

மனிதர்கள் அனைவரும் மகிழ்ச்சியாக வாழவேண்டும் என்று நினைப்பது அறிந்ததே. வாழ்க்கையில் அப்படி நிகழும் மகிழ்ச்சியான தருணங்கள் நமக்கு கிடைத்தால், பொக்கிஷமாக கருதுவோம். அதனை அனுபவித்து வாழக் கற்றுக் கொண்டால், மனமும் உள்ளமும் பண்படும்.
வாழ்க்கையில் மகிழ்ச்சியைத்தேடி யாவரும் வெளியே அலைந்து திரிந்து கடைசியில் விரக்தியில் மனம் ஒடிந்து போயி விடுகிறார்கள். பொதுவாக மனிதர்கள் பணம், பதவி மற்றும் பட்டம் இப்படி பலதரப்பட்டவற்றில் மகிழ்ச்சியைத்தேடி அலைகிறார்கள்.
இன்னும் சொல்லப்போனால் இதில் கிடைத்துவிட்டதா அதில் கிடைத்துவிடாதா என்ற ஏக்கத்தோடும் ஆதங்கத்தோடும் எங்கெங்கோ தேடி அலைகிறோம். இது ரொம்பவும் தவறான அணுகுமுறை. முதலில் வெளியில் வாங்கும் பொருள் அதுவல்ல என்பதை உணர்வோம்.
மகிழ்ச்சி என்பது வேறு எங்கும் இல்லை என்பதை புரிந்து கொள்வோம். அது நம்முடைய எண்ணங்களிலும், செயல்பாடுகளிலும் இரண்டறக் கலந்து இருக்கிறது என்பதே உண்மை. அதை நாம் முறையாக பயன்படுத்துகிறோமா என்பது தான் யாருக்கும் புரியவில்லை.
ஒவ்வொருவரும் மகிழ்ச்சியோடு வாழ, முதலில் 'போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து' என்ற பழமொழியை உள்வாங்கி, மனம் திருப்தி அடையும் எந்தவொரு நிகழ்வும், மற்ற எல்லாவற்றை விடவும், மகிழ்ச்சியானது என்ற நினைத்தால் போதும்.
நமக்கான மகிழ்ச்சி தன்னுடைய உழைப்பால் வரவேண்டும் என்று சிந்தித்து, உழைப்பில் விடும் வியர்வை துளிகளிகளே நாம் காணும் மகிழ்ச்சி அரும்புகள் என்று உணர்வோம். அரும்பு மலர்ந்தால் வாசம். நம்மிடம் உழைப்பு இருந்தால் மகிழ்ச்சி நம்வசம்.
மற்றவர்கள் பாராட்டும், புகழ்ச்சியும் நம் மகிழ்ச்சியின் குறியீடு அல்ல. அதனை எதிர்பார்ப்பது காத்து இருப்பதும் மகிழ்ச்சிக்கான விடயமும் அல்ல. எதையும் எதிர்பாராமல், நம் முயற்சியில், ஆற்றலில் கிடைக்கும் சாதனையும் வெற்றியுமே நம்முடைய மகிழ்ச்சிக்கான அடையாளங்கள்.
கார்மேகம் எழுந்து வானத்தையே மறைத்துவிட்டாலும், ஒரு சில மணித்துளிகளில் அது கரைந்து போவது போல், நம்மை எப்படிப்பட்ட சோகம் சூழ்ந்தாலும், எதுவும் நிலையானது அல்ல, இதுவும் கடந்து போகுமென நினைத்து மகிழ்ந்திட மறவோம்.
இந்த உண்மையை அறிந்து, உணர்ந்து கொள்ளும் பக்குவமான மனதோடு வாழ்ந்தால், அப்போதே நாம் மகிழ்ச்சியாக வாழ்கிறோம் என்று புரிந்து கொள்ளுவோம். மகிழ்ச்சியாக வாழ்வது என்பது, வேறொன்றுமில்லை. நம் மனதில் தேவையில்லாமல் எழும் ஆசையை அடக்குவோம்.
வாழ்க்கையில் நம்முள் கோபம் எனும் வில்லன் நுழைந்தால், நம்மிடையே இருக்கும் மகிழ்ச்சி எனும் நண்பன் வெளியேறி விடுவான். அதனால் எந்த இடத்திலும், எந்த நேரத்திலும், எந்த நிலையிலும் கோபம் அறவே தவிர்த்து வாழப்பழகுவோம்.
நம்மிடம் பொறாமை ஏன் ஏற்படுகிறது என்று சிந்தித்து பார்த்தால், நம் உணர்வுகள் சொல்வது இயலாமை. அதற்கு முதல் மூலக் காரணம் அடுத்தவருடன் நம்மை ஒப்பிட்டு பார்த்து, அதற்கேற்ப நம்மால் வாழ முடியவில்லையே என்ற ஏக்கம்.
வாழ்க்கையில் எல்லாம் கிடைத்துவிட்டாலும், அலைபாயும் அற்ப மனம் நம் உணர்வுகளோடு மகிழ்ந்து உறவாடுவதில்லை. அதற்கு காரணம், மரத்துக்கு மரம் தாவும் குரங்குபோல, வேறு விஷயங்களில் தாவி, தவிக்கையிவ், மகிழ்ச்சி வீழ்ந்து போகிறது.
புன்னகையில் பூக்கும் முகம் அழகு. பொறுமை காக்கும் குணம் சிறப்பு. இயற்கையை ரசிக்கும் மனம்போல் வாழ்க்கையில் இருப்பது மதிப்பு. இவை அனைத்தும் இருக்கும் மனிதனுக்கு, வாழ்க்கையில் பூஞ்சோலை மலர்களைப் போல், வாகை சூடும் மகிழும்-பூ!