
கவலையென்பது ஒருவகையான மனநோய். நினைப்பதற்கும் நடப்பதற்கும் இடையே காணும் முரண்பாடுதான் கவலைக்கு அடிப்படைக் காரணம், கலங்கி கண்ணீர் வடிப்பதனால் காரியம் எதுவும் ஆகிவிடப்போவதில்லை.
'கவலை மிகுந்த நினைவுகளைக் குழிதோண்டிப் புதைக்கவேண்டும். சிலையில் செதுக்கி வைத்துக் கொள்ளலாகாது' என்கிறார் வில்லியம்மாரே.
நாம் விரும்பாத செயல் நடக்கிறது; நடந்துவிட்டது என்ற நினைப்பே நம்மிடம் கவலையைத் தோற்றுவிக்கிறது.
'நமக்கு வெளியில் இருந்து வருகிற நோயைவிட நமக்கு உள்ளே இருந்து வருகிற மனநோயினால் உண்டாகும் ஆபத்துதான் அதிகம்' என்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள்.
ஆகையால் வீணாக எதைப்பற்றியும் மாறுபட்ட வகையில் எண்ணி எண்ணி, மனத்திற்குள் துன்பப்படக்கூடாது. மாறாக, அப்படித் துன்பப்படுவதால் செயலிலோ, செயலின் விளைவிலோ எந்த ஒரு மாற்றமும், பலனும் ஏற்படப்போவதில்லை.
நாம் குட்டையாக இருக்கிறோமே. இன்னும் ஒரு அங்குலம் இருந்தால் அந்த வேலைக்கு விண்ணப்பம் செய்திருக்கலாமே, செய்யமுடியாமல் போய்விட்டதே' என்று கவலைப்படுவதால் நம்முடைய உயரத்தைக் கூட்டிவிடமுடியுமா?
கவி தாகூர் இறைவனிடம் பின்வருமாறு வேண்டுகிறார். "இறைவா, அபாயங்களிலிருந்து பாதுகாக்கும்படி உன்னை நான் கெஞ்சமாட்டேன். ஆனால், அபாயங்களை எதிர்க்கக்கூடிய பயமற்ற தன்மையை எனக்குக்கொடு. வெற்றியை மட்டும் யாசிக்க வைத்து, என்னை வெறும் கோழையாக ஆக்கிவிடாதே. தோல்வியையும் ஏற்று, உன்னுடைய அருளால் வெற்றி அடையும் வாய்ப்பினையும் பெற அருள்புரிவாயாக!"
நம்மில் பெரும்பாலோர் செய்கிற சர்வ சாதாரணமான தவறு மற்றவர்களைப் பார்த்துப் பார்த்து ஏங்குவதுதான். இதுவே கவலையின் ஆரம்பம்.
நம்மைவிட வசதியாக வாழ்ந்து கொண்டிருப்பவர்களைப் பார்த்து அந்த வசதிகள் நமக்கு இல்லையே என்று மனத்திற்குள்ளேயே எண்ணி எண்ணி ஏங்கி கவலைப்பட்டுக் கொள்வதுதான், நம்மை பெரிய துன்பத்தில் ஆழ்த்துகிறது.
இப்படி கவலைப்பட்டுக் கொண்டிருப்பதிலேயே நம்முடைய காலத்தின் பெரும்பகுதியை ஓட்டி விடுகிறோமே அல்லாமல் நம்மிடம் இருப்பதைக் கொண்டு திருப்தி அடையத் தவறிவிடுகிறோம்.
நம்மிடம் இருக்கும் குறைந்த செல்வத்திலும், சின்னச் சின்ன வசதிகளிலும்கூட மன மகிழ்ச்சியைக் காணத் தொடங்கவேண்டும்.
நம்மிடம் இருப்பதில் நிறைவு காணும் இந்தப் பழக்கமே நம்முடைய வாழ்க்கை எப்போதும் திருப்தியானதாகவே, மகிழ்ச்சி நிரம்பியதாகவே இருக்கும்
எது உனக்கு அதிர்ஷ்டம் கொடுக்கவில்லையோ அதனைத் திருப்தியிடமிருந்து நீ பெற்றுக்கொள்" என்கிறார், ஆலிவர் கோல்ட் ஸ்மித்.
ஒருவன் இரவில் இருட்டை அனுபவிப்பதோடு நின்றுவிடாமல் பகலிலும், கதவுகள், ஜன்னல்கள் அனைத்தையும் மூடிவைத்துக் கொண்டு ஒளி உள்ளே புகமுடியாதபடி இருட்டை உருவாக்கிக்கொண்டு வாழ்ந்தால் அவனைப் பொருத்தவரையில் இரவும் பகலும் ஒன்றுதான்.
வாழ்க்கையில் முற்றிலும் துன்பத்தையும் துயரத்தையும் அனுபவிப்பதாகச் சொல்கிறவர்கள் இதைத்தான் செய்கிறார்கள். மகிழ்ச்சி என்கிற ஒளி உள்ளே நுழைய முடியாதபடி இதயக் கதவுகளை இவர்கள் இறுக்கமாக மூடிவைத்துவிடுகிறார்கள். அதற்குப் பிறகு எல்லாம் இருட்டாக இருக்கிறது என்று புலம்புவதில் என்ன நியாயம்?