
ஒவ்வொருவரின் மனமும் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் அடுத்தவர்களின் அங்கீகாரத்திற்காக ஏங்கி காத்துக்கொண்டிருக்கிறது என்பதுதான் உண்மை. ஒருவர் ஒரு செயலை நல்லபடியாக நிகழ்த்திவிட்டால் பாராட்டுவது என்பது சிறந்த செயல்.
ஆனால் எத்தனை பேருக்கு அடுத்தவர்களை பாராட்ட மனம் வருகிறது? தன்னால் முடியாத ஒரு செயலை வேறொருவர் செய்து முடித்துவிட்டால் பொறாமைதான் எழுகிறதே தவிர பாராட்டும் குணம் வருவதில்லை. இது தவறு. நல்லவற்றை மனம் திறந்து பாராட்ட கற்றுக்கொள்ள வேண்டும்.
பாராட்டு என்பது ஒவ்வொருவருக்கும் உந்து சக்தியாக இருந்து, ஊக்கம் கொடுத்து உற்சாகமாக செயல்பட உறுதுணையாக இருக்கும். நல்லவற்றை பாராட்ட கற்றுக்கொள்வது என்பது ஒருவருடைய செயல்கள், குணங்கள் அல்லது சூழ்நிலைகளை பற்றி பாராட்டுவதாகும்.
அதன் மூலம் அந்த பாராட்டு பெறுபவரின் மனதை மகிழ்ச்சி கொள்ள செய்வதையும் குறிக்கும். மனம் திறந்து பாராட்டுவதன் மூலம் அவர்கள் தங்கள் செயல்களை செய்ய மேலும் ஊக்கம் அடைவார்கள்; நமக்கும் அவர்களுடனான உறவு வலுப்பெறும்.
ஒருவர் செய்யும் நல்லவற்றை மனம் திறந்து பாராட்டும்பொழுது பாராட்டு பெறுபவருக்கு மட்டுமின்றி பாராட்டுபவருக்கும் நிறைய நன்மைகள் ஏற்படும். பாராட்டுவதால் ஒருவருடைய தன்னம்பிக்கை அதிகரிக்கும். அத்துடன் அவர்களின் சுயமரியாதையையும் உயர்த்தும். பாராட்டு பிறருக்கு மகிழ்ச்சியை தருவது மட்டுமல்லாமல், பாராட்டு பவருக்கும் கூட மகிழ்ச்சியான உணர்வை அளிக்கும்.
வெறும் வாய் வார்த்தைக்காக பாராட்டாமல் உள்ளார்ந்த அன்புடன் ஒருவரை பாராட்டும் பொழுது அவர்களுக்கு அது ஊக்கமளிப்பதுடன், திறமைகளை மேலும் வளர்த்துக்கொள்ளவும் உதவியாக இருக்கும். வாழ்க்கையில் நல்ல விஷயங்களை பாராட்டுவது, மகிழ்ச்சியின் மூலமாக அமைகிறது. இது மனநலனை மேம்படுத்துவதுடன், உறவையும் வலுப்படுத்தும். ஒருவருக்கொருவர் புரிதலையும், நேர்மறையான அணுகலையும் வளர்க்கும்.
பொத்தம் பொதுவாக பாராட்டாமல் ஒருவரின் குறிப்பிட்ட செயலை குறிப்பிட்டு பாராட்டுவது எதிர்தரப்பினருக்கு மகிழ்ச்சியை உண்டாக்கும். அதுவும் உண்மையாக பாராட்ட வேண்டும். பொய்யான புகழ்ச்சி வெகு விரைவில் அனைவருக்கும் புரிந்துவிடும். அத்துடன் நம் மீதான நம்பகத் தன்மையும் குறைந்துவிடும்.
எனவே பாராட்டுவது உண்மையாக இருக்க வேண்டும். பாராட்டப்படும் ஒவ்வொரு நொடியும் மனிதனின் ஆற்றலும் திறமையும் பல மடங்குகள் பெருகுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. ஜஸ்ட் ஒரு கைகுலுக்கல், முதுகில் தட்டிக் கொடுத்து பாராட்டுவது, தலையை கோதிவிடுவது, புன்னகையால் அங்கீகரிப்பது என்று பாராட்டுகள் பல பரிமாணங்களைக் கொண்டது.
குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை பாராட்டுக்கு மயங்காதவர்கள் யாரும் இல்லை. பாராட்டுவதால் உற்சாகம் ஏற்படும், தன்னம்பிக்கை அதிகரிக்கும். ஒரு சிறிய செயலை செய்யும்போது கூட பாராட்டினால் அது மிகப்பெரிய செயல்களுக்கு வழிவகுக்கும் என்பதுதான் உண்மை. இனியாவது மனம் திறந்து பாராட்டுவோமா?.