
வாழ்வில் சில கேள்விகளுக்கு பதில் கிடைக்காமல் இருப்பதே நல்லது. எல்லாவற்றையும் திட்டம் போட்டெல்லாம் வாழ வேண்டாம். நாம் நடந்துவிடும் என்று பயப்படும் சில விஷயங்கள் நடப்பதில்லை. தீவிரமாக தேடும்போது கிடைக்காத பொருள் அதை தேடாத பொழுது தானாக வந்து கிடைப்பது நம் கையில் இல்லை. நாம் நினைக்கும் அனைத்தும் நமக்கு கிடைப்பதில்லை. ஆனால் நமக்கு எது நிச்சயம் அவசியமோ அது நிச்சயம் கிடைக்கும். என்ன பேசுவது தத்துவம்போல இருக்கிறதா? உண்மை இதுதான்.
வாழ்வில் எல்லாம் புரிந்தே ஆகவேண்டும் என்ற அவசியம் இல்லை. தன் கருத்துக்களை சரி என்று வாதாடும் ஒரு வக்கீலாகவும், அடுத்தவர் கருத்துக்களை தவறு என்று தீர்மானிக்கும் ஒரு நீதிபதியாகவும்தான் பெரும்பாலான மக்கள் இருக்கின்றார்கள். அடுத்தவர்கள் பிரச்னைக்கு எளிதில் தீர்வு காணும் நாம் நமக்கான பிரச்னைகளில் கோட்டை விடுகிறோம். அந்தப் பிரச்னைகளை ஆழமாக தெரிந்துகொண்டு செயல்பட தவறி விடுகிறோம்.
வாய் ஓயாமல் பொதுநலம் பேசும் நாம் நமக்கென்று பிரச்னை வந்தால் சுயநலமாக சிந்திக்க தவறுவதில்லை. தன்னைச் சுற்றி நடக்கும் தவறுகளை கண்டும் காணாமல் இருப்பது தான் வழக்கம். ஆனால் தன் வாழ்வில் எடுக்கும் முடிவுகளை சில பல சந்தர்ப்பங்களில் தனக்காக மாற்றிக்கொண்டு அதைத் தானே மீறி செயல்படுவது என்பது மனித இயல்புதான்.
எனவே வாழ்வில் நடப்பது எல்லாம் புரிந்தே ஆகவேண்டும் என்ற அவசியம் இல்லை. தனக்கு தவறென்று பட்டாலும் அதை சரி என்று பிறர் ஆமோதிக்கும் பட்சத்தில் தானும் அதை சரி என்றே கூறி தன் கருத்தினை மாற்றி சொல்வது மனிதர்களின் இயல்புகளில் ஒன்று.
வாழ்வில் எல்லாம் புரிந்தே ஆகவேண்டும் என்ற அவசியம் இல்லை. அவரவருக்கு ஏற்ப நம் முகமூடிகளை மாற்றிக்கொண்டு, ஆளுக்கு தகுந்தபடி பேசுவதும், நடந்து கொள்வதும் என்ற பச்சோந்தி குணம் கொண்ட மனிதர்கள்தான் இங்கு அதிகம். இது எக்காலத்திலும் மாறாது. உண்மையாக நடந்து கொள்பவர்கள் மிகச் சிலரே. அவர்களையும் நாம் நடிக்கிறான் பார்! என்று ஒதுக்கி விடுவதுதான் வேதனை. அவர்களின் உள்ளத்தை முழுதாய் புரிந்து கொண்டவர்கள் இங்கு யாரும் இல்லை. நம்மை நேசிப்பவர்களை உதாசீனம் செய்வதும், நம்மை வெறுப்பவர்களை தேடிச்செல்வதும் தான் மனித இயல்பாக உள்ளது.
நமக்கு தெரியாதது இவ்வுலகில் எவ்வளவோ உண்டு. கோபக்காரர் என்று எண்ணும் ஒருவர் சாதாரண மனிதர்களை விட தனித்துவமாகவும், வித்தியாசமாக சிந்திக்க தெரிந்தவர்களாகவும், நல்ல மனம் படைத்தவர்களாகவும் இருக்கலாம். போலியாக சிரித்து, பொய் பேசி நம்மை கடைசியில் அழவைக்கும் மனிதர்களும் இவ்வுலகில் உண்டு. ஒருவரின் மனநிலையை எளிதில் புரிந்து கொள்வது மிகவும் கடினம். ஒருவர் தன்னை மிகவும் வலிமை மிக்கவராக காட்டிக்கொள்ளலாம். உண்மையில் அவர் மிகவும் பயந்த சுபாவம் கொண்டவராக இருக்கலாம்.
நம்மால் ஒருவர் மீது ஒருமுறைதான் நம்பிக்கை வைக்க முடியும். அந்த நம்பிக்கையை அவர் உடைத்து விட்டாலோ எவ்வளவு முயற்சி செய்தாலும் அதே அளவிலான நம்பிக்கையை நம்மால் அவரிடம் வைக்க இயலாது. மனம் மிகவும் விசித்திரமானது. நீங்கள் எது வேண்டுமானாலும் செய்யலாம் என்று ஒருவர் நம்மை சுதந்திரமாக செயல்பட சொல்லும் பொழுது நாம் ஒன்றும் செய்வதறியாது திகைப்போம். அதுவே நீங்கள் இதை மட்டும் செய்யக்கூடாது என்று சொன்னால் நாம் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதில் மிகவும் தெளிவாக இருப்போம்.
வாழ்வை அதன் போக்கில் வாழ்ந்து விடுவதுதான் சரி. நான் சொல்வது சரிதானே!