

வாழ்க்கையில் நாம் பலரைப் பார்த்திருப்போம். அவர்களில் ஒரு சிலர் நேர்மறை வார்த்தைகளைப்(Positive words) பயன்படுத்துவார்கள்; சிலரோ எதிர்மறை வார்த்தைகளையே பயன்படுத்துவார்கள். பொதுவாக, எதிர்மறை வார்த்தைகளைப் பயன்படுத்துபவர்களிடமிருந்து விலகி இருப்பதையே நாம் விரும்புவோம்.
மற்றவர்கள் மனம் நோகாதவாறு நேர்மறை வார்த்தைகளைப் பயன்படுத்திப் பழகிக்கொள்வோம். அதற்கான சில உதாரணத் தொகுப்புகள் இதோ:
பேருந்தில் பயணிக்கும்போது ஒருவர் உங்கள் காலைத் தவறுதலாக மிதித்துவிடுகிறார். உடனே நீங்கள், ”ஏன்யா! உனக்குக் கண்ணில்லையா? குருடா?” என ஏகவசனத்தில் திட்டினால் அவரின் மனம் வேதனையடையும். அந்த மனவேதனை ஏற்படாமல் இருக்க, “சார்! உங்கள் கால் என் காலைப் பதம் பார்த்துவிட்டதே!” என நாசுக்காகச் சொன்னால், அவரும் உடனே உங்களிடம் மன்னிப்பு கேட்பார். இதனால் உங்கள் காலில் ஏற்பட்ட வலியையும் நீங்கள் மறந்துவிடுவீர்கள்.
உங்கள் வீட்டு வாசலில் ஒருவர் நின்று, ”அம்மா! தாயே! அன்னபூரணி, மகாலட்சுமி...” என யாசகம் கேட்டுக் கொண்டிருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். உடனே அவரிடம், ”எதுவுமில்லை, போப்பா!” என எரிச்சலுடன் விரட்டிவிடாதீர்கள். அப