

இன்றைக்குக் கோவில்களுக்குச் செல்பவர்கள் யாரும் பக்தியால் ஈர்க்கப்பட்டுப் போவதை விட அச்சத்தாலும், ஆசையாலும் அங்கு போகிறார்கள். கோவில் என்ற அமைப்பிற்குப் பின்னால் இருக்கும் விஞ்ஞானம் வேறு. இப்போது நீங்கள் வாழும் உலகைப் புரிந்து கொள்வதற்கும் பயன்படுவது உங்களுடைய ஐம்புலன்கள். வானம், சூரியன், நட்சத்திரம் போன்றவை நம் கவனத்தை ஈர்க்கின்றன. வடிவங்களால் வரையறுக்கப்படாத வெறுமையில் ஒரு ஆனந்தம் இருக்கிறது.
அதை நீங்கள் உணர்ந்துகொள்ள அமைக்கப்பட்டதுதான் கோவில்கள். ஐம்புலன்களின் விஞ்ஞானத்தை வைத்துக்கொண்டு பிரபஞ்சத்தையே புரிந்துகொண்டு விட்டதாக நினைப்பது எப்படி இருக்கிறது தெரியுமா?
ஜென் குரு ஒருவரிடம் குரங்கு வந்து தன்னை சீடனாக ஏற்குமாறு கூறியது. அது அவரிடம் "மற்றவர்களிடம் இல்லாத திறமை எனக்குண்டு. ஒரே தாவலில் 800 மரங்களைக் கடந்து விடுவேன்" என்றது. குரங்கிடம் ஒரு கத்தியைக் கொடுத்தார் குரு. பிறகு அதனிடம் "இன்று உன்னால் எத்தனை தூரம் போக முடியுமோ போ. அங்கே இந்தக் கத்தியால் ஒரு அடையாளத்தை ஏற்படுத்திவிட்டு வா. அதற்ப்பிறகு நான் சொல்கிறேன்" என்றார்.
முட்டாள்தனமான பந்தயம் என நினைத்து குரங்கு ஜென் குருவை அசத்த முடிவு செய்தது. வழக்கத்தைவிட கூடுதல் வேகத்துடன் தாவிச் சென்றது. அங்கு ஒரு மரத்தில் கத்தியால் அடையாளத்தை ஏற்படுத்திவிட்டு வந்தது. திரும்பி வந்து குருவிடம் "நான் அடையாளம் செய்த மரத்தை பார்க்க வேண்டுமானால் நீங்கள் சில மாதங்களாகும் பயணம் செய்யவேண்டும்" என்றது. அவசியமில்லை என்று புன்னகைத்த குரு தான் அமர்ந்திருந்த மரப்பலகையைக் காட்டினார். அதில் குரங்கு ஏற்படுத்திய அந்த அடையாளம் இருந்தது. பிரபஞ்சத்தின் பிரம்மாண்டத்தில் மனிதன் பயணம் செய்திருப்பதும் இவ்வளவுதான்.
இன்னும் சொல்லப்போனால் சூன்யத்தின் மீது ஒரு பரந்த ஜமுக்காளம் விரிக்கப்பட்டிருக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் அந்த ஜமுக்காளத்தின் மீதுதான் இயங்குகிறீர்கள். சக்தி நிலையில் மேம்பட்டவர்களால் விஞ்ஞானபூர்வமாக இந்த ஜமுக்காளத்தில் அமைக்கப்பட்ட துளைகள்தான் கோவில்கள். அந்தத் துளைகள் வழியே விழுந்தால் மறுபுறம் வெறுமையான சூன்யத்தை கண்டு கொள்வீர்கள். ஆதியில் பல்லாயிரக்கணக்கான கோவில்கள் அமைந்திருத்தன.
காலப்போக்கில் மனிதன் ஆர்வம் மாறியது. இறுதியில் கிடைக்கும் முக்தியை விட அவனுக்குப் பல்வேறு உடனடித் தேவைகள் முக்கியமானது. அந்தத் தேவைகளுக்கைற்ப வலிமைக்கு ஒரு தெய்வம், செல்வத்திற்கு ஒன்று, கல்விக்கு, பாதுகாப்புக்கு என்று வெவ்வேறு ஆலயங்கள் எழுப்பப்பட்டன.
இன்று ஆலயங்களுக்குச் செல்லும் பெரும்பாலானவர்கள் அதன் சக்தியை உணர்ந்து கொள்ளும் தன்மையற்றவர் களாக இருக்கிறார்கள். எது சக்தி வாய்ந்தது, எது சாதாரணம் என்று பகுத்தறிய முடியாது. மாபெரும் யோகிகளால் நிர்மாணிக்கப்பட்ட பல ஆலயங்கள் கவனிப்பாரற்று சிதறிக்கிடப்பது உணரப்படாததால்தான். உங்களை உணர்ச்சிவசப்படச் செய்யும் கோவில்கள் விரும்பப்படுகின்றன.
எந்த கோவில் சிறப்பாக விளம்பரப்படுத்தப்படுகிறதோ அது பிரபலமாகி இருந்தால் மட்டும் ஒரு கோவில் சக்திவாய்ந்ததாகாது. படைப்பில் நீங்கள் காணும் அத்தனையும் சூன்யத்திலிருந்து வெடித்தும் புறப்பட்டவைதான் என்று விஞ்ஞான ஆராய்ச்சி கூறுகிறது.
ஒன்றுமில்லாததிலிருந்து உருவானது. அதே ஒன்றுமில்லாததில் முடிவில் கரைந்துவிடுகின்றன என்பதைப் புரிந்துகொள்ள அமைக்கப்பட்டவையே உண்மையான ஆலயங்கள்.