
சலிப்படைவதற்கான தனி உரிமை பெற்றவர்கள் மனிதர்கள் மட்டுமே. எந்த விலங்கினமும் உயிர் வாழ்வதில் சலிப்படைவதில்லை. கடந்த காலம் சிலருக்கு மறந்த காலமாக இருக்கும். சிலருக்கு வசந்த காலமாகத் தெரியும். வேறு சிலருக்கோ அது எந்த காலம் என்பதைத் தேடித் தேடியே வாழ்க்கை சலிப்போடு நகர்ந்து கொண்டிருக்கும். மனதிற்கு சலிப்பு ஏற்படாத வரை நாம் எதைப் பற்றியும் சலித்துக்கொள்வதில்லை.
என்னடா இது வாழ்க்கை என்று வாழ்க்கை மீது சலிப்பு தட்டாமல் இருக்க நம்மைச் சுற்றி அன்பு நிறைந்த உள்ளங்கள் சூழ்ந்திருப்பது அவசியம். ஒவ்வொருவர் வாழ்விலும் ஏக்கமும் எதிர்பார்ப்பும் சலிப்பும் இயல்பாக நடைபெறுவதுதான். அதை கடப்பதுதான் மிகவும் கடினம். விரும்பி செய்யப்படும் எதுவும் சலிப்பைத் தருவதில்லை. வலி இல்லாத வாழ்க்கை வேண்டுமென்றால் சலித்துக் கொள்ளாத உறவுகள் வேண்டும். நம்மைச்சுற்றி பொய் இல்லாத முகங்கள் வேண்டும், உண்மை உறவுகள் வேண்டும்.
சில நேரங்களில் வாழ்க்கை சலிப்பாக தோன்றுவது இயற்கைதான். இப்படி சலிப்பு தட்டுவதை மாற்ற புதுப்புது விஷயங்களிலும், செயல்களிலும் ஈடுபடலாம். ஒரே இடத்தில் இருந்து கொண்டு ஒரே மாதிரியான வேலைகளை செய்து கொண்டு இருந்தால் சலிப்பு ஏற்படத்தான் செய்யும். சிறிது நம் வாழ்க்கை முறையை, சூழலை மாற்ற முடிந்தால் சலிப்பு ஏற்படாது.
சலிப்பு ஏற்படும்போது செய்து கொண்டிருக்கும் வேலைகளை விட்டு சிறிது காலாற நடந்து வரலாம். அருகில் கோவில் இருந்தால் போய் அமைதியாக சிறிது நேரம் அமர்ந்துவிட்டு வரலாம். நல்ல புத்தகங்களை படிக்கலாம். தியானம், யோகா என செய்து பழகலாம். புதுப்புது மனிதர்களுடன் கலந்து பேசலாம்.
புது விஷயங்களை கற்றுக் கொள்ளலாம். சோசியல் மீடியாக்களில் அதிக நேரம் செலவழிப்பதை விட்டு ஆக்கபூர்வமாக ஏதேனும் வகுப்புகளில் சேர்ந்து புதிதாக கற்றுக் கொள்ளலாம். பிடித்த விஷயங்களை செய்வதுபோல் நமக்கு பிடித்த உணவுகளையும் வீட்டில் செய்து ருசிக்கலாம்.
இப்படி சாப்பிடுவது சலிப்பை போக்கி மனதில் ஒருவிதமான திருப்தியை ஏற்படுத்தும். நன்றாக சாப்பிட்டு ஒரு குட்டி தூக்கம் போட சலிப்பு காணாமல் போய்விடும். மனதிற்கு உற்சாகம் தரும் பாடல்களை கேட்கலாம். வாழ்க்கை வாழ்வதற்கே என்பதை உணர்வீர்கள்.
"மாத்தி யோசி" என்றொரு ஃபார்முலா உண்டு. அதை பின்பற்றலாம். வாழ்க்கையில் மகிழ்ச்சியும் இருக்கும் சலிப்பும் இருக்கும். போங்கடா போங்க என்று மனநிலையை சரியாக கையாளத்தெரிய வேண்டும். மனதை நம் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொள்ள பழக வேண்டும். வாழ்வில் சலிப்பு ஏற்படாமல் இருக்க தனிமையை குறைத்துக் கொள்ளலாம்.
நண்பர்கள் வட்டதை பெரிதாக்கிக் கொள்ளலாம். பிடித்த இசையை கேட்கலாம். ஒரு இலக்கை நிர்ணயித்துக் கொண்டு அதை நோக்கி முழு ஈடுபாட்டுடன் செயல்பட தொடங்கலாம். நேர்மறையான எண்ணங்களை வளர்த்துக் கொள்ளலாம். வாழ்க்கையை கஷ்டப்பட்டு வாழாமல் இஷ்டப்பட்டு வாழலாம்.
மொத்தத்தில் தனிமையிலே இனிமை காண முடியுமா? கூடி இருந்தால் கோடி நன்மை! ஒன்றாய் இருக்க கத்துக்கனும் இந்த உண்மையை சொன்னா ஒத்துக்கணும். காக்கா கூட்டத்தைப் பாருங்க அதுக்கு கற்றுக் கொடுத்தது யாருங்க! இதை நினைவில் வைத்துக் கொண்டால் போதும். சலிப்பா அப்படி என்றால் என்ன என்று கேட்கத்தோன்றும்.
சலிப்பின்றி வாழப்பழகுவோமா?