
மனித வாழ்க்கையானது நிலையற்றது. ஏழை திடீரென பணக்காரன் ஆவதும். பணம் படைத்தவன் ஏதோ ஒரு வகையில் எதிா்பாராமல் நஷ்டமடைவதும் உண்டு. அது இறைவன் வகுத்த நியதி.
நமது ஒவ்வொரு செயலுக்குப் பின்னால் அதற்கான பாவ புண்ணிய கணக்குகள் நமது கணக்கில் வரவு வைக்கப்படுவது நிஜம். இதன் அடிப்படையில் நிதானம் தவறாமல் வாழ்வதும் முடிந்தவரை தான தர்மங்கள் செய்வதும் நல்ல பலனைத்தரும். தான தர்மங்கள் செய்யும் அளவிற்கு என்னிடம் வருவாய் அதிகம் இல்லை, அன்றாடம் பொழுதை கழிப்பதே மிகவும் சிரமமாக இருக்கிறதே!
நான் எப்படி தானதர்மம் செய்ய இயலும் என சிலர் கேட்பதும் காதில்விழுகிறது. அதற்கும் உாிய உபாயம் நம்மிடம் உள்ளதே.
ஆம். நம்முடைய மனதும், எண்ண ஓட்டமும், சுத்தமாக இருந்தால் போதும்.
காலை எழுந்தவுடன் இறைவனிடம் நாம் வேண்டும்போது இன்றைய பொழுது நல்லபொழுதாக அமையவேண்டும் என கோாிக்கை வைப்போம். அதோடு சோ்த்து இறைவனிடம் உலகில் என்னைச் சாா்ந்தவர்கள் மட்டுமல்லாது, அனைத்து ஜீவராசிகளும் உறவுகளும் நட்புகளும் நன்றாக வாழவேண்டும் என வேண்டுங்கள், அதுவே நீங்கள் பல விஷயங்களில் தர்மம் செய்ததற்கு ஈடாகும்.
தர்மம் தலைகாக்கும் என்பாா்கள், நமது குணநலன்களில் அடுத்தவருக்கு தீங்கு செய்யாதிருப்பது, அடுத்துக் கெடுக்காத நிலையை கடைபிடிப்பது, போன்ற நிலை பாடுகளில் உறுதியாய் இருங்கள் அதுவே காலத்திற்கும் நல்லது.
அதேநேரம் பொய் பேசாதீா்கள், உண்மையைப் பேசுங்கள், தொடர்ந்து உண்மைக்கு புறம்பான செயல்பாடுகளால் இன்று நமக்கு சந்தோஷம் வரலாம். ஆனால் ஒரு சமயம் அதுவே நமக்கு எதிாியாகிவிடுமே!
அடுத்துக்கெடுக்கும் புத்தியை கையாளவேண்டாம். அதுவும் இன்றைய தினத்தில் சந்தோஷம்கொடுக்கலாம்.
அதுவே நிலைமாறும் உலகில் நிலைக்காமல் போய்விடும் என்பதை உணர்ந்து செயல்படுவதே நல்லது. வஞ்சக எண்ணம், நயவஞ்சகப் பேச்சு, மனதில் ஒன்றை வைத்துக்கொண்டு வெளிவேஷம் போடுவது, இவையெல்லாம் அற்ப சந்தோஷமே தரும்.
அது ஒரு வகையிலும் நிலைக்காது. அதனால் வரும் செல்வங்களும் நிலைக்காது. வந்த வழியே போய்விடுமே!
இவை அனைத்தையும் தொிந்துதான் மனிதன் தனது மன ஓட்டத்தை மாற்றி தவறு செய்கிறான். அப்படி சோ்த்து வைக்கும் பாவமானது தலைமுறையை பாதிக்கும் என்பதை உணரவேண்டும்.
ரத்த ஓட்டம் நன்றாக இருக்கும்போது ரத்தத் திமிறில் செய்வதறியாத, நெறிமுறை தவறிய செயல்பாடுகளில், மனிதன் தன்னை ஈடுபடுத்திக்கொள்வது நல்லதல்ல. யாா் கணக்கில் இருந்தும் தப்பிக்கலாம் இறைவன் போட்ட கணக்கிலிருந்து தப்பவே முடியாது.
ஒரு முனிவரும், அவரது சீடரும், காட்டுப் பக்கம் போனாா்கள் அப்போது நல்ல மழைபெய்ததால் ஒரு குடிசை பக்கம் நின்றாா்கள்.
அந்த மழையில் ஒரு தேள் நனைந்தபடியே ஓடியது,உடனே முனிவர் அந்த தேளை பிடித்து மழை பெய்யாத இடத்தில் கொண்டுபோய் விட்டாா். அந்த தேளோ அவரைக் கொட்டியது அதேபோல மூன்று முறை இவர் அதை காப்பாற்றுவதும் அது திரும்பத்திரும்ப அவரை தன் கொடுக்கால் கொட்டியது. அப்போது அவரது சீடன் அவரைப் பாா்த்து கேட்டான் நீங்கள் பாவம் பாா்த்து தேளை காப்பாற்றினீா்கள், அது உங்களை திரும்பத் திரும்ப கொட்டியதே என்றான். அதற்கு அந்த முனிவரோ கள்ளங்கபடு இல்லாமல் சிாித்தபடியே, கொட்டுவது அதன் குணம் அதைக்காப்பாற்றுவது என்னுடைய குணம் என சொன்னதாக கதைகளில் வரும்.
அதேபோல எவ்வளவு துயரங்கள் வந்தாலும் நாம் கொண்ட கொள்கையிலிருந்து மாறாமல் உண்மையைப் பேசி நல்ல நெறிமுறைகளுடன் அடுத்துக்கெடுக்கும் குணத்தை கைவிட்டு, பொய்யைக்குறைத்து, மனசாட்சிக்கு பயந்து, வாழ்ந்து வந்தாலே போதும், இறைவன் நமக்கு துணையாய் இருப்பாா் என்பது நிச்சயம்.
இதைத்தான் கவிஞர் ஒரு பாடலில் உண்மையைச்சொல்லி நன்மையைச் செய்தால் உலகம் உன்னிடம் மயங்கும் என சொல்லியிருப்பாா். அதன்படி வாழந்து காட்டலாமே சரியா அன்பர்களே!