நடைபாதையில் பார்வை இழந்த ஒருவர் எதிர்சாரிக்குப் போகக் காத்திருந்தார். அவருக்கு உதவ நினைத்த ஒருவர் அவரிடம் சென்று, தன்னுடையக் கையைப் பிடித்துக் கொள்ளுமாறும், சாலையைக் கடக்க உதவுவதாகவும் சொன்னார். அவருக்கு நன்றி சொன்ன மாற்றுத் திறனாளி, அவருடைய கையைப் பற்றிக் கொண்டார்.
இரண்டாமவர், தன் இயல்புப்படி வேகமாக முன்னே செல்ல, அவருடைய கையைப் பற்றியபடி வந்த பார்வையிழந்தவர் அந்த வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் திணறினார். ஒரு கட்டத்தில், தன் கையை உதறிக்கொண்டு, ‘‘இந்தாப்பா, நீ எனக்கு உதவ வந்தியா, உபத்திரவப்படுத்த வந்தியா?’’ என்று கடுமையாகக் கேட்டார்.
இதைக் கேட்டதும் இவருக்குக் கோபம். சுற்றிலும் எல்லோரும் பார்ப்பதால் அவமானமும்கூட! உடனே, "உனக்குப் போய் உதவ வந்தேன் பாரு, என்னைச் சொல்லணும்", என்று வெறுத்துச் சொன்னார்.
உடனே மாற்றுத் திறனாளி, ‘‘ஐயா, நீங்க எனக்கு உதவறீங்க; ரொம்ப சந்தோஷம். ஆனா, உங்க வேகத்துக்கு என்னால வரமுடியாத என் இயலாமையைப் புரிந்துகொண்டு அதற்கு ஏற்றபடி என்னை அழைத்துப் போனால்தானே எனக்குச் சரியாக உதவினாற்போல இருக்கும்? ஒரு நிமிஷம் நீங்க கண்களை மூடிக்கொண்டு நடந்து பாருங்க, உங்களுக்கு என் கஷ்டம் புரியும்,’’ என்று அமைதியாக விளக்கினார்.
அதைக்கேட்டு வெட்கப்பட்ட இவர், ‘‘உண்மைதான் சார், மன்னிச்சுடுங்க. வாங்க, போகலாம்,‘‘ என்று சொல்லி, மிகவும் தன்மையாக, "இங்கே பள்ளம், இங்கே மேடு", என்று சொல்லி, அக்கறையோடு, நிதானமாக அழைத்துச் சென்று எதிர்சாரியில் பாதுகாப்பாகக் கொண்டு சேர்த்தார்.
மனித உடலில் பல்வேறு காரணங்களால் ஊனம் ஏற்படுகின்றது. ஆனால் சிலருக்கு அதனுடனேயேதான் வாழ்ந்தாக வேண்டும் என்ற நிர்ப்பந்தம் இருந்தாலும், அவர்களும் திறமை படைத்தவர்கள், சாதிக்கக் கூடியவர்கள் என்பதற்குப் பல உதாரணங்கள் உண்டு. அவர்கள் எதிர்பார்ப்பதெல்லாம், அவர்களுடைய குறையை பிறர் மறந்து, தம்மைப் போலவே அவர்களையும் நடத்த வேண்டும் என்பதுதான்.
இந்தியாவில் 2.55 கோடி மாற்றுத் திறனாளிகள் வாழ்வதாக அறிய முடிகிறது. இவர்களுடைய நலனுக்காக மத்திய அரசு பல்வேறு நலத்திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. இதற்காகவே சமூக நீதி அமைச்சகத்தின் ஓர் அங்கமாக மாற்றுத் திறனாளிகளுக்கான புதிய நலத்துறை உருவாக்கப்பட்டிருக்கிறது. தலைமை ஆணையர் நிர்வகிப்பில் எட்டு மண்டல அலுவலகங்கள் செயல்படுகின்றன. எட்டு இடங்களில் பயிற்சி மையங்கள், 200 மாவட்டங்களில் மாற்றுத் திறனாளிகளில் நல்வாழ்வு அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. இந்தத் திட்டங்களின் மூலம், மாற்றுத்திறனாளிகள் தாம் இயல்பான வாழ்க்கையை மேற்கொள்ளத் தேவையான உபகரணங்கள், உதவித் தொகைகள், சலுகைகள், முன்னுரிமைகள் எல்லாம் வழங்கப்படுகின்றன. மனிதாபிமான அடிப்படையில் இவர்களை நம் குடும்பத்தவராக, நம் நண்பராக நடத்தும்போது அவர்கள் மனத்தெம்பு பெறுகிறார்கள்; அதோடு அவர்களின் பங்களிப்பு தேசிய வளர்ச்சிக்கும் உதவுகிறது என்பது தற்போது அறியப்பட்டுவரும் இனிப்பான உண்மை.
அவர்களுக்கு எந்தத் தாழ்வு மனப்பான்மையும் வந்துவிடக் கூடாது என்பதற்காகவே அவர்களை ‘மாற்றுத் திறனாளிகள்’ (differently abled) என்று அழைக்குமாறு அரசு ஒரு விதி செய்தது. அது மட்டுமல்லாமல், அவர்களுக்கு இருக்கக்கூடிய பல திறமைகளை வெளிக்கொண்டுவரும் வகையில் பல திறனறிவு போட்டிகளும் நடத்தப்பட்டு அவர்களுடைய வாழ்வில் புது மலர்ச்சியை உருவாக்கி வருகிறது.
பொதுவாகவே ஒரு மாற்றுத் திறனாளியின் குறையை விமரிசித்து மகிழும் குரூர சந்தோஷம் முற்றிலுமாக மறைந்து வருவது பெரிய ஆறுதல். எழுத்து, நாடகம், சினிமா, தொலைக்காட்சி போன்ற பொழுதுபோக்கு அம்சங்களில் அப்படி விமரிசிப்பது குற்றம் என்று கொண்டு வரப்பட்ட ஒரு கண்டிப்பான சட்டம், அவர்கள் மனதைப் புண்படாமல் காத்து வருகிறது. இதனால் அவர்கள் மீதான இரக்கம், அக்கறையாக, சமுதாயப் பொறுப்புணர்வாக மாறி அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்து கொடுத்து, நம்மில் ஒருவராகவே பிற அனைவரும் பாவிப்பதற்கும் வழி செய்திருக்கிறது.
இப்படி அவர்களைச் சற்றும் புறக்கணிக்காமல், சமுதாயத்தின் ஓர் அங்கமாக நடத்தும்போது, அவர்களுக்குள் அவர்களே அறியாமல் ஒளிந்து கொண்டிருக்கக்கூடிய பல திறமைகள் வெளிப்படுகின்றன, அதனால் நம் சமுதாயமே பயனடைகிறது என்பதையும் மறுக்க முடியாது.