
நமது சாலைகளில் இப்பொழுதெல்லாம் ஆம்புலன்சுகள் வேகத்தையும் தாண்டி சொமோட்டோ பைக்குகள் வேகமெடுக்கின்றன!உணவு வேண்டி ஆர்டர் செய்வோருக்கு அவ்வளவு விரைவாக, சூடாகக் கொண்டு சேர்க்கிறார்களாம் பலவித உணவு வகைகளை!
ஐ.டி.,கம்பனிகள் அதிகரித்தவுடன் பலவித முன்னேற்றங்களும் நாட்டில் ஏற்பட்டு வருவதைக் கண்கூடாகக் காணமுடிகிறது! இனிமேல் நகரங்களில் வீடு கட்டுபவர்கள் சமையலறை இன்றியே வீடு கட்டினாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை! நான் ஒன்றும் இதனைக் கற்பனையில் சொல்லவில்லை!
கூடுவாஞ்சேரியில் எனது வீட்டிற்கு எதிரே எனது நெருங்கிய உறவினர் வீடு ஒன்று உண்டு. உறவினர் குடும்பத்துடன் நகரத்தில் வசிக்கப் போய்விட்டதால் வீட்டை எங்கள் பொறுப்பில், வாடகைக்கு விடச் சொன்னார்கள். வேலூரைச் சேர்ந்த ஒரு கப்பிள், இருவரும் ஐடியில் பணியாற்றுபவர்கள், வீடு கேட்டு வந்தார்கள். வீட்டைக் காட்டினேன். இருவரும் வீட்டைப் பார்த்தபிறகு “அங்கிள் வீடு பெரிதாக உள்ளது. கிச்சனுக்கு நாங்கள் வாரத்தில் இரண்டொரு நாட்கள் சென்றாலே அதிகம்! சிறிய வீடாக இருந்தாலே போதுமானது என்று அவர்கள் கூற நான் வியந்து,அதிர்ந்து போனேன்!
பக்கத்து வீட்டில் இருக்கும் நண்பர் தன் மனைவியுடன் அடிக்கடி சொந்த ஊர் சென்று விடுவார். அவரின் மகனும், மகளும் ஐடியில் வேலை செய்வதால், தினமும் சொமோட்டோ எங்கள் வீட்டு வாசலிலுள்ள மர நிழலில் வந்து நிற்கும்!
சரி! அவசரத்திற்கு வாரத்தில் ஒரு நாளோ, சில வேளைகளுக்கான உணவையோ வரவழைத்துச் சாப்பிடுவதில் தவறில்லை! அதையே நிரந்தரமாக்கிக் கொள்வது பெரும் ஆபத்தானது என்பதை மருத்துவர்கள் எவ்வளவு எடுத்துச் சொன்னாலும், நமது இளந்தலைமுறையினரின் காதுகளை அவை சென்றடைவதாகத் தெரியவில்லை!
வணிகம் என்பதே லாபத்தைக் குறிக்கோளாகக் கொண்டதுதானே! அதிலும் முற்காலத்தில் இருந்தவர்கள், செய்யும் எந்தத் தொழிலையும் நேர்மையுடன், பய பக்தியுடன், கடவுளுக்குப் பயந்து செய்தார்கள்! நமது கலிகாலத்திலோ, பணம் ஒன்றே குறிக்கோள் என்றாகிவிட்டது. அதனை அடைய எந்த பஞ்சமா பாதகங்களையும் செய்ய நம்மவர்கள் துணிந்து விட்டார்கள் என்பதை அன்றாட நிகழ்ச்சிகளே நமக்கு அறிவுறுத்துகின்றன.
உணவில் கலப்படம், உபயோகித்த ஆயிலையே மீண்டும் மீண்டும் பயன்படுத்திப் பதார்த்தங்களைத் தயாரித்தல் என்று எத்தனையோ வித ஏமாற்றுகள்! காய்ந்த காய்கறிகள், காலங்கடந்த பொருட்களின் பயன்பாடு என்று அவை நீண்டு கொண்டே செல்கின்றன. அதோடு மட்டுமா? எல்லாவற்றிலும் அவசரம்! தயாரித்தலிலும் அவசரம்! சாப்பிடுவதிலும் அவசரம்! இப்படி அவசரப்படுதல் காரணமாகவே இறப்பும் அவசரமாக வந்து விடுகிறது!
