
வியாபாரம் செய்வது சுலபமான ஒன்று அல்ல. ஏற்ற தாழ்வுகளை சந்திக்கவேண்டும். பிரச்னைகளை சமாளித்து அடுத்த கட்டத்திற்கு நகரவேண்டும். முந்தைய தலைமுறை கட்டி காத்து பெருக்கிய பல வியாபாரங்கள் அடுத்த தலைமுறையினர் தலை எடுத்து நடத்த முற்படும் பொழுது சில வியாபாரங்கள் திணருகின்றன. சில காணாமல் போய்விடுகின்றன.
இவற்றை குறித்து சில விவரங்கள் பார்ப்போம்.
அன்றைய தலைமுறையினருக்கு முந்திய தலைமுறையினர் வியாபாரம் துவங்கிய பொழுது சிறிதாக திட்டமிட்டு, சிறிதாக ஆரம்பித்து படிப்படியாக உயர்ந்தனர். அவ்வாறு வியாபாரம் துவக்கியவர்கள் நிதானமாகவும், பொறுமையுடனும் செயல் பட்டவர்கள். நம்பிக்கைக்கு தனி முக்கியத்துவம் அளித்தனர். பிறரின் நம்பிக்கைக்கு பாத்திரமாகினார்கள். சொன்ன சொல்லையும், கொடுத்த வாக்குறுதிகளையும் காப்பாற்றினார்கள்.
அகல கால் ஆரம்பத்திலேயே வைக்க நினைத்தும் இல்லை, வைக்கவும் இல்லை. அதிக லாபம் ஈட்டுவது என்பது அத்தகைய வியாபாரம் செய்தவர்கள் அகராதியில் இடமே பெறவில்லை.
நியாயமான விலைக்கு விற்பனை செய்து நியாயமான லாபம் பெற்று மன மகிழ்வோடு வியாபாரம், வாழ்க்கை இரண்டையும் நடத்தி வந்தார்கள். வியாபாரத்தில் பணம் முதலீடு செய்வதுடன் முக்கியமாக தங்கள் உழைப்பையும் சேர்த்துதான் வியாபாரம் செய்ய இறங்கினார்கள். செய்யும் தொழிலின் நெளிவு சுளுவுகளை முழுமையாக கற்றுக்கொண்டு திட நம்பிக்கையோடு தொழிலில் ஈடுபட்டனர்
அவர்களுக்கு நன்றாகவே தெரியும் வியாபாரத்தில் பயணிப்பது என்பது கரடு, முரடான பாதையில் பிரயாணம் செய்வது போன்றது என்று.
வியாபாரத்தில் எதிர்வரும் தடங்கல்கள், தொய்வுகள், தோல்விகள், (இவையாவும் வியாபார பாதையின் தவிர்க்க முடியாத அம்சம்கள் என்பதை நன்கு அறிவர்) இவற்றைக்கண்டு மனம் தளராமல், சிந்தித்து செயல்பட பட்டை தீட்டிக்கொண்டு இறங்கியதால் எத்தகைய வகை சந்தர்ப்பங்களையும் எதிர்கொண்டு ஆளமுடிந்தது.
தொழிலில் தங்களை மட்டும் இணைத்துக்கொள்ளாமல் மற்ற அவர்களது குடும்ப உறுப்பினர்களையும் ஈடுபடுத்திக் கொண்டதால் தடையின்றி வியாபாரத்தில் கவனம் செலுத்த முடிந்தது. தொழில் இரகசியம் காக்க முடிந்தது. வெளிநபர்கள் முக்கிய பொறுப்பில் வேலைக்கு அமர்த்தி அதனால் சந்திக்கவேண்டிய பிரச்னைகளை தவிர்க்க முடிந்தது.
குடும்ப உறுப்பினர்களுக்கு எல்லா வேலைகளையும் கற்றுக்கொடுத்து பழக்கியதால், தொழிலில் ஆள் இல்லா குறையை நிவர்த்தி செய்யவும் முடிந்தது.
நல்ல பொருட்கள் கொண்டு நேர்த்தியாக தயாரித்து விற்பனை செய்வதற்கு மிக முக்கியத்துவம் கொடுத்தனர்.
தரமான பொருட்கள் வியாபாரம் செய்து வாடிக்கையாளர்களை கவர்வதுடன், நெடு நாளைய வடிக்கையாளர்களாக ஆக்கவும் கற்று தேர்ந்து இருந்தனர். உரிய மரியாதை, நல்ல விதமாக உரையாடுதல் போன்றவைகளுக்கு வியாபாரம் செய்தவர்கள் தனி முக்கியத்துவம் அளித்தனர்.
ஆக மொத்தம் வியாபாரம் சம்பந்தபட்ட எல்லாவற்றிலும் நேர்மறை எண்ணங்கள், வழிகளுக்கே இடம் கொடுக்கப்பட்டு வந்தது. தேவைபட்டால் வாடிக்கையாளர்களின் நிலைமை, பணக்கஷ்டம் ஆகியவற்றை புரிந்துக்கொண்டு தங்களால் இயன்ற அளவு வளைந்தும் கொடுத்தனர், அப்படி கட்டி காத்து வளர்த்த வியாபாரம் இன்றைய தலைமுறை சிலரால் பாதுகாக்க முடிவது இல்லை.
முந்தைய தலை முறையினர் அடிப்படையில் இருந்து துவக்கி ஒவ்வொரு கட்டத்திலும் பாடுபட்டு வியாபாரத்தை வளர்த்து பெருக்கி உயர்ந்துள்ளனர்.
ஆனால் இன்றைய தலைமுறையினர் சிலரால் சரிவர கையாள முடிவது இல்லை. போதிய அடிப்படை அறிவு, அனுபவம் இன்மை. போட்டியாளர்களை சமாளித்து போட்டி போடும் திறமை இன்மை.
வியாபார பணத்தை அனாவசியமாக ஆடம்பர பொருட்கள், வண்டிகள் வாங்குவது, அயல் நாட்டு உல்லாச பயணம் மேற்கொள்வது போன்றவற்றில் செலவு செய்து வியாபாரத்திற்கு போதிய பணம் இல்லாமல் திண்டாடுவது.
அளவுக்கு மீறி கடன் சுமை ஏற்றிக்கொண்டு அதுவே வியாபார முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டையாகவும் பெரும் தடைகல்லாகவும் அமையை வைத்து திண்டாடுவது.
இத்தகையை நபர்கள் அனுபவம் இல்லாத தங்கள் வயது ஒத்த நண்பர்களின் பொருத்தம் இல்லாத யோசனைகளை கேட்டு ஆழம் தெரியாமல் காலை விட்டு தத்தளிப்பது.
இவர்கள் பெரும்பான்மையானோர் அனுபவமிக்க முந்தைய தலைமுறையினருடன் விவாதிக்கவும் அவர்கள் யோசனைகளைக் கேட்டு செயல்படுத்த முன் வராதது ஒரு பெரிய குறை மட்டும் அல்லாது இழப்பும் ஆகும்.
பெரும்பான்மையானவர்களுக்கு உடனடியாக அதிக பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற அணுகுமுறை இருப்பது வேதனை அளிப்பதாக இருக்கின்றது.
அவர்கள் நிலை உணர்ந்து நல்லபடியாக வியாபாரம் செய்ய அடிப்படை தேவைகளை உயர்த்திக்கொண்டால் இவர்களாலும் முடியும்.