
கழுதைக்கிட்ட இருந்து கத்துக்கனுமா? ஒருவேளை கழுதையைப்போல உதைக்க வேண்டுமோ! என்று நினைக்கலாம். பாதுகாப்பு காரணங்களுக்காக நாம் உதைக்கவும் கற்றுக்கொண்டிருக்க வேண்டும். கழுதையிடம் இருந்து மட்டுமல்ல, காக்கையிடம் இருந்தும் குருவிகளிடமிருந்தும் கூட கற்றுக்கொள்ளலாம். ஒவ்வொரு விலங்குகளிலிருந்தும் ஏதோ ஒரு நற்பண்பை நாம் கற்றுக் கொள்ளலாம்.
கழுதை
கழுதை எப்போதும் தன் வேலையில் கவனமாக இருக்கும். அதன் வேலை பொதி சுமப்பதுதான். கடுமையான பாலை நிலமாக இருந்தாலும், கடுங்குளிர் பிரதேசமாக இருந்தாலும் கழுதை பொதி சுமக்க தயாராக இருக்கும். கடும் வெயில், மழை, குளிர் எதுவாக இருப்பினும் கழுதை தன் வேலையில் கவனமாக இருக்கும். சோர்வாக இருந்தாலும் கழுதை, அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் தொடர்ந்து உழைக்க தயாராக உள்ளது.
காகம்
காகம் எப்போதும் ஒற்றுமையின் சின்னமாக இருக்கிறது. ஒரு காகம் தனக்கு உணவு கிடைத்தால், அதை அமைதியாக தனியாக தின்று விட்டு செல்லாது. அது தனது கூட்டத்தினரை கரைந்து அழைத்து தனது உணவினை பகிர்ந்து கொள்கிறது.
காகம் உழைப்பின் அடையாளமாகவும் இருக்கிறது. சமூகத்தில் ஒற்றுமையாக இருப்பதுதான் பலம், அது இன்றி எந்த ஒரு மாற்றத்தையும் கொண்டு வரமுடியாது. ஒரு கூட்டத்தில் ஒற்றுமையை கொண்டு வருபவன், அந்த கூட்டத்தின் தலைவனாகிறான்.
கோழி
கோழியிடம் இருந்து கற்றுக்கொள்ள என்ன இருக்கு? என்று யோசிக்கலாம். புயல், மழை, வெள்ளம் என எந்த பேரிடர் வந்தாலும் சேவல் விடிகாலையில் கூவி ஊரை எழுப்ப தயாராக உள்ளது. அது தன் கடமையில் இருந்து ஒருபோதும் பின்வாங்குவது இல்லை. இது நேரம் தவறாமை மற்றும் சுயஒழுக்கத்தை குறிக்கிறது. ஒருவர் நேரத்தை சரிவர கடைபிடிக்க ஆரம்பித்தால், பின்னாளில் வெற்றி பெறும் மனிதராக இருப்பார். பெரும்பாலான வெற்றி பெற்ற மனிதர்கள் அனைவரும் நேரம் தவறாமையை கடைபிடிக்கின்றனர்.
குயில்
குயில் கூவும் சப்தத்தை விரும்பாதவர்கள் யாரும் இல்லை ,குயில் எப்போதும் கூவிக்கொண்டும் இருப்பதில்லை. குயிலின் குரல் அனைவருக்கும் பிடித்தமானது. தேவையாக நேரத்தில் குயில் தன் இனிமையாக குரலால் மற்றவர்களை மகிழ்விக்கிறது. அதுபோல அதிகம் பேசாமல் இருப்பதும், பேசும் நேரத்தில் இனிமையாக பேசுவதும் பிறரை கவரும் குணமாக இருக்கிறது. இனிமையான பேச்சு உடையவர்களை சுற்றி எப்போதும் ஒரு கூட்டம் இருக்கும்.
கொக்கு
ஓடுமீன் ஓட உறுமீன் வருமளவும் வாடி இருக்குமாம் கொக்கு என்று மூதுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. வரப்பில் நிற்கும் கொக்கு தன் காலுக்கு அடியில் நிறைய சிறிய மீன்கள் கடந்து சென்றாலும் அதை உண்ண கொத்தாமல் அமைதியாக இருக்கும், திடீரென்று பெரிய மீன் வரும்போது அதைக் கொத்திக்கொண்டு பறந்துவிடும். அது போல மனிதர்கள் சரியான இடம் பார்த்து, பெரிய வாய்ப்பு கிடைக்கும்போது உடனே அதை பற்றிக்கொள்ள வேண்டும்.
புலி
புலி இயல்பாக பதுங்கும் குணம் கொண்டது. அது வெளியே வந்தால் நிச்சயம் இரை அடிக்காமல் விடாது. புலியை எந்த விலங்கும் வீழ்த்துவதும் கடினம். புலியிடம் இருந்து அமைதியான பண்பினையும், சந்தர்ப்பம் பார்த்து வெற்றியை பறிக்கும் திறனையும் கொண்டிருக்க வேண்டும். புலியை போன்ற போர்க்குணம் மனதில் இருக்க வேண்டும். புலியின் வலிமையின் காரணமாகத்தான் சோழர்களும், நேதாஜியும் தங்களின் சின்னமாக கொடியில் பொறித்தனர். இந்தியாவின் தேசிய விலங்காகவும் பெருமைப் படுத்தப்படுகிறது.
நாய்
நன்றி, விசுவாசம் ஆகியவற்றின் அடையாளமாக நாய் உள்ளது. அது மட்டுமில்லாமல் எப்போதும் விழிப்புடன் உள்ளது. நாயின் குணங்களால் கற்காலத்தில் இருந்து கம்ப்யூட்டர் காலம் வரை மனிதர்களுக்கு துணையாக இருக்கிறது. மனிதர்களாகிய நாமும் நன்றியை மறந்து விடக்கூடாது. முதலில் வயதான காலத்தில் வளர்த்த பெற்றோர்களை கைவிடக் கூடாது. ஏற்றிவிட்டவர்களை என்றும் மறக்கக்கூடாது. எல்லோராலும் பெரிய மனிதராக ஆக முடியாது. ஆனால், நன்றி மறவாத நல்ல மனிதனாக இருக்க முடியும்.