
வெற்றிபெற விரும்புபவர்கள் தனியாக முடிவெடுத்து செயல்படும். திறமையை வளர்த்துக்கொண்டவர்களாக இருக்கவேண்டும்.
டென்மார்க் நாட்டில் தோர் வால்ட்ஸென் என்ற புகழ் பெற்ற சிற்பி வாழ்ந்து வந்தார். அவர் நிறைய வண்ணச் சிலைகளைச் செதுக்கி மிகவும் புகழ் பெற்றிருந்தார்.
அவரிடம், 'நீங்கள் செய்த சிலைகளில் உங்களுக்குப் பிடித்த சிலை எது? என்று ஒருவர் கேட்டார். அதற்கு அவர், 'நான் அடுத்ததாக உருவாக்கப்போகும் சிலை' என்று பதில் அளித்தார்.
அதே போன்று ஒருவன் தான் அடைந்த வெற்றிகளைப் பற்றி பெருமைப்பட்டுக்கொண்டிருக்கக் கூடாது. அடுத்தடுத்து இன்னும் பெரிய வெற்றிகளைக்காண முயற்சி எடுத்து வரவேண்டும்.
மற்றவர்களைக் குருட்டுத்தனமாகப் பின்பற்றுபவர் வெற்றி வீரர்களாக நிலைத்து நிற்க முடியாது. வெற்றி வீரர்கள் தங்களுடைய தனித்துவத்தைக் காப்பாற்றிக் கொள்ளுபவர்களாக இருப்பார்கள். இவர்கள் மற்றவர்களுடைய 'ரப்பர் ஸ்டாம்பாக' செயல்பட மாட்டார்கள்.
இவர்கள் தாங்கள் செய்து முடித்த செய்கைகளில் தங்களுடைய தனி முத்திரை பதிந்திருக்கும்படி தனித்துவத்துடன் செயல்படுவார்கள்.
அனைவரும் ஒரே மாதிரி செயல்பட்டு வந்தால் மனித வாழ்க்கையே கசந்துவிடும். சாப்பாட்டில் பாயசமும் இருக்க வேண்டும். உப்பு, காரம் கலந்த பதார்த்தங்களும் இருக்கவேண்டும். அப்போதுதான் சாப்பாடு சுவையாயிருக்கும்.
மனித வாழ்க்கை இன்பம் நிறைந்ததாயிருக்க கலைஞர்கள். ஆராய்ச்சியாளர்கள், அரசியல்வாதிகள், விளையாட்டு வீரர்கள் எழுத்தாளர்கள், தொழிலாளர்கள் என்று மனித இனம் பல பகுதிகளாகப் பிரிந்து ஒவ்வொருவரும் மாறுபட்ட வேலைகளைச் செய்து வரவேண்டும்.
ஒருவன் எழுத்தாளனாகப் புகழ்பெற்று விட்டான் என்பதைப் பார்த்த உடன் அவனைப் போன்று அதே நடையில் எழுத முற்படுபவன் தோல்வியைத்தான் தழுவ வேண்டியிருக்கும். ஆகையால் மற்றவர்களைப் போன்று ஒருவன் எழுதவோ நடிக்கவோ கூடாது. மற்றவர்களிடமிருந்து வெளிச்சத்தைப் பெறாமல் தானே வெளிச்சத்தை உருவாக்கவேண்டும்.
எட்டி ரிக்கென்பெக்கர் என்பவர் சென்று கொண்டிருந்த கப்பல் விபத்திற்குள்ளாகி மூழ்கி விட்டது. ரிக்கென் பெக்கர் வேறு சிலருடன் ஒருபடகில் 21 நாட்கள் உண்ண உணவின்றி குடிக்க நீரின்றி மலிபில் சமுத்திரத்தில் காலம் கழித்தார்.
அதிர்ஷ்ட வசமாக அந்த வழியாக வந்து கொண்டிருந்த பிரயாணம் செய்து வந்தவர்கள் அவர்களை காப்பாற்றினார்கள் பத்திரிக்கை நிருபர்கள் அவரிடம், '21 நாட்கள் உயிருடன் போராடி பிழைத்து வந்திருக்கிறீர்கள். இந்த அனுபவத்திலிருந்து நீங்கள் கற்றுக் கொண்டீர்கள்? என்று கேட்டார்கள்.
அதற்கு அவர் 'குடிப்பதற்குப் போதுமான குடிநீரும் சாப்பிடுவதற்குப் போதுமான உணவும் கிடைத்து வந்தால் வாழ்க்கையில் குறை கூறுவதற்கு எதுவுமே கிடையாது என்பதுதான் நான் கற்று கொண்ட பாடம்', என்று பதில் கூறினார். இது எப்படிப்பட்ட அனுபவம் பார்த்தீர்களா?
சாதாரண மக்களுக்கு வெற்றி கிட்டும்போது அக உணர்ச்சிகள் அவர்களுடைய உள்ளத்தில் அலைமோத ஆரம்பிக்கின்றன. அவர்களது தனித்துவம் அழிந்து விடுகிறது.
பெரிய மனிதர்கள் தங்களுக்கு வெற்றி கிடைக்கும் போது நிதானத்துடன் நடந்து கொண்டு, வெற்றிமூலம் கிடைத்த பலன்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுவார்கள். தோல்வி காணும் போது மீண்டும் பாடுபட்டு உழைத்து தோல்வியை வெற்றியாக மாற்றிக் காண்பிப்பார்கள் நீங்களும் முயன்றால் சாதனை நிகழ்த்த முடியும்.