
வாய்ப்பு என்பது நமக்கு ஒரு முறைதான் வரும். அதை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்பவர்கள்தான் வெற்றியாளராக உருவாகிறார்கள். இந்த வாய்ப்பு வேண்டாம் அடுத்த வாய்ப்பு வரும் என்று நாம் தள்ளிப்போட்டால் நிச்சயமாக மீண்டும் அந்த வாய்ப்பு வருவது என்பது கடினம்தான்.
நமக்கு வாய்க்கும் வாய்ப்பை அதை எப்படி பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று சாமர்த்தியமாக செயல்பட்டு அந்த வாய்ப்பை நாம் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் அப்படி வாய்ப்பை சரியாக பயன்படுத்தி ஹரோல்ட் ராபின்ஸ் எப்படி முன்னேறினார் என்பதை பற்றி இப்பதிவில் பார்ப்போம்.
ஹரோல்ட் ராபின்ஸ்' என்றவர் தன் இளமைப் பருவத்தில் குதிரைப் பந்தயத்தில் சூதாட வருகிறவர்களுக்கு எடுபிடி வேலைசெய்து வாழ்ந்து வந்தவர். ஆனால், அவரது உள்மனம் ஒரு எழுத்தாளனாக மாறவேண்டும் என்று ஆவல் கொண்டிருந்தது.
தன் ஆவலைச் செயல்படுத்தும் விதமாக அமெரிக்காவில் வெளிவந்த திரைப்படங்களை மையமாக வைத்து 'கனவு வியாபாரிகள்' என்று பொருள்பட்ட ஒரு நாவலை எழுதினார். அவரது நாவல் வெறும் கதையாக இல்லாமல் ஆழமான பல உண்மை நிகழ்வுகளை உள்வைத்து எழுதப்பட்டது. சினிமா வரலாறு, அதில் ஈடுபட்ட மனிதர்கள், சந்தித்த வாழ்க்கை நிகழ்வுகள் என்று பல அதிசயிக்கக் கூடிய செய்திகள் அந்த நாவலின் போக்கில் மெருகூட்டின.
அவர் தொடர்ந்து எழுத எழுதக் கற்பனைகளோடு கூடிய வார்த்தைகளும், சிந்தனைகளும் வந்து விழுந்தன. தொடர்ந்து அவரது எழுத்துக்கள் காதல், கருப்பர்களின் வாழ்க்கை நிலை, குண்டர்களின் சமூகச் சீரழிப்புகள் என்று பல விஷயங்களைப் பற்றி விரிந்தது. விரைவில் அமெரிக்காவின் புகழ்பெற்ற எழுத்தாளராகத் திகழ்ந்தார் "ஹரோல்ட் ராபின்ஸ்.”
நல்ல எழுத்தாளர்கள் எழுதுவதற்கு முன்பு நன்கு சிந்திக்கின்றார்கள், நிறைய வாசிக்கின்றார்கள். அனுபவம் அதிகமாகின்றபோது எழுத்தாளர்களின் வார்த்தைகளும், கற்பனை வளங்களும் 'வானமே எல்லை' என்று விரிவடைகின்றன.
"ஒரு வாய்ப்பு இரண்டு தடவை உன் கதவைத் தட்டாது" இரண்டாவது வாய்ப்புக்காக காத்திருக்காதீர்கள் முதல் வாய்ப்பே பயன்படுத்துங்கள் அதுவே உங்களுக்கு வெற்றியாய் அமையும்.