நேர்மறை எண்ணங்கள்: உங்கள் மனதை மகிழ்ச்சி எனும் பட்டாம்பூச்சியாக மாற்றும் எளிய வழிகள்!

Man on the terrace in the morning
- நேர்மறை எண்ணங்கள்
Happy Man - நேர்மறை எண்ணங்கள்AI Image
Updated on

தோட்டத்தில் பூக்கும் மலர்களை, வண்ண வண்ண பட்டாம் பூச்சிகள் சுற்றி வருவதைப் பார்க்கும்போது சிலநொடிகள் நம் மனதில் உற்சாகம் பிறக்கும். அதுபோலத்தான், மனம் அமைதியாக, நேர்மறை எண்ணங்கள் நிறைவாக இருக்கும் போது மகிழ்ச்சியென்ற உணர்வைவையே நாம் பரிபூரணமாக அனுபவிக்க முடியும்.

நாம் மகிழ்ச்சியாக இருக்க பெரியபெரிய காரணங்கள் தேவையில்லை. முதன் முதலாக ரீல்ஸ் போடுபவருக்கு ஆயிரம் லைக்ஸ் வந்தால் கிடைக்கும் சந்தோஷமும், ஆஸ்கார் விருது கிடைத்தால் வரும் சந்தோஷமும் ஒன்றே. ஏனென்றால், மகிழ்ச்சிக்கு அளவீடு ஏதும் இல்லை. அதை நாம் உணர்வுப் பூர்வமாகதான் அறிய முடியும்.

நாம் பயணம் செய்யும்போது, நம் அருகே அமர்ந்துள்ள குழந்தை அறிமுகமே இல்லாமல், நம்மோடு சிரித்து விளையாடினால் அந்தப் பயணமே இனிமையாக இருக்கும். எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாத அந்த குழந்தையின் அன்புதான் அனைவரையும் மகிழவைத்தது. 'மகிழ்வித்து மகிழ்' என்ற கூற்றுக்கு ஏற்ப, நம்மை சுற்றியுள்ள அனைவரையும் நம் நேர்மறை எண்ணத்தோடும், அன்பாலும் சந்தோசப்பட வைக்கும் போது, உடல்நலம், மனநலம் நன்கு ஆரோக்கியமாக இருக்கும்.

நம்முடன் பணியாற்றுபவர்களின் திறமையை அவ்வப்போது பாராட்டும் போது, அந்த சூழ்நிலையையே சந்தோஷமாக வைத்துக் கொள்ள முடியும். ஊக்கப் படுத்தும் சில நல்ல வார்த்தைகள், பொது நிகழ்ச்சிகளில் கிடைக்கும் கைதட்டல்கள் என அனைத்தும் மகிழ்ச்சிக்கான வித்து.

ஒரு பெண், வியாபாரத்திற்காக பலூன்களை எடுத்துக் கொண்டு போகும் போது, அவை கை நழுவி பறக்க ஆரம்பித்தது. பதட்டதோடு அந்தப் பெண் சாலையில் ஓடினாள். இதனை கார் ஓட்டி வந்தவர் கவனித்து, காரை நிறுத்தியதோடு, பலூன்களையும் பிடித்துக் கொடுத்தார். அந்தப் பெண் நன்றியோடு பெற்றுக் கொண்டாள். அவர் திருப்பிவந்து, காருக்குள் ஏறும்போது அவரது இருக்கையில் ஒரு பலூன் இருந்தது. அவர் புன்னகையுடன் திருப்பிப்பார்க்க அவளைக் காணவில்லை.

பின் அலுவலகத்தில் காரை நிறுத்தும் பொழுது, அவரைக் கடந்து சென்ற குழந்தைக்கு அந்த பலூனைக் கொடுத்தார். குழந்தை மகிழ்ச்சியோடு வாங்கிக்கொள்ள, அதைப் பார்த்த அம்மா புன்னகையுடன் நன்றி தெரிவித்தார். பிறகு அவர்கள் மகிழ்வோடு பாதையில் நடக்க, அங்கு அமர்ந்திருந்த ஒரு குழந்தையைப் பார்த்தனர். உடனே தன்னிடமிருந்த பிஸ்கட் பாக்கெட்டை குழந்தைக்குக் கொடுத்தாள் அம்மா.

இதையும் படியுங்கள்:
மகிழ்ச்சி என்பது அடுத்தவர் கையில் இல்லை: உங்களுக்குள் இருக்கும் நிம்மதியை மீட்டெடுப்பது எப்படி?
Man on the terrace in the morning
- நேர்மறை எண்ணங்கள்

ஆனந்தமாக தன் மகள் பெற்றுக் கொண்டதை கவனித்த தாய், விற்பனைக்கு வைத்திருந்த பலூனில் ஒன்றை, பிஸ்கட் கொடுத்த அம்மாவின் குழந்தைக்குத் தந்தாள். மீண்டும் ஒரு பலூன் என, இரு கைகளிலும் பலூனைப் பிடித்து மகிழ்ந்தது அந்தக் குழந்தை. மகிழ்ச்சி என்பது இருமடங்காக பெருகிக் கொண்டே போகும் என்பதற்கு எடுத்துக்காட்டு தான் இந்த நிகழ்வு.

நாம் முதலில் மகிழ்வோடு இருந்தால் தான், நம்மைச் சுற்றி உள்ளார்களையும் சந்தோஷமாக வைத்துக் கொள்ள முடியும். 'எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா' என்ற மகாகவி பாரதியின் வரிகளுக்கு ஏற்ப, இயற்கையை ரசிக்க கற்றுக் கொள்ள வேண்டும். அழகான நிகழ்வுகளை, காட்சிகளை கவனிக்காமல், காலச்சக்கரத்தின் ஓட்டத்தில் சாதாரணமாக அவைகளை நாம் கடந்து விடுகின்றோம்.

Heart with Butterfly | நேர்மறை எண்ணங்கள்
Heart | நேர்மறை எண்ணங்கள்AI Image

நம்முடைய தேவைகளும், விருப்பங்களும் நிறைவேறினால் மட்டுமே மகிழ்ச்சியாக இருப்பேன் என எண்ணினால் மன அழுத்தமே மிஞ்சும். நம் உடல், மன நலத்திற்கு நாமே பொறுப்பு என உணர்ந்து புன்னகைக்க கற்றுக்கொள்வோம். நம் வாழ்க்கை வளம் பெற, தோட்டத்தில் மட்டும் அல்லாமல், மனதிலும் மகிழ்ச்சி எனும் பட்டாம் பூச்சியை பிடித்து வைத்துக் கொள்வோம்.

logo
Kalki Online
kalkionline.com