
சிலருக்கு இயற்கையை ரசிப்பது பிடிக்கும் அல்லது கலை இலக்கியம் போன்றவற்றை படிப்பது பிடிக்கும். இன்னும் சிலருக்கோ பிடித்தமான வேலையை செய்வதில் மனது லேசாகும். இன்னும் சிலருக்கோ மற்றவர்களிடம் உள்ள வித்தியாசமான திறமையை ரசிப்பதில் ஆனந்தம் ஏற்படும்.
அதுபோல்தான் பிரெஞ்சு சக்கரவர்த்தி நெப்போலியனுக் கும் அவர் தமது முதல் மனைவி ஜோசப் பைனை விவாகரத்து செய்துவிட்டு பிரஞ்சுப் பேரரசியான மேரி லூயிஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த பேரரசியிடம் குறிப்பிடத்தக்க தனிப்பட்ட திறமை ஒன்று இருந்தது. இவரால் தான் விரும்பியபடி தம் காதுகளை முன்னும் பின்னும் மாற்றவும், அசைக்கவும், உட்பக்கமாக அல்லது வெளிப்பக்கமாக திருப்பிக் கொள்ளவும் முடிந்ததாம். இதை நெப்போலியன் மிகவும் ரசித்து அடிக்கடி அப்படி காதுகளை அசைக்க சொல்வாராம்.
பொதுவாக நாம் அனைவரும் மழைக்கு முன்பாக ஏற்படும் மண்வாசனையை மிகவும் ரசிப்போம். அந்த மண்வாசனையை நுகர்ந்த உடனே மழை வரப்போகிறது என்று குதூகலிப்போம். இது இயற்கை உடன் நாம் கொண்டுள்ள பிணைப்பை காட்டுகிறது.
பைபிளில் ஒரு வசனம் உண்டு. ஆடு மேய்ப்பவனை சந்தோஷப்படுத்த வேண்டும் என்றால் ஆண்டவன் அதில் ஒரு ஆட்டை ஒளித்து வைத்துவிட்டு மேய்ப்டபவனை சிறிது நேரம் தேட விடுவது உண்டு. அவன் கிடைத்துவிட்டால் போதும் என்று தேடித் தேடி அலைந்து திரும்பும்போது ஒளித்து வைத்த ஆட்டை அவனிடம் இறைவன் விடுவாராம். அப்பொழுது அவன் மனம் சந்தோஷத்தில் மிதக்கும். இப்படி அவன் மனம் லேசாகுமாம். அப்பொழுது கிடைக்கும் சந்தோஷம் அவனுக்கு பெரிய விஷயம் அல்லவா?
நாம் கூட சில நேரங்களில் தோடு போடும் பொழுது திருகாணி தவறி கீழே விழுந்துவிடும். எவ்வளவு தேடினாலும் கிடைக்காது. பிறகு எப்படியோ வீட்டைப் பெருக்கி அதை கண்டுபிடித்து காதில் போடும் பொழுது ஏற்படும் பாருங்கள் ஒரு மகிழ்ச்சி. அதுதான் தொலைந்த பொருள் கிடைப்பதில் ஏற்படும் மகிழ்ச்சி. அதுவரையில் இருந்த கனத்த மனம் அப்பொழுது லேசாகிவிடும் .இப்படித்தான் வாழ்க்கையில் ஒவ்வொரு விஷயமும்.
வெயிலில் அலைந்து திரிந்து விட்டு தாகமாக இருக்கும் பொழுது யாராவது எதிரில் வந்து குளிர்ந்த நீரை குடிக்க கொடுத்தால் எப்படி இருக்கும். அந்த நேரத்தில் அவரைத்தான் நாம் தெய்வமாக வழிபடுவோம். அதுவரையில் இருந்த தவிப்பு அப்பொழுது அடங்கிவிடும் அப்பொழுது ஏற்படும் பாருங்களேன் ஒரு மகிழ்ச்சி. அதற்கு அளவே இருக்காது.
வியர்த்து விறுவிறுத்து இருக்கும்பொழுது குளிர் தென்றல் நம்மை தீண்டினால் எப்படி உணர்வோம். அப்பாடா இது போதுமடா சாமி என்று கூற மாட்டோமா?
வருடம் முழுவதும் ஜாக்கெட் தைப்போம் ஆனால் ஏதாவது பார்ட்டி ஃபங்ஷன் என்று போகும் பொழுது எந்த ஜாக்கெட்டை போட்டாலும் அது ஃபிட்டாகாத மாதிரியே இருக்கும். வீட்டில் உள்ளவர்கள் அந்தப் புடவையைக் கட்டு இந்தப் புடவையைக் கட்டு என்பார்கள். நாம் ஜாக்கெட் சரியாக இல்லை என்று சொல்லுவோம்.
அப்பொழுது வருடம் முழுவதும் ஜாக்கெட் தைக்கிறாய். புடவை கட்டும் பொழுது மட்டும் ஜாக்கெட் சரியில்லை என்கிறாயே எப்படி? என்று கேட்பார்கள். அதுபோல் இந்த ஜாக்கெட் எப்படி இருக்குமோ என்று நினைத்துக் கொண்டு போடும் பொழுது மிகவும் அழகாக பொருந்தி போனால் ஏற்படும் பாருங்களேன் மகிழ்ச்சி. அதை அனுபவித்த பெண்மணிகளுக்குத்தான் தெரியும்.
இப்படி சின்னச் சின்ன விஷயங்கள்தான் வாழ்க்கையை அழகாக்குகிறது. மனதை லேசாக்குகிறது. எதையும் ரசிக்க வைக்கிறது.
நமக்கு நாமே ஆறுதல் கூறும் மன தைரியம் இருந்தால் அனைத்தையுமே ரசனையுடன் கடந்து போகலாம்! ஆதலால் சின்னச் சின்ன விஷயங்களை ரசிக்கக் கற்றுக்கொள்ளுங்கள் அதுதான் வாழ்க்கையில் மனதை லேசாக்கும் உளி.