வாழ்க்கை விதிகள் மாறுவதே இல்லை. வாழ்க்கை விதிகளின் பட்டியலை வள்ளுவரை விட நச்சென்று அழகாக விளக்கியவர் எவரும் இல்லை. இக்கட்டுரையில் வள்ளுவரை நாம் படிக்கப்போவதில்லை. சில வெளிநாட்டு தத்துவ மேதைகள், விஞ்ஞானிகள் கூறிச்சென்ற ஆழமான ஆர்வமூட்டக்கூடிய ஐந்து Laws பற்றித்தான் தெரிந்துகொள்ளப் போகிறோம்.
வானியல் பொறியாளரான மர்ஃபி துரதிர்ஷ்டங்களைக் குறிக்கும் விதமாகக் கூறிய விதி “Anything that can go wrong, will go wrong” என்பதாகும். தவறாகப் போக முடியும் என்றால் அது தவறாகப் போய்விடும். இது எதிர்மறையாகப் புரிந்துக் கொள்ளப்பட்டாலும், வாழ்க்கையின் கணிக்க முடியாத தன்மையை, என்னதான் திட்டமிட்டாலும், தவறாக முடிந்துவிடக் கூடும் என்பதை, மர்ஃபி குறிப்பிடுகிறார். வெற்றிகள் போல் தோல்விகளையும் தான் வாழ்வில் பார்க்க நேரிடும் இல்லையா?
அதனால் தோல்வி நார்மலானது; துவள அதில் ஏதுமில்லை என்ற கோணத்தில்தான் இந்த விதியை நாம் எடுத்துக்கொள்ள வேண்டும். தவறாக முடிந்துவிடக்கூடும் என்ற விழிப்புணர்வோடு நாம் ஒரு காரியம் செய்தால், சர்வ ஜாக்கிரதையாக அதில் நாம் ஈடுபடலாம் இல்லையா. இதற்கு எதிர்மறையாக “Everything that can work, will work” என்ற விதியையும் வேறொருவர் சொல்லிச் சென்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
“If you don’t have to make a decision, then don’t make a decision” இது Falkland கூறிய விதி. இதைப் பின்பற்றினால் over thinkers-கு நல்லது. முடிவு எடுக்கத் தேவையில்லை எனில் முடிவு எடுக்காதீர்கள். எல்லா பிரச்சனைகளும் தீர்க்கப்பட்டே ஆக வேண்டும் என்றில்லை. எல்லா வினாக்களும் விடையளிக்கப்பட்டே ஆகவேண்டும் என்றில்லை. எல்லா தூண்டல்களுக்கும் துலங்கியே ஆகவேண்டும் என்றில்லை. சும்மா இருந்தாலே பாதி பிரச்சனை தானாகவே சரி ஆகிவிடும் என்பதுதான் இந்த விதியின் உள் அர்த்தம்.
“Work expands to fill the time available for its completion” என்ற விதியை தான் Parkinson சொல்லி இருக்கிறார். ஒரு வேலையை முடிக்க எவ்வளவு நேரத்தை நாம் ஒதுக்கிக் கொள்கிறோமோ அந்த முழு நேரத்திற்கும் வேலை வளரும். ஒரே வேலையை ஒரு நாளிலும் முடிக்கலாம், ஒரு மாதத்திலும் முடிக்கலாம், ஒரு வருடத்திலும் முடிக்கலாம். ஒரு நாளில் முடிக்க வேண்டிய வேலைக்கு ஒரு வருடத்தை ஒதுக்கினால், ஒரு வருடத்திற்கும் அந்த வேலை நடந்து கொண்டே இருக்கும்.
“If you can write down the problem clearly, then it is half solved”. Kidlin கூறியுள்ள விதி இது. ஒரு பிரச்சனையை உங்களால் துல்லியமாக வார்த்தைப்படுத்தி எழுதிவிட முடிந்துவிட்டால், அதை தீர்க்க என்ன செய்ய வேண்டும் என்பதையும் உங்களால் தெளிவாக சிந்திக்க முடியும். பிரச்சனையே என்னவென்று புரியாமல்தான் தீர்வை நோக்கிப் போவதற்குத் தள்ளாடிக் கொண்டிருக்கிறோம். சரியான தீர்வு வேண்டுமானால் முதலில் பிரச்சனையை நாம் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்.
“If you keep putting information and intelligence at first all the time, money keeps coming in”. தகவல்களையும் புத்திசாலித்தனத்தையும் முதலீடு செய்து கொண்டே இருந்தால் பணம் தானாக வரும் என்பதை Walson கூறி இருக்கிறார். உழைப்பது அனைவரும் செய்வது. வித்தியாசத்தைக் கொண்டு வருவது தகவல்களும் புத்திசாலித்தனமும் தான் என்பது இவரின் கருத்து.
இந்த ஐந்து வாழ்க்கை விதிகளையும் நினைவில் கொண்டு செயல்பட்டால் வாழ்வின் போக்கே மாறிவிடும் என்பது பரவலான கருத்து. பிடித்தவர்கள் முயன்று பாருங்களேன்!