நண்பனின் கல்யாணத்தில் நடனமாடிய கல்லூரி மாணவன், சுடப்பட்ட குருவி போலச் சுருண்டு விழுந்து செத்தான் என்ற செய்தி! ஒன்றல்ல! இரண்டல்ல! பல! பலப்பல! பஸ்ஸில் ஏறியவர் இறங்கும் முன்னே மயங்கி விழுகிறார்! மருத்துவமனைக்குக் கொண்டு சென்றால் வழியிலேயே இறந்து விட்டார் என்ற சோகச் செய்தி!
எனது தாயார் வேளைக்குப் பத்து பேர் பசியைப் போக்க,குழம்புக்கு மசாலாவைத் தினசரி புதிதாக அரைத்தே செய்வார்! பெரிய ஆட்டுக் கல்லில் மாவாட்டித்தான் இட்லி, தோசை, அப்பம், அடை என்றெல்லாம் தயாரிப்பார்! அவற்றின் ருசியும், சத்தும் இக்கால நட்சத்திர ஹோட்டல்களில் தயாரிக்கும் பண்டங்களிலும் இல்லை! ருசியை விடுங்கள்! அவை தந்த ஆரோக்கியத்திற்கு இணையே கிடையாதே!
முன்பெல்லாம் ஆண்கள் அடுப்படிப் பக்கம் போவது அரிது. எனக்கு ஒரு ரசம் கூட வைக்கத் தெரியாது! ஆனால் டாக்டர் பட்டம் பெற்ற என் மகனோ பிரியாணி ஸ்பெஷலிஸ்ட்! வகை, வகையான சைட் டிஷ்கள் செய்வதில் வல்லவர்! அத்தோடு மட்டுமல்ல! உணவு தயாரிப்பதைச் சொல்லிக் கொடுப்பதையே யூ டியூபில் தொழிலாகச் செய்பவர்கள் ஏராளம்!
ஆன்லைன் பத்திரிகைகள் மட்டுமல்லாது, அனைத்து பிரிண்ட் வடிவப் பத்திரிகைகளும், வார, மாத இதழ்களும் பல்வகை உணவுகளைத் தயாரிக்கும் செய்முறைகளுக்கே தற்போது அதிக முக்கியத்துவம் அளித்து வருகின்றன. அது மட்டுமா?அயல் நாட்டில் இருக்கும் மகள் அடுப்பைப் பற்ற வைத்துக்கொண்டே வாட்ஸ் அப்பில் அம்மாவைக் கூப்பிட்டு், செய்முறைகளை விலாவாரியாகக் கேட்டுக் கொள்ளும் வசதி! தேவைப்பட்டால் வீடியோவில் அடுப்பையே காட்டி, அடுத்து செய்ய வேண்டியதைக் கேட்கும் வசதி!
இவ்வளவு வசதிககள் இருந்தும், உணவு என்ற பெயரில் ஹோட்டல் மூலம் நாம் ஸ்லோ பாய்சனைச் சாப்பிடுவதாகத்தான் விஷயம் தெரிந்தவர்கள் விரும்புகிறார்கள்!
இளம் தம்பதியினரே! சமையல் ஒரு நல்ல கலை! அதனைக் கற்றுக் கொள்வதற்கு இப்பொழுது ஏகப்பட்ட வசதிகள் வந்துவிட்டன! உங்கள் கைகளால் சமைத்துச் சாப்பிடுவதில் கிடைக்கும் ஆரோக்கியம், நோயற்ற வாழ்வினைத் தந்து, ஆயுளைக்கூட்டி, ஆனந்தமாகவும், அமைதியாகவும் வாழ வழி வகுக்கும்! வாரத்தில் ஒரு நாள் வேண்டுமானால் ஹோட்டலில் ஆர்டர் செய்யுங்கள்! அடிக்கடி வேண்டாமே! நோய் வந்த பிறகு அல்லல்பட்டு அழுது புலம்புவதால் நல்ல பயன் விளையாது! வருமுன்னே காத்துக்கொள்வதே புத்திசாலித்தனம்! நாம் அனைவரும் புத்திசாலிகள்தானே!