
மனக்கதவை திறக்கும் திறவுகோலாக சிந்தனை உள்ளது. மனிதர்களின் வாழ்வை செம்மைப்படுத்துவது சிந்தனையும், செயலும்தான். ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போன்று இவை இரண்டுமே அவசியம். சிந்தனை ஆற்றல் படைத்த மூளைதான் நமக்கு எதை எப்பொழுது பேச வேண்டும்; எப்பொழுது மௌனம் காக்க வேண்டும் என்பதை கற்றுத் தருகிறது. நம்முடைய ஒவ்வொரு செயலுக்கும் அடிப்படையாக இருப்பது நம்முடைய சிந்தனை தான். நற்சிந்தனை கொண்டால் மனம் தெளிவாகும்; வாழ்க்கையும் செழிக்கும். வாழ்க்கை செழிக்க ஒரு லட்சியத்தை உருவாக்கி அதை நோக்கி செல்ல வேண்டும். அதற்கு தெளிவான நல் சிந்தனை அவசியம்.
சிந்தனையின் விரிவால்தான் உலகம் முழுவதும் இன்று பல துறைகளில் முன்னேற்றம் காண முடிகிறது. நல்ல எண்ணங்கள் உருவாவதற்கும், செயல்கள் உருவாவதற்கும் நற்சிந்தனையே அடிப்படைக் காரணமாக அமைகிறது. நேர்மையான சிந்தனையே சிறந்த வாழ்வியல் முறையாகும். மனிதர்கள் சிந்திக்க சிந்திக்கத்தான் விதியின் பிடியிலிருந்து விடுபட முடியும். சிந்தனை செய்தால் தான் தீவினை அகலும்.
நற்சிந்தனையே நல்ல மனிதரை உருவாக்கும். எல்லாவிதமான செயல்களுக்கும் சிந்தனையே அச்சாணியாகத் திகழ்கிறது. நற்சிந்தனையை வளர்த்துக் கொண்டால் இவ்வுலகில் நல்ல வண்ணம் வாழலாம். தெளிவான சிந்தனை நம் எண்ணத்தையும், மனதையும் அமைதியாக்கும்.
எங்கு சிந்தனை இல்லையோ அங்கு முன்னேற்றமோ, வளர்ச்சியோ காண முடியாது. மனிதர்களுடைய சாதனை எல்லாமே சிந்தனையின் ஆற்றலைக் கொண்டுதான் விளைகிறது. மன ஆரோக்கியமுடன் வாழ நினைத்தால் ஆரோக்கியமான சிந்தனை செய்வது அவசியம். தவறான சிந்தனை தவறான வழியில் கொண்டு செல்லும்.
நம் எண்ணங்களின் பிறப்பிடமான மனத்தை நல்ல சிந்தனை ஓட்டத்துடன் வைத்துக்கொள்ள வேண்டும். மனம் என்பது ஒரு குரங்கு. அதனை அதன் இஷ்டத்திற்கு செல்ல அனுமதிக்கக் கூடாது. நல்ல மனதுடன் தெளிவாக சிந்திக்கும் ஆற்றல் பெற்றால்தான் மன வலிமை பெருகும். மனமும் உடலும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. மனதில் நல்ல சிந்தனைகள் உருவானால்தான் உடல் ஆரோக்கியமாக இருக்கும். மனமும் உடலும் மக்கர் செய்யாமல் சுமுகமாக வேலையை செய்யும்.
அப்துல் கலாம் அவர்கள் கூறியது போல் சிந்திக்க தெரிந்தவர்களுக்கு ஆலோசனை தேவை இல்லை. துன்பங்களை சந்திக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கையில் தோல்வி இல்லை.
சிந்தனை என்பது நம் மனத்தில் தோன்றுவது. ஒவ்வொரு செயலையும் செய்வதற்கு முன் சிந்தித்து அதன் பலன்களை கணித்து செயலாற்ற வேண்டும். சிலர் அடுத்தவர்கள் என்ன செய்ய வேண்டும் என்று தெளிவாக சிந்தித்து அவர்களை கண்காணிப்பார்கள். இப்படி செய், அப்படி செய்தால் நல்லது என்று கூறி குடைச்சல் கொடுப்பார்கள். ஆனால் அவர்களுடைய கடமைகளை மட்டும் சௌகரியமாக மறந்து போவார்கள். தங்களைப் பற்றி அதிகம் சிந்திக்காமல் பிறரை கண்காணித்துக் கொண்டே இருப்பது சரியான முறையாகாது.
வாழ்க்கையில் எந்த பிரச்சனை வந்தாலும் எளிதில் உடைந்து நொறுங்கி விடாமல், இந்த சிக்கல் நம்மை சிதைக்க வந்தது அல்ல; செதுக்க வந்ததுதான் என்றெண்ணி சிந்தித்து செயலாற்ற தீவினைகள் அகன்றிடும். சிந்திக்க வேண்டும் அப்பொழுதுதான் ஒருவன் மனிதனாகிறான். சிந்திக்கவே இல்லையென்றால் நமக்கும் மிருகங்களுக்கும் வித்தியாசம் இல்லை. அதற்காக மனதில் தோன்றும் அனைத்து சிந்தனை மற்றும் எண்ணங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. வாழ்க்கைக்கு அவசியமான, முக்கியமான சிந்தனைகளுக்கு மட்டுமே வலு கொடுத்து அதைப் பற்றி சிந்தித்து செயலாற்றினால் வெற்றி பெற முடியும்..