
தன்னம்பிக்கை ஒரு மனிதனுக்கு முக்கியம் என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை. ஆனால் அது முட்டாள்தனமானதாகவோ, மூர்க்கத்தனமானதாகவோ, அறிவற்றதானதாகவோ இருத்தல் கூடாது. அவ்வாறு இருந்தால் உங்கள் தன்னம்பிக்கை உறுதியாக இருக்காது. அத்துடன் அது வெற்றிக்கனியைப் பறிக்கவும் உதவாது. மேலும் அந்தக் குருட்டுத்தனமான தன்னம்பிக்கையே உங்களைப் படுகுழியில் தள்ளிவிடும்.
இதனை உணர்ந்து, உங்கள் தன்னம்பிக்கை, திட்டமிட்ட, அறிவுபூர்வமானதாக இருக்க வேண்டும். இதே ஜனநாயகம் அந்தக் காலத்திலும் இருந்திருக்கிறது ஒரு தேசத்தில். அங்கு பதவியில் இருக்கும் மன்னருக்கு ஐந்தாண்டுகள் மட்டுமே ஆட்சி செய்யும் உரிமை. அதன்பிறகு மறுபடியும் அவரால் மன்னர் பதவியை நினைத்தே பார்க்க முடியாது.
அதுமட்டுமல்லாமல், அவர் குடிமக்களுக்கு எத்தனை நன்மைகளைச் செய்திருந்தபோதிலும், பதவிக்காலம் முடிவடைந்த பின்னர், அங்கு ஓடிக்கொண்டிருக்கும் நதியைத்தாண்டி இருக்கும் பயங்கர காட்டிற்குச் சென்றுவிட வேண்டும். பயங்கர காடு என்றால், கொடிய மிருகங்கள் உலவும் காடு. அங்கு சென்றால் அதன்பிறகு உயிருடன் திரும்ப முடியும் என்ற எண்ணமே வேண்டாம். கண்டிப்பாக மரணம்தான்.
ஆகையால் யாரும் மன்னராக முடி சூட்டிக்கொள்ள முன்வரவில்லை. ஆனால் ஒருவர் மட்டும ஆட்சிப் பொறுப்பேற்றார். ஐந்து ஆண்டுகள் முடிந்து காடு செல்ல வேண்டிய நேரம் வந்து படகில் ஏறி மகிழ்ச்சியாக அமர்ந்தார். இதைப் பார்த்த படகோட்டி நீங்கள் எப்படி இவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள் எனக் கேட்டான்.
அதற்கு அந்த மன்னர் ஆட்சியில் இருந்த ஐந்தாண்டுகளில் அந்த காட்டில் சில மாற்றங்களைச் செய்துள்ளேன். எப்படியும் பதவிக்காலம் முடிந்ததும் அந்தக் காட்டிற்குச் செல்லவேண்டும் என்பது உறுதி. அங்கு போய் மற்றவர்களைப்போல நானும் மடிந்துதான் ஆகவேண்டுமா என்று சிந்தித்தேன். எனவே வீரர்கள் சிலரை அங்கு ரகசியமாக அனுப்பி வைத்து, கொடிய மிருகங்களைக் கொல்லுமாறு உத்தரவிட்டேன். குடியானவர்கள் சிலரை அனுப்பி, நிலங்களில் விவசாயம் செய்யுமாறு பணித்தேன். மேலும் மக்கள் வசிப்பதற்கேற்ப வீடுகள் மாட மாளிகைகள் கட்டுமாறு முயற்சிகளை மேற்கொண்டேன். அரசு அதிகாரிகள் பலரை அங்கு அனுப்பி வசிக்கச் செய்தேன். இப்பொழுது அங்குபோய் நான் நிம்மதியாக வாழப்போகிறேன் எனக் கூறினார்.
இப்படியொரு வழக்கம் அந்த தேசத்தில் இருந்த எத்தனையோ மன்னர்கள் அக்கரையில் உள்ள காட்டில் விடப்பட்டு, தங்கள் உயிரை இழந்திருக் கிறார்கள். இது சரித்திரம். இதுதான் தலைவிதி என்றும் அனைவரும் நினைத்தனர்.
ஆனால், இந்த மன்னனோ, மாத்தி யோசித்தான். ஏன் சாக வேண்டும்? அங்கு வாழ முடியாதா? அதற்கான வசதி வாய்ப்புகளை ஏற்படுத்தினால் என்ன? என்று யோசித்தான். இதனை செயல்படுத்துவதற்கு தன்னம்பிக்கை வேண்டும். ஏனென்றால் ஒரு பயங்கரமான காட்டையே திருத்தி நாடாக்குவது என்றால் அத்தனை எளிதான காரியமல்லவே!
ஆனால் அதனை இந்த மன்னன் துணிச்சலுடன் மேற்கொண்டிருந்தான். துணிவே துணை என்று களத்தில் இறங்கி செயல்படுத்தி இருந்தான். மனத்துணிவும், செயல்திட்டமும், கடினஉழைப்பும், தளராத நெஞ்சமும் கொண்டிருந்த காரணத்தால்தான் அந்த மன்னனால் இதனைச் சாதிக்க முடிந்தது.