
உலகில் வாய்ப்புகள் நிறைந்து உள்ளது. நாம்தான் அதைக் கண்டு கொள்வது இல்லை. கொஞ்சம் மூளையை உபயோகப்படுத்தினால் நாமும் வாழ்வில் முன்னேற்றம் காணலாம்.
பொதுவாக அனைவரும் சொல்லும் ஒரே வார்த்தை சின்ன வயதில் இதுவாகணும், அதுவாகணும் என்று ஆசைப்பட்டேன். ஆனால் பிறகு அதெல்லாம் கனவாகப் போய்விட்டது. வாழ்க்கை முடிந்துவிட்டது இனிமேல் என்ன இருக்கிறது என்று புலம்புவார்கள். முதலில் அந்த எண்ணத்தில் இருந்து வெளியே வரவேண்டும். நீங்கள் ஏதாவது ஆசைப்பட்டு இருந்தால் ஒருநாள் நிச்சயம் அது உங்கள் கைவசமாகும்.
அதற்கான வாய்ப்புகளை நீங்கள் உருவாக்க வேண்டும். நடந்துபோன செயல்களில் ஏற்பட்ட தோல்விகளை விட்டு விட்டு இனி நடக்கப்போகும் செயல்களை எப்படி வெற்றிகரமாக செயல்படுத்துவது என்று முடிவு செய்ய வேண்டியது நாம்தான்.
அதுதான் உண்மை. எத்தனை இடர்பாடுகள் வந்தாலும், அத்தனையையும் தாங்கிக்கொண்டு மீண்டு வரத்தான் வேண்டும். மனிதனுக்கு இக்கட்டான சூழ்நிலையில்தான் மூளை அதில் இருந்து விடுபட சுறுசுறுப்பாக இயங்கி வழியைக் காண்கிறது.
ஆகவே துன்பம் வரும்போது துவண்டுவிடாமல் சுறுசுறுப்பாய் இயங்க வேண்டும். மனோதிடம் இருந்தால் எந்தச் சூழ்நிலையையும் எளிதில் சமாளித்துவிடலாம் என்பதை அவ்வப்போது நினைவூட்டுகின்றனர் நம்மைச் சுற்றியிருக்கும் சிலர்.
தொழிலிலும், வாழ்க்கையிலும் வெற்றி அடைய வாய்ப்பு என்பது முக்கியத் தேவையாக இருக்கிறது. வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்வதற்கும், வெற்றிக்கும் இடையே தொடர்பு இருக்கிறது.
ஜப்பானைச் சேர்ந்த கோட்டானி மகோட்டோ, என்பவர் சில ஆண்டுகளுக்கு முன்பு பிழைப்புதேடி டோக்கியோ நகரத்திற்கு வந்தார். குடி இருக்க வீடு இல்லை. கையில் காசு இல்லை.
எத்தனையோ வேலைகளுக்கு விண்ணப்பித்தும் வேலை கிடைக்கவில்லை. சிந்தனை செய்தார். கொஞ்சம் வித்தியாசமாக தன்னையே வாடகைக்கு விட முடிவு செய்தார்.
“நான் வேலை அற்றவன். நகைச்சுவை உணர்வு மிக்கவன். உங்களை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்திருக்க என்னால் முடியும். நீங்கள் கொடுக்கும் வேலைகளை செவ்வனே செய்வேன்.
உணவும், தங்கும் இடமும் அளித்து, மாதம் 500 ரூபாய் சம்பளம் கொடுத்தால் எனக்குப் போதும்” என்று சமூக வலைதளத்தில் வெளியிட்டார். நிறையப் பேர் கோட்டானியைத் தொடர்பு கொள்ள ஆரம்பித்தனர். ஓரிரு நாட்களிலிருந்து ஒரு வாரம், ஒரு மாதம் வரை இவரை வாடகைக்கு எடுத்தார்கள்.
500 ரூபாய் மிகவும் குறைவான ஊதியம் என்பதால் உடைகள், செருப்பு, போன் கட்டணம் என்று பலவற்றையும் தாங்களாகவே விரும்பிச் செய்கிறார்கள். உலகம் அன்பால் ஆன மக்களால் நிறைந்தது என்பதைக் கண்டு கொண்டேன்.
இதுவரை எந்த வாடிக்கையாளரும் மோசமாக என்னை நடத்தியதில்லை என்றார். ஆம். தன்னம்பிக்கை உள்ளவர்களே வாய்ப்பைச் சரியாக பயன்படுத்திக் கொள்கிறார்கள். நம்பிக்கை இல்லாதவர்களோ கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தத் தெரியாமல் அல்லல்படுகின்றார்கள்.
வாய்ப்பு நம்மைத்தேடி வராது. நாம்தான் தேடிப்போக வேண்டும். நம்பிக்கையுடன் இருப்பதாகக் கூறி, வரும் வாய்ப்புகளை தட்டிக் கழிக்கக்கூடாது. வாய்ப்புகள் வரும் எனக்காத்து இருப்பதைவிட, வாய்ப்புகளை நாம் உருவாக்கிக்கொள்ள வேண்டும்.