
இன்றைக்குக் கல்வி முறையின் நோக்கம் என்னவென்றால் இருப்பதையெல்லாம் மனிதனுக்கு சாதகமாக பயன்படுத்துவதுதான். கண்ணுக்குப் புலப்படாத வைரசாக இருந்தால் கூட அதிலிருந்து தனக்கு என்ன ஆதாயம் கிடைக்கும் என்று மனிதன் ஆராய்கிறான்.
ஒரு காகம், ஒரு பட்டாம்பூச்சி, ஒரு மனிதன் மூவரும் ஒரே நேரத்தில் இறந்தனர். படைத்தவன் முன் அவர்கள் நிறுத்தப்பட்டனர். கடவுள் பட்டாம் பூச்சியிடம் எங்கே போகவேண்டும் என்று கேட்க அது" பூமியில் பல மகரந்த சேர்க்கைக்கு நான் உதவினேன். எனக்கு. சொர்க்கம் கிடைத்தால் சந்தோஷம்" என்றது.
காகத்திடம் கேட்க "பல விதைகளை நான் துப்பியதால் காடுகள் உருவாகின. எனக்கும் சொர்க்கம் போகவேண்டும் " என்றது.
மனிதனிடம் எங்கே போகவேண்டும் என்று கேட்க அவன் "ஹலோ நீ உட்கார்ந்திருப்பது என் நாற்காலி எழுந்திருங்கள்" என்றானாம். கடவுள் தன் வடிவத்தில் இருப்பதாக கற்பனை செய்து கொண்டிருப்பதால் அவனுக்கு அளவற்ற அகம்பாவம். மற்ற ஜீவராசிகளைத் தாண்டிய திறன் இருப்பதால் தன்னைக் கடவுளாகவே நினைத்து விட்டான். தன் நலம் ஒன்றையே சிந்தித்து தனக்கு ஒத்து வராததை அழிக்க முனைந்துவிட்டான்.
உண்மையான கல்வி ஆண்பெண் இருபாலரையும் மேம்படுத்துவதாக இருக்கவேண்டும். எந்த ஒரு தனி நபரையும் உருவாக்குவோம் என கல்வியமைப்பு நின்றுவிடவில்லை. அவரோடு சேர்ந்து இருப்பவரையும் முன்னேற்றுமவதற்காக கல்வி அமைந்திருந்தது. நான் எனது என்று பார்க்கும் கல்வி சமூகத்துக்கோ குடும்பத்துக்கோ உகந்தது அல்ல. முறையான கல்வியோ, ஒற்றுமையோ, உடல்வளமோ, முனைப்போ, நோக்கமோ இல்லாமல் கோடிக்கணக்கான மக்கள் புழுங்கிக் கொண்டிருந்தால் எந்த நாடும் முன்னேற முடியாது.
அதே கோடிக்கணக்கான மக்கள் கற்றவர்களாக, ஒழுக்கமுள்ள வர்களாக, சிறந்த உடல் நலத்துடன் ஒர் அர்ப்பணிப்போடு செயலாற்றும் வர்க்கமாக விளங்கினால் எப்பேர்ப்பட்ட அத்புதங்களை நிகழ்த்தலாம்.
ஒரு குருகுலத்தில் பயின்ற சீடர்கள் நீச்சல் பயிற்சிக்குப் புறப்பட்டனர். ஒவ்வொருவராக நதியில் குளித்து நீந்தி கரைசேர வேண்டும் என்பதே அந்தப் பயிற்சி. ஒரு குறிப்பிட்ட சீடன் மட்டும் கடைசியில் நிற்பதை குரு கவனித்தார்.
ஒரு நாள் அவனை அழைத்து நீதான் முதலில் குதிக்க வேண்டும் என்றார். அவன் நடுங்கி நிற்க அவனை தண்ணீரில் தள்ளி விட்டார். என்ன ஆச்சர்யம். அவன் அனாயாசமாக நீந்தினான். குரு சொன்னார் "உடனடியாக பொறுப்பெடுத்துக் கொண்டு கவனிக்கவேண்டிய சில வேலைகள் உண்டு.
அந்த நேரங்களில் தாமதம் ஆபத்தானது தயக்கத்தை உடைத்து உடனடியாகச் செயல்பட வேண்டும்" என்றார். நம்மால் செய்ய முடியாததை செய்யாது இருந்தால் தவறில்லை. செய்யக் கூடியதை செய்யாமல் இருப்பது மாபெரும் குற்றம்.
பொறுப்பற்ற அறிவுதான் உலகின் பல அழிவுகளுக்குக் காரணமாகிறது. பொறுப்புணர்வு, மற்றவரிடம் கருணை, எல்லோரிடத்திலும் அன்பு இவற்றை வளர்க்க முடியாத கல்வி ஆபத்தானது. முழுமையான அர்ப்பணிப்புடன் முனைந்தால் நாம் கனவு காணும் சூழலை நாம் கொண்டுவர முடியும். கல்வி என்ற மாபெரும் சக்தியால் அது சாத்தியமாகும்.