ஒருவன் குணநலத்தில் சிறந்து வளர்வதையே தனது குறிக்கோளாகக் கொண்டால், பிறநலன்கள் அனைத்தும் அவனுக்கு எளிதாகக் கைகூடும்.
உடல் நலமும், அறிவு நலமும், உணர்வு பக்குவமும் இவைபோன்ற பிறவும் குண நலம் உயர உயர தாமாகப் பெருகி வளரும். அவனது வாழ்க்கையில் நீதியும், நேர்மையும், உண்மையும், அன்பும், கடமை கண்ணியமும், கட்டுப்பாடும் பிற நற்பண்புகளும் தோன்றிச் சிறக்கும். அவனது சிந்தனையும், சொல்லும், செயலும் உயர்வுடையனவாக இருக்கும். வாழ்க்கையோ உயர்ந்த வாழ்க்கையாக இருக்கும்.
உயர்ந்த குறிக்கோள் என்பது இளமையிலே எல்லோருக்கும் ஏற்பட்டுவிடும் என்று கூறமுடியாது. கற்றறிந்த பெற்றோர்கள் இளம் வயதிலேயே தம் பிள்ளைகளுக்கு உணர்த்த வேண்டும். கல்விச் சூழல் சிறப்பாக அமைந்தால் அக்குறிக்கோள் மனதில் பதியும்.
வாழ்க்கையில் குறிக்கோள் இருப்பது சிறப்பு என்பதை செல்லத்தக்க நாணயமாக மதிப்பீடு செய்வார்கள் அறிஞர்கள். ஒரு நாணயத்திற்குத் தலையும், பூவும் என இரண்டு பகுதிகள் அவசியம் இருக்க வேண்டும். அவ்வாறு இருக்கவில்லை என்றால் அது மதிப்புடைய நாணயமாக மதிக்கப் பெறுவதில்லை.
குறிக்கோளுடைய வாழ்வின் வெற்றியின் மதீப்பீடும், நாணயத்தின் மதிப்பீட்டைக் குறித்துக் காட்டும் எண்ணும் ஒன்றே என்பதை எடுத்துச் சொல்ல வேண்டியது இல்லை.நாணயம் எதேனும் ஒரு மதிப்பீட்டைப் பெற்றிருக்க வேண்டும். செல்லத்தக்க நாணயம் போல் நாமும் மதிக்கத் தக்கவர்களாக வாழ வாழ்க்கைக்கும் ஒரு குறிக்கோள் வேண்டும்.
'தன்னை உணர்ந்தவன் தலையெடுப்பான்' என்று முன்னோர் கூருவார்கள். தன்னிலையை உணர்ந்து கொள்ளுதல் வேண்டும்.அதற்கேற்ற முறையில் தன் வாழ்க்கைக்கான குறிக்கோளை வகுத்துக் கொள்ளுதல் வேண்டும். தன்னால் இதைச் செய்ய முடியும் என்ற நம்பிக்கையில் குறிக்கோள் உருவாகவேண்டும்.
விளையாட்டுகளில் கிரிக்கெட் விளையாட்டு ஒன்றாகும். இந்த விளையாட்டில் பந்து வீச்சாளன், மட்டைபிடிப்பவன் என்று விளையாட்டு வீரர்கள் தனிப்பட்டவர்களாவார்கள். அவரவர்களின் குறிக்கோளும் வேறு வேறாகும்.
பந்து வீசுபவன் தன் வெற்றிக்கு, பந்தை எவ்வாறு வீச வேண்டும் என்று எண்ணுகின்றான், அதே குறியாக இருக்கின்றான். மட்டை பிடித்தவனுக்கோ பந்து எப்படி வந்தால் எப்படி அடிக்கவேண்டும் என்பதே குறியாகும். இருவரின் குறிக்கோளும் 'வெற்றிபெற வேண்டும்' என்னும் பொதுக் குறியை உடையதானாலும், அவரவரின் செயல்முறைகள் வேறு வேறாகும்.
வாழ்வின் குறிக்கோளாக ஒன்றைத் தேர்ந்தெடுத்துக் கொள்பவன். அதை நிறைவேற்றும் துடிப்பு உடையவனாக இருக்க வேண்டும்.
பயணத்தை மேற்கொண்ட ஒருவன். குறிப்பிட்ட இடத்தை அடையும் முன்னே நெடுந்தூரம் செல்ல வேண்டுமோ என்ற மன அச்சத்தை ஏற்படுத்திக் கொள்ளக் கூடாது.
அதுபோலவே அவனுடைய துடிப்பும், அடங்கக் கூடாது. மலைப்பை ஏற்படுத்திக் கொள்ளக் கூடாது. அவனது குறிக்கோளின் வெற்றிச் சிந்தனைத் துடிப்பு, உறங்கும் போதும், உண்ணும் போதும் நிழல் போல நினைவில் நிலைக்க வேண்டும். இந்த நினைவு அவனுக்குத் தனியாற்றலைக் கொடுக்கும்.
அந்நினைவின் தூண்டல் அவனுக்கு நீங்கா உணர்வாகி நல்ல சுகத்தைக் கொடுக்கும், அவனுக்குத் தோன்றும் சலிப்பை நீக்கும் சஞ்சீவியாகவும் அமையும்.