
தங்கள் குழந்தையின் கூச்ச சுபாவத்தை மாற்றுவதற்காக பெற்றோர்கள் தன்னம்பிக்கை மற்றும் சமூகத் திறன்களை வளர்க்கும் பல உத்திகளை செயல் படுத்தலாம். முதலில் குழந்தையை கூச்ச சுபாவம் கொண்டவர் என்று அடையாளப்படுத்துவதையும் அழைப்பதையும் அவசியம் தவிர்க்க வேண்டும்.
ஏனென்றால் அதைக் கேட்டு வளரும் குழந்தைகள் தாங்கள் கூச்ச சுபாவம் மிக்கவர்கள் என்கிற எண்ணத்தை தங்களுக்குள் ஆழமாக பதிய வைத்துக் கொள்வார்கள். அதனால் அவர்கள் அதில் இருந்து வெளியே வர முயற்சி எடுக்கவே மாட்டார்கள்.
1. சமூகத் திறன்களை கற்றுத்தருதல்;
பிறரோடு எளிதாக தொடர்புகொள்ளும் வகையில் குழந்தைகளை ஊக்குவிக்க வேண்டும். அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்கள் மற்றும் உறவினர்களை நண்பர்களை பார்த்தால் 'ஹலோ' சொல்வது, புன்னகைப்பது, வீட்டிற்கு வரும் விருந்தினர்களை வரவேற்பது, 'உட்காருங்கள்' என்று அமரச் சொல்வது, 'நல்லா இருக்கீங்களா? தண்ணி கொண்டு வரட்டுமா?’ என்கிற அடிப்படையான உரையாடல்களை குழந்தைகள் மேற்கொள்ள கற்பிக்க வேண்டும்.
சிறு குழந்தைகளாக இருந்தால் பொம்மைகளை அவர்களிடம் தந்து அவற்றுடன் பேசிப் பழகச் சொல்லலாம். இது வேடிக்கையாக இருந்தாலும் உரையாடல்களைப் பயிற்சி செய்வதற்கான ஒரு நல்ல வழியாகும்.
2. சுய மரியாதையை ஊக்குவித்தல்;
பொதுவாக தன்னம்பிக்கையும் சுயமரியாதையும் குறைவாக இருக்கும் குழந்தைகளுக்கு கூச்ச சுபாவம் அதிகம் இருக்கும். எனவே அவர்களுக்கு சுயமரியாதையை வளர்த்துக்கொள்ளும் வழிமுறைகளை சொல்லித்தர வேண்டும். தன்னுடைய மனதில் இருக்கும் எண்ணங்களை தைரியமாக வெளியில் சொல்வது, தன்னம்பிக்கையுடன் நடந்து கொள்வது, பேசுவது போன்றவற்றை பெற்றோர் கற்றுத் தர வேண்டும்.
3. மென்மையாக திருத்துதல்;
குழந்தைகள் ஏதாவது தவறு செய்துவிட்டால் அதைப் பெரிதுபடுத்தி, தண்டிக்காமல், பிறர் முன் கண்டிக்காமல் தனியே அழைத்து மென்மையாக தவறை சுட்டிக்காட்ட வேண்டும். இது போன்ற செயல்கள் அவர்களின் தன்னம்பிக்கையை ஊக்குவிக்கும். கூச்ச சுபாவத்தையும் குறைக்கும்.
4. திறமைகளை ஊக்குவித்தல்;
ஒவ்வொரு குழந்தைக்கும் தனிப்பட்ட திறமைகள் இருக்கும். அதை சரியாக கண்டறிந்து அவர்களை ஊக்குவித்து பாராட்ட வேண்டும். சில குழந்தைகள் நன்றாக ஓவியம் வரைவார்கள். சிலர் நன்றாக பாடுவார்கள். நடனம் ஆடுவதில் ஆர்வம் இருக்கும். சில குழந்தைகளுக்கு படிப்பை விட விளையாட்டில் ஆர்வம் இருக்கும். அவர்களுக்கு ஆர்வமும் பிடிப்பும் உள்ள விஷயங்களில் சரியாக ஊக்குவித்தால் அவர்கள் அதில் திறமைசாலியாக வர வழி ஏற்படுவதுடன் கூச்ச சுபாவமும் குறையும்.
5. பொறுப்புணர்வை வளர்த்தல்;
குழந்தைகளுக்கு வீட்டிலேயே சிறு சிறு வேலைகளை செய்யுமாறு கற்றுத் தர வேண்டும். அது அவர்களது பொறுப்புணர்வை வளர்ப்பதுடன் தங்களால் செயல்களை சரியாக செய்ய முடியும் என்கிற நம்பிக்கையையும் தருகிறது.
6. குழந்தைகளுடன் நேரம் செலவழித்தல்;
என்னதான் வீடு நிறைய பொம்மைகளை வாங்கித் தந்து அவர்களை மகிழ்வித்தாலும் பெற்றோர் பிள்ளைகளுடன் சிறிது நேரமாவது செலவழித்து விளையாடுவது, அவர்கள் சொல்வதை கேட்பது, பாடம் சொல்லித்தருவது போன்றவற்றில் ஈடுபட்டால் தான் குழந்தைகள் உற்சாகமாக இருப்பார்கள். தங்கள் மனதில் இருக்கும் கவலைகளையும் தயக்கத்தையும் பகிர்ந்து கொள்வார்கள்.
7. கற்பித்தல்;
புதிய சூழ்நிலைகளில் அவர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை பொறுமையாக கற்பிக்கலாம். வீட்டுக்கு புதிதாக வரும் நபர்களிடம் குழந்தைகளை நிறையப் பேசுமாறு வற்புறுத்துதல் கூடாது. அதற்கு பதிலாக அவர்கள் ஓரிரு வார்த்தைகள் பேசினாலே அவர்களை ஊக்குவித்துப் பாராட்டலாம்.
8. குறையல்ல;
கூச்ச சுபமுள்ளவராக இருப்பது ஒரு குறையல்ல என்பதை தெளிவாக அவர்களுக்கு எடுத்துரைக்க வேண்டும். பிறருடன் நன்றாக பேசிப் பழகினால் நிறைய நண்பர்கள் கிடைப்பார்கள், சமூக தொடர்புகளுக்கு எளிதாக இருக்கும் என்கிற விஷயத்தை மென்மையாக எடுத்துரைத்து அவர்களை மெல்ல மெல்ல கூச்ச சுபாவத்திலிருந்து வெளியே வர வைக்கவேண்டும்.