
காதலித்து திருமணம் செய்து கொள்வது, பெற்றோர் களாக பார்த்து திருமணத்தை நடத்தி வைப்பது, உறவுகளில் திருமணம் செய்து கொள்வது, எடுத்துப்போட்ட உறவு, சமீபகாலமாக மேட்ரிமோனி மூலமாக என்று திருமணத்தை பார்த்து பார்த்து நடத்துகிறோம். எல்லோரும் எப்பொழுதும் இன்பமுற்று இருக்கவேண்டும் என்பதுதான் எல்லோருக்கும் ஒரே ஆசை.
ஆனால் எல்லாவிதமான திருமண பந்தங்களிலும் உரசல், விரிசல் வருகிறது. வரத்தான் செய்யும். வராமல் இருக்க முடியாது? இரு வேறு தரப்பு பிறப்பு வளர்ப்பு முறைகள் வித்தியாசமானது. உணவுலிருந்து பழக்க வழக்கங்கள் மாறுபடுவது இயல்பு. அப்பொழுது கருத்து வேறுபாடு எல்லோருக்கும் ஏற்படும்தான். அதற்காக பிரிந்தே செல்ல வேண்டுமா என்ன?
அப்படி அவசரப்பட்டு பிரிந்து சென்றவர்கள்கூட சேர்ந்த சம்பவங்களும் நிறைய நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றது. எப்பொழுதுமே உறவுகளில் விரிசல் வராமல் இருக்கவேண்டும் என்றால் இரு தரப்பிலும் விட்டுக்கொடுத்துப் போவதுதான் சரியான அணுகுமுறை. கணவன் மனைவி இருவருமே வேலைக்கு செல்பவர்களாக இருந்ததால் வேலைகளை பகிர்ந்து செய்யும்பொழுது மனக்கசப்பு வராது. உறவு மேம்படும்.
அதேபோல் பிறந்தநாள், திருமணநாள் பரிசுகளை பரிமாறிக் கொண்டால் நெருக்கம் ஏற்படும். இருதரப்பு உறவினர்களையும் ஒரே மாதிரியாக வரவேற்று உபசரிக்கும்பொழுது பிணைப்பு ஏற்படும். இதனால் இரண்டு குடும்பங்களும் ஒற்றுமையாகும். அப்பொழுது அவர்கள் மணமக்களை எப்பொழுதும் ஒற்றுமைப் படுத்திக் கொண்டே, சந்தோஷப்படுத்தி கொண்டே இருப்பார்கள். இதை எந்த முறையில் திருமணம் செய்து கொண்டவர்களாக இருந்தாலும் சரி ஆரம்பத்தில் இருந்தே கொஞ்சம் கூட விட்டு விலகாமல் பின்பற்றி வந்தால் உறவுக்குள் கசப்பு என்பதே நிகழாது.
அப்படி எப்பொழுதாவது நிகழும் சமயத்தில், இதையெல்லாம் நினைத்து பார்க்கும் பொழுது ஆஹா! எப்படி எல்லாம் இருந்தோம். ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து வாழ்ந்தோம். ஏதோ சந்தர்ப்ப சூழ்நிலை இப்படி குறைபாடாக பேசிவிட்டோம் என்று இருவரும் மனது மாறி மன்னிப்பு கேட்டுக்கொண்டால் பிரச்னை தீர்ந்தது.
அங்கு ஈகோ பார்க்க கூடாது. நீயா நானா போட்டி தேவையில்லை. நீ பாதி நான் பாதி என்று சந்தோசமான தருணங்களில் பேசிக் கொள்வது அத்தோடு முடிந்து விடுவதற்கு அல்ல. இது போன்ற சமயங்களில் அதை நினைத்துப் பார்த்து வாழ்வதற்கும், திருத்திக் கொண்டு அடுத்த அடியை எடுத்து வைப்பதற்கும்தான்.
மின்சாரம் கண்ணுக்குத் தெரிவது இல்லைதான். ஆனால் நமக்கு தேவைப்படும் பொழுது விளக்கை எரிக்கிறது; விசிறியைச் சுழற்றுகிறது; ஏசியால் குளிர்விக்கிறது; குளிரில் இதமான வெந்நீரை தருகிறது. இருவரும் ஒருவருக்கு ஒருவர் அப்படித்தான் இருக்க வேண்டும்.
குறிப்பறிந்து செயல்படலாம். வாழ்வு இனிப்பதே அந்த குறிப்பறிதலில்தான். எதிர்பாராத நேரத்தில் ஒருவருக்கு பிடித்ததை மற்றொருவர் செய்து கொடுத்துப் பாருங்களேன். உன்னால் மட்டும் தான் எனக்கு இப்படி செய்து தரமுடியும் என்று புலகாங்கிதம் அடைந்து போவீர்கள். அதுதான் திருமண பந்தத்தின் சிறப்பு.
"செம்புலப் பெயல் நீர் போல" என்று திருமணத்தில் வாழ்த்துவதை மனதிற்கு கஷ்டம் வரும் நேரங்களில் நினைத்துப் பாருங்கள். அவ்வப்போது திருமண போட்டோக்களை எடுத்து பாருங்கள். அப்பொழுது நார் மலர்களை இணைப்பது போல் நாமும் நாரில் பூத்த மலர்களாக இருக்கவேண்டும் என்ற எண்ணம் ஏற்படும்.
பிரிவதற்கு ஆயிரம் காரணங்களை சொல்லிக்கொண்டு செல்லும் தம்பதிகளுக்கு இணைந்து வாழ்வதற்காக ஆயிரம் காரணங்கள் சொல்ல முடியாமல் இருக்கும் ? எதையும் நேருக்கு நேர் மனம் விட்டு பேசி தீருங்கள். இணை பிரியாது வாழ்ந்திருங்கள்!
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது!