
தியோடர் சேயஸ் கீசல் எனும் நாவலாசிரியர் 1936ல் ஐரோப்பாவிற்குக் கப்பலில் பயணித்துக் கொண்டிருந்தார். அப்போது கப்பல் எஞ்சின் சத்தத்தின் தாளகதி அவரை ஒரு பாடலை எழுதத் தூண்டியது. அதை அடிப்படையாகக் கொண்டு புதினம் ஒன்றை எழுதினார். அது பதிப்பாளர்களால் 27 முறை ஏற்றுக்கொள்ளப்படாமல் திருப்பி அனுப்பப்பட்டது. பலர் இரண்டு, மூன்று முறை தோல்வி கிடைத்தாலே நம்பிக்கை இழந்து விடுவார்கள். ஆனால் 27 முறை தோல்விக்கு பிறகு, அவரது நண்பர் ஒருவர் அவருக்காக அந்த புதினத்தை புத்தகமாக வெளியிட்டார். வெற்றியும் அடைந்தார். புதின ஆசிரியர் 1991ம் ஆண்டு உயிரோடு இருக்கும் வரை, அவரது புத்தகம் 15 மொழிகளில் 200 மில்லியன் பிரதிகளும், அவரது இறப்பிற்கு பிறகு 22 மில்லியன் பிரதிகளும் விற்றதாக கூறப்படுகிறது.
ஹாரிபாட்டரை எழுதிய ஜே.கே.ரௌலிங் சொந்த வாழ்வில் மணமுறிவானதால் நிலைகுலைந்து போயிருந்தார். அப்போது அவருக்கு குழந்தைகளுக்கான புத்தகம் ஒன்றை எழுதவேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது.
போதுமான பண வசதியில்லாததால் கிடைக்கும் நன்கொடைகளைக் கொண்டே வாழ்க்கையை நடத்தி வந்தார். ஆனாலும், ‘தான் எழுதவேண்டும்’ என்ற முயற்சியைக் கைவிடாமல் தொடர்ந்தார். கொஞ்சம் கொஞ்சமாக தனது ஹாரிபாட்டர் கதையைப் பல வருடங்கள் தொடர்ந்து எழுதினார்.
அவருக்குத் தான் எழுதும் கதை மற்றவர்களுக்குப் பிடிக்குமா என்ற சந்தேகமும், யாராவது பிரசுரிக்க மாட்டார்களா? என்ற கவலையும் இருந்தது. பல பதிப்பாளர்கள் அவரது புத்தகத்தைப் பிரசுரிக்க மறுத்து விட்டனர். ஆனால் அவரின் தொடர் முயற்சியினால் அவருடைய ’ஹாரிபாட்டர்’ புத்தகம் பிரசுரிக்கப்பட்டது. இன்று அது மிகவும் பிரபலமானது என்பதை நாம் அனைவரும் அறிவோம்.
தோல்விகள் நம்வீட்டுக் கதவை மூடும்போது தொடர்ந்து விடாமுயற்சியுடன் கதவுகளைத் தட்டித் திறப்பதுதான் வெற்றிக்கான அடித்தளம். நாம் வெற்றி பெறுவதற்கு நமக்குத் தேவையானது தொடர் விடாமுயற்சியும், அசைக்க முடியாத தன்னம்பிக்கையும்தான்.
விடாமுயற்சி கொண்டவன், ‘நான் சமுத்திரத்தையும் உட்கொள்வேன். என் சங்கல்ப சக்தியால் மலைகளையும் நொறுங்கி விழுந்து விடச் செய்வேன்’ என்று சொல்வான். விவேகானந்தர் ’அது போன்ற சக்தி, மன உறுதி, கடின உழைப்பு ஆகியவை நம்மிடம் இருக்க வேண்டும். அப்போதுதான் நாம் அடைய விரும்பும் குறிக்கோளை அடைய முடியும்’ என்கிறார்.
நம் நாட்டின் நோபல் பரிசாளர் தாகூர் ஆரம்ப காலத்தில் வங்கமொழி அறிஞர்களின் கவிதைகளை பிழைத்திருத்தம் செய்து கொடுத்து வந்தார். பல அவமானங்களை கடந்து வந்தவர்தான் அவர். அவரது ஆழ்ந்த அறிவினை விட அவரது விடாமுயற்சியே அவருக்கு நோபல் பரிசினை கொண்டு வந்தது.
பெர்னாட்ஷாவின் வாழ்க்கை வறுமை நிறைந்தது. அவர் தினமும் ஐந்து பக்கமாவது எழுதும் வழக்கத்தைக் கொண்டிருந்தார். அவரின் இந்த விடாமுயற்சியே அவரை உலக புகழ் பெற்ற அறிஞராக்கியது.
காந்திஜி விடாப்பிடியாக பற்றிக்கொண்டிருந்த அஹிம்சை கொள்கைதானே நமது நாட்டுக்கு விடுதலையை கொண்டு வந்தது. மேடம் கியூரி, மார்க்கபோலோ...... இப்படிப் பல எடுத்துக்காட்டுகளை விடாமுயற்சி பெற்றுத்தந்த வெற்றியின் குழந்தைகளாக அடுக்கிக் கொண்டே போகலாம்.
எடிசன் ’ஒருவர் வெற்றியடையத் தேவையானது ஒரு விழுக்காடு ஊக்கமும், 99 விழுக்காடு விடாமுயற்சியும்’ என்கிறார்.
“இந்த உலகில் ஒருவருக்கு திறமை, மேதைத்தனம், கல்வியறிவு ஆகியவற்றுடன் விடாமுயற்சியும், எதை அடையவேண்டும் என்ற தெளிவான முடிவும் இருந்தால், மட்டுமே வெற்றியடைய முடியும்’ என்கிறார் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி கூலிடிஸ்.
நமது வள்ளுவரும், “முயற்சி திருவினை ஆக்கும், முயற்றின்மை இன்மை புகுத்தி விடும்” என்கிறார்.
உலகில் சாதனையாளர்கள் அனைவரிடத்திலும் அவரவர் துறைசார் அறிவுடன் விடாமுயற்சியும் இருந்து வந்துள்ளது. அதனால்தான் அவர்களால் வெற்றிகளைப் பெறவும் சாதனைகளை படைக்கவும் முடிந்துள்ளது. நமக்கு வெற்றிகள் வந்து சேர்வதற்கென்று தனியாக ஒரு நேரம் எதுவும் இல்லை.
விடாமுயற்சியோடு செயல்படுகின்றவர்களிடத்தில் எந்த நேரத்திலும் வெற்றிகள் வந்து குவியும். இனியேனும் நம் வாழ்வில் முன்னேற்றத்தின் அடித்தளம் முயற்சியே என்பதை உணர்ந்து செயல்படுவோம். தோல்வியில் துவண்டுவிடாமல் விடாமுயற்சியுடன் செயலாற்றி வாழ்வில் வெற்றி பெறுவோம்.