பணத்தை விட பெரிய சொத்து எது? சிறுவன் கற்றுத்தந்த பாடம்!

Motivational Story | Old man and Boy
Motivational Story | Old man and BoyCredit: AI Image
Updated on

வாழ்க்கை என்பது ஓயாத ஒரு ஓட்டம். இதில் நாம் எதைத் தேடி ஓடுகிறோம் என்பதை விட, அந்தப் பயணத்தை எப்படி ரசிக்கிறோம் என்பதில்தான் வாழ்வின் ரகசியமே அடங்கியிருக்கிறது. பெரும்பாலான மனிதர்கள் எதிர்காலத்தைப் பற்றிய கவலையிலும், செல்வத்தின் மீதான மோகத்திலும் தங்களின் நிகழ்காலத் தருணங்களைத் தொலைத்து விடுகிறார்கள்.

ஆனால், உண்மையான செல்வம் என்பது பணத்திலோ அல்லது பொருள்களிலோ இல்லை; அது நாம் அனுபவிக்கும் ஒவ்வொரு சின்னஞ்சிறு மகிழ்ச்சியிலும் இருக்கிறது. அத்தகைய ஒரு ஆழமான கருத்தை உணர்த்தும் ஒரு சிறுவனையும், ஞானம் மிக்க ஒரு முதியவரையும் பற்றிய கதைதான் (Motivational Story) இது.

ஒரு காலத்தில் எகிப்தில், கைரோ என்னும் இடத்தில் ஒரு சிறுவன் தன் தாயுடன் வாழ்ந்து வந்தான். ஒருநாள் அந்தச் சிறுவனின் தாய் அவனுக்கு ஒரு வேலை கொடுத்தார். ஒரு வெள்ளிப் பாத்திரத்தைக் கொடுத்து, அது முழுவதும் உணவுப் பொருட்களை வாங்கி வரச் சொன்னார்.

அந்தப் பையனும் சந்தைக்குச் சென்று உணவுப் பொருட்களை வாங்கினான். திரும்பி வீட்டிற்கு வரலாம் என்று நினைக்கும்போது, அங்கே ஒரு இடத்தில் 'மேஜிக் ஷோ' நடப்பதைக் கவனித்தான். ஆர்வ மிகுதியால் அங்கே சென்று, அந்த மேஜிக் ஷோவை அமர்ந்து ரசிக்க ஆரம்பித்தான்.

அவன் அந்த ஷோவை ரசித்துக் கொண்டிருக்கும்போது, அவன் பக்கத்தில் ஒரு முதியவர் அமர்ந்திருந்தார். அவரிடம் ஒரு சின்ன முடிச்சில் நிறைய தங்கக் காசுகள் இருந்தன. அங்கிருந்த மற்றவர்கள் அனைவரும் அந்தத் தங்கக் காசுகளை எடுத்துக் கொண்டிருந்தார்கள். ஆனால், அந்தச் சிறுவனின் கவனம் முழுவதும் மேஜிக் ஷோவில் மட்டுமே இருந்தது.

மேஜிக் ஷோ முடிந்தவுடன் அந்தச் சிறுவன் திரும்பிப் பார்த்தான்; அவனிடம் இருந்த வெள்ளிக் கிண்ணம் காணாமல் போயிருந்தது! அவனுக்குத் தூக்கி வாரிப் போட்டது. அந்தப் பாத்திரம் இல்லாமல் வீட்டிற்குச் செல்ல முடியாது என்பதால், அந்த நாள் முழுவதும் ஊர் முழுக்கச் சுற்றித் தேடி அலைந்தான்.

இதையும் படியுங்கள்:
லூயி ப்ரெய்லியின் கண்களைப் பறித்த ஆணி, பின்பு கோடிக்கணக்கான பேரின் கண்களைத் திறந்தது எப்படி?
Motivational Story | Old man and Boy

இறுதியாக ஒரு தோட்டத்தில் வந்து நின்றான். அங்கே ஒரு முதியவர் இருந்தார். அந்த முதியவர் வேறு யாருமில்லை; மேஜிக் ஷோவில் தங்கக் காசுகளை வைத்திருந்த அதே முதியவர்தான் அவர்.

அவரிடம் சென்ற சிறுவன், "முதியவரே! என் பக்கத்தில்தானே மேஜிக் ஷோவில் உட்கார்ந்து இருந்தீர்கள்? என்னுடைய வெள்ளிக் கிண்ணத்தைப் பார்த்தீர்களா?" என்று கேட்டான்.

அப்போது அந்த முதியவர் தன்னிடம் இருந்த பையிலிருந்து அந்தப் பாத்திரத்தை எடுத்துக் கொடுத்தார். பின் அவர் கூறினார்:

"இந்த வெள்ளிக் கிண்ணத்தை நான் உனக்கு அப்படியே தர மாட்டேன்; இதுவரை நான் சம்பாதித்த அனைத்துச் சொத்துக்களையும் உன்னிடம் ஒப்படைக்கப் போகிறேன். ஏனெனில், அந்த மேஜிக் ஷோ நடக்கும்போது எல்லோருடைய கவனமும் என் தங்கக் காசுகள் மீது இருந்தது. ஆனால், நீ மட்டும்தான் எதைப் பற்றியும் கவலைப்படாமல் அந்த நிகழ்ச்சியை ரசித்துக் கொண்டிருந்தாய். வாழ்க்கையில் சின்னச் சின்ன விஷயங்களைக் கூட ரசிக்கத் தெரிந்தவர்களிடம் தான் எல்லா வளங்களும் இருக்க வேண்டும் என்று அப்போதே நான் முடிவு செய்துவிட்டேன். எனவே, இந்தக் கிண்ணத்துடன் சேர்த்து என் சொத்துக்களையும் எடுத்துக் கொள்!" என்றார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com