

ஆமாங்க! எதையாவது நாம் நம்முடைய மனதில் அப்படியே நினைத்துக் கொள்கிறோம், இல்லையென்றால் ஏதாவது ஒரு பழக்கத்துக்கு அடிமையாகிறோம்.. அதிலிருந்து வெளியே வருவதற்கு நாம் கொஞ்சம் கூட முயற்சி செய்வதே இல்லை. நினைத்த காரியத்தை நடத்தியே தீரவேண்டும், இல்லை என்றால், நினைத்ததை அடைந்தே தீரவேண்டும் என்று ஒரு பக்கம் சில பேர் அடம் பிடித்துக் கொண்டிருப்பார்கள்.
இன்னொரு பக்கம் வேண்டாத பழக்கத்திற்கு அடிமையாகி அதிலிருந்து வெளியே வருவதற்கு கொஞ்சம் கூட முயற்சி செய்யாமல் இருப்பார்கள். ஆனால் நாம் செய்யும் குற்றத்திற்கு அடுத்தவர்கள் கடவுளின் மேல் பழியை போடுவார்கள். கடவுளே... என் புள்ளைக்கு இந்த மாதிரி பழக்கத்தை ஏன் கொடுத்த?!! நீதான் அவனுக்கு அறிவு கொடுத்து புத்தியை மாத்தணும்.. அவன் இந்த கெட்ட பழக்கத்தை விடவேண்டும்... என்று புலம்பி தள்ளுவார்கள்.
கடவுளா, அவனை குடி என்று கூறினார். கடவுளா அவனை சிகரெட் பிடி என்று கூறினார். கடவுளா பிடிவாதமாக இருக்க சொன்னார்.. எல்லாவற்றையும் நாமே செய்துவிட்டு பிடிவாதமாகவும் இருந்து கொண்டு கடவுளை குற்றம் சொல்வதில் எந்தவிதத்தில் நியாயமாகும்.. யோசித்து பாருங்கள்.
ஒன்று தெரியுமா உங்களுக்கு? பொதுவாக எந்த வழக்கமாக இருந்தாலும் சரி நல்ல வழக்கமாக இருந்தாலும் சரி, கெட்ட வழக்கமாக இருந்தாலும் சரி, நம் உடலுக்குள் அது பிடித்துக் கொள்ள சரியாக 21 நாட்கள் எடுக்கும். ஆனால் நல்லதை விரைவிலேயே விட்டுவிடுவோம் கெட்டதை மட்டும் அட்டை போல் ஒட்டிக் கொண்டிருக்கும்.
அதேபோல பிடிவாதமும் அப்படித்தான் அந்த நேரத்தில் நினைத்தால் அது வேண்டுமென்றால் வேண்டும். நான் அவனை/அவளைத்தான் திருமணம் செய்து கொள்வேன் என்று ஒரு சில வீட்டில் பிள்ளைகளும், இல்லை நான் சொல்கிற நபரை தான் நீ கட்டி கொள்ள வேண்டும் என்று பெற்றோர்களும் போட்டி போட்டு கொண்டு இருப்பார்கள். விளைவு இரு பக்கத்தினருக்கும் நிம்மதி இல்லாமல் போய்விடும்.
கடவுள் நம்மை படைக்கும்போது நல்ல புத்தியோடு தானே படைத்தார். நல்ல மனதோடுதானே படைத்தார்.
நாமே எதையாவது ஒன்றை உருவாக்கி கொள்கிறோம். அதனோடு இணைந்து வாழ்க்கையை வாழ்கிறோம். நன்றாக இருந்தால் பரவாயில்லை. ஆனால் எதாவது பிரச்னை வந்து விட்டால், கடவுளின் மண்டையை உருட்டுகிறோம். இதுக்கெல்லாம் காரணம் நம்ம மனசுதான். ஒரு பழக்கத்திற்கு அடிமையான பிறகு அது தவறான பழக்கம் என்று தெரிந்த பிறகும் விடுவதற்கான எண்ணம் நம் மனதிலிருந்து வருவது கிடையாது. வீண் பிடிவாதத்தால் வாழ்க்கையே அழிந்தாலும் பரவாயில்லை என்று இறுமாப்போடும் நிறைய பேர் இருக்கிறார்கள்.
இதில் தவறு யாருடையது? நம்முடையதுதானே? நம் மனதில்தானே குற்றம் இருக்கிறது. நம்முடைய மனதை ஒருநிலைபடுத்தி கட்டுக்குள் வைத்துகொண்டால் ஒரு பிரச்னையும் வராது. அதை விட்டுவிட்டு நினைத்ததை மறக்க முடியவில்லை, பழைய நினைவுகளை மறக்க முடியவில்லை, பழக்கத்தை விட முடியவில்லை என்று சொல்லிக் கொண்டும், இனி கடவுள் மனம் வைத்தால் தான் திருந்த முடியும் என்று சொல்லிக் கொண்டும் திரிவதால் ஒரு லாபமுமில்லை.
நம்முடைய மனதை நாம்தான் மாற்றிக்கொள்ள வேண்டும். நினைத்தது சரி இல்லை எனில் மறந்துவிட வேண்டும். நினைக்க தெரிந்த மனதிற்கு நாம்தான் மறக்கவும் கற்றுத்தர வேண்டும்.