
பூலோக வாழ்க்கையில் நம்மில் பலருக்கும் பல கவலைகள் உள்ளன. அதில் ஒரு கவலை “நமக்கு வயதாகிக்கொண்டே போகிறதே“ என்ற நினைப்பும் அடக்கம். நாற்பது வயதைக் கடந்த பலர் தலையில் ஓரிரு நரைமுடிகள் தென்பட்டால் மிகுந்த கவலைக்குள்ளாகி றார்கள். அதை மறைக்க பெரும் முயற்சியும் செய்கிறார்கள்.
வயதாவது என்பது நம் ஒவ்வொருவரின் வாழ்விலும் தவிர்க்க இயலாத நிகழ்வு என்பதை நாம் உணரவேண்டும். ஒவ்வொரு நாளும் நமக்கு ஒரு புதுவித அனுபவம் கிடைக்கிறது. இருபது வயது இளைஞனுக்கும் அறுபது வயது முதியவருக்கும் உள்ள வித்தியாசம் என்ன என்றால் அவர்களுக்கு உள்ள அனுபவமே. அதனால்தான் வயதானவர்கள் ஏதாவது சொன்னால் இந்த உலகம் கூர்ந்து கவனிக்கிறது.
பல வருடங்களுக்கு முன்னால் ஒவ்வொரு வீட்டிலும் வயதான தாத்தா பாட்டி முதலானோரே முக்கிய முடிவுகளை எடுப்பவராக இருந்தார்கள். அவர்களைக் கேட்காமல் எந்த ஒரு விஷயத்திலும் வீட்டில் உள்ள இளையவர்கள் முடிவெடுக்க மாட்டார்கள்.
இதற்குக் காரணம் அனுபவத்தின் அடிப்படையில் அவர்கள் சொல்லுவது சரியாக இருக்கும் என்பதுதான். ஒருவரைப் பார்த்தவுடன் அவர் நல்லவரா கெட்டவரா என்பதிலிருந்து ஒவ்வொரு விஷயத்திலும் அவர்கள் தங்கள் அனுபவத்தின் அடிப்படையில் விரைந்து சரியாக முடிவெடுக்கும் திறனைப் பெற்றிருப்பார்கள்.
நம் ஒவ்வொரு நாளையும் மகிழ்ச்சியாகக் கடக்கப் பழக வேண்டும். வயதாகிக்கொண்டே போகிறதே என்ற கவலைப்படுவதன் மூலம் ஏதாவது அதிசயம் நிகழுமா என்றால் நிச்சயம் அப்படி ஏதும் நிகழாது என்பதே நிதர்சனம்.
வயதானவர்கள் அனுபவம் பெற்ற மூத்தக்குடிமக்கள் என்ற காரணத்தினால் பல நாடுகளில் நல்ல மதிப்பும் மரியாதையும் தரப்படுகிறது. நமது நாட்டிலும் முதியோர்களுக்கு அரசு பல சலுகைகளை தந்து கௌரவிக்கிறது.
இந்த பூமியில் பிறந்த ஒவ்வொருவருமே தங்கள் வாழ்க்கையை வெற்றிகரமாக வாழ்ந்து முடித்து வயதானதும் ஒரு கட்டத்தில் இந்த பூமியிலிருந்து விடைபெறுவது காலம் காலமாக நடைபெற்று வரும் ஒரு தவிர்க்க இயலாத நிகழ்வாக இருக்கிறது.
உங்கள் கண்முன்னே உங்கள் பெற்றோர் வயதாகி உங்களைவிட்டு ஒரு கட்டத்தில் பிரிந்து சென்றதைப் போலவே நீங்களும் வயதாகி உங்கள் பிள்ளைகளை விட்டுப் பிரிந்து செல்லும் ஒரு காலம் வரும் என்பதை உணர்ந்து செயல்படுங்கள்.
எதற்கும் கவலைப்படாதீர்கள். எந்த சூழ்நிலையிலும் மனதை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள பழகிக் கொள்ளுங்கள். கவலைப்படுவதால் எதுவும் ஆகப்போவதில்லை என்பதை உணருங்கள். உங்கள் பிள்ளைகளை நல்ல குடிமக்களாக வளர்த்து அவர்களைச் சிறப்பாக படிக்க வைத்து ஒரு நல்ல வேலையில் அமர்த்தி சிறப்பாக வாழ வையுங்கள்.
தற்காலத்தில் வயதான பெற்றோர்களை பிள்ளைகள் முதியோர் இல்லங்களில் சேர்த்து விடுவது சாதாரண ஒரு நிகழ்வாகிவிட்டது. வயதாகிறதே என்று பலர் கவலைப்படுவதற்கு இதுவும் ஒரு காரணியாக அமைகிறது. நம்மையும் நம் பிள்ளைகள் ஒரு கட்டத்தில் முதியோர் இல்லத்தில் சேர்த்து விடுவார்களோ என்ற அச்சமே இதற்கு முக்கிய காரணமாக அமைகிறது.
நீங்கள் உங்கள் பெற்றோர்களை கண்ணும் கருத்துமாக கவனியுங்கள். அவர்களை ஒரு போதும் முதியோர் இல்லங்களுக்கு அனுப்பிவிடாதீர்கள். அப்படிச் செய்யும்போது இதைப் பார்க்கும் உங்கள் பிள்ளைகள் எதிர்காலத்தில் உங்களையும் கண்ணும் கருத்துமாக அன்பாக கவனிப்பார்கள். ஏனென்றால் ஒவ்வொரு பிள்ளையும் தங்கள் அப்பாவையே ரோல்மாடலாகப் பார்த்து வளர்கிறது என்பதை நினைவில் வையுங்கள்.
நடப்பதெல்லாம் நன்மைக்கே என்று நினைத்து ஒவ்வொரு விநாடியையும் மகிழ்ச்சிகரமாக வாழப்பழகுங்கள். உங்களுக்கு மட்டுமா வயதாகிறது. உங்களோடு சேர்ந்து இந்த பூமியில் வாழும் அனைவருக்கும்தானே வயதாகிறது. இதை நினைவில் வைத்து வாழப் பழகுங்கள். எந்த சூழ்நிலையிலும் நீங்கள் நீங்களாகவே இருக்கப் பழகுங்கள். மகிழ்ச்சி உங்கள் வாழ்வில் பூத்துக்குலுங்கும்.