கள் நரகத்தில் தனி வீடாக ₹50 லட்ச ரூபாய்க்கு வாங்கி இருந்தால் 10 வருடங்கள் கழித்து அந்த வீட்டின் மதிப்பு குறைந்து இருந்தாலும் அந்த இடத்தின் மதிப்பு மிகவும் அதிகமாக இருக்கும். அது போல காலி மனைகளும் விவசாய நிலங்களும் முதலீடு செய்ய ஏற்றவை.
தங்கம்:
முதலீட்டுக்கு சிறந்த தேர்வாக இருப்பது தங்கம் வாங்குவதுதான். தங்கத்தை நகையாக வாங்காமல் காசுகளாகவும் பிஸ்கட்களாகவும் வாங்கி வைப்பது சிறந்ததாக இருக்கும். ஏனெனில் நகைகளாக தங்கம் வாங்கும்போது செய்கூலி, சேதாரம் என்று 10% அதிகப்படியான விலைக்கு தங்கத்தை தலையில் கட்டி விடுவார்கள். அதையே தங்ககாசும், பிஸ்கட்டும் வாங்கினால் அதற்கு செய்கூலி, சேதாரம் போட முடியாது. ஒரு நகையை வாங்கிய ஒரு மாதத்தில் விற்றால், தங்கத்தின் விலை அதிகரித்து இருந்தாலும் செய்கூலி சேதாரம் உங்களுக்கு நஷ்டமாகவே இருக்கும். ஆனால் தங்ககாசை பிஸ்கட்டை விற்கும் போது லாபமாக மட்டுமே இருக்கும்.
இன்சூரன்ஸ் மற்றும் நிரந்தர வைப்பு தொகை:
இன்சூரன்ஸ் மூலம் வருமானம் பெற விரும்பினால் பாரம்பரிய திட்டங்களை மட்டுமே தேர்வு செய்யவும். பங்கு சந்தையை முக்கியமாக மையப்படுத்திய இன்சுரன்ஸ்கள் சில நேரம் நஷ்டத்தை தரக் கூடும். இன்சூரன்ஸ் மூலம் வருமானம் பெறுவதை விட நிரந்தர வைப்பு நிதியின் மூலம் வருமானம் பெறுவது மிகவும் சிறந்தது என்பதை விட எப்போதும் பாதுகாப்பானது.10 வருடங்கள் இன்சூரன்ஸ் கட்டினால் 12 வது வருடத்தில் இருந்து ஆண்டுக்கு ₹85000-95000 வருமானம் கிடைக்கும், கட்டிய தொகை ₹11 லட்சமாக ஆக மட்டுமே இருக்கும். இதே பணத்தை வைப்பு நிதியாக வைத்தால் 10 வருடங்கள் கழித்து ஆண்டுக்கு வட்டி ₹1,23,500 கிடைக்கும், அதே நேரம் அசல் தொகை ₹19 லட்சத்தில் இருக்கும்.
மெடிக்கல் இன்சூரன்ஸ்:
பெரும்பாலான மக்கள் கடனாளி ஆகுவது திடீரென்று வரும் மருத்துவ செலவினத்தில்தான். மருத்துவத்திற்காக தனியாக 50 லட்சம் வரை சேமித்து வைப்பது புத்திசாலித்தனம் அல்ல. அதற்கு பதில் வருடத்திற்கு 50,000 ரூபாய் செலவு செய்து மெடிக்கல் இன்சூரன்ஸ் போடுவது, பணத்தை பெருமளவில் மிச்சப்படுத்தும் நல்ல தேர்வாக இருக்கும். எதிர்காலத்தில் நீங்கள் கடனாளியாகாமல் இது பார்த்துக்கொள்ளும்.
வாகனங்களில் முதலீடு:
வாகனங்களில் முதலீடு செய்வது எப்படி லாபமாக இருக்கும் என்று யோசிக்கலாம்? நீங்கள் 10 லட்ச ரூபாய்க்கு புதிய கார் வாங்குகிறீர்கள் என்றால், அடுத்த 5 வருடத்திற்கு கார் பெரிதாக எந்த ஒரு செலவும் வைக்காது. 5 வருடங்கள் கழித்து அந்த காரை நீங்கள் 7 லட்சம் ரூபாய் வரையில் விற்க முடியும். இதே நீங்கள் பழைய காரை வைத்திருந்தால் 5 வருடங்களில் அது மெயின்டனன்ஸ் செலவாக 2-3 லட்சங்கள் வரை செலவை கொண்டு சென்று இருக்கும். இந்த வகையில் புதிய கார் உங்களுக்கு லாபமாக இருக்கும். அதே நேரத்தில் 5 வருடங்களுக்கு ஒருமுறை காரை மாற்றுவதும், செலவு இல்லாமல் காரை வைத்திருக்கும் நல்ல யோசனையாக இருக்கும்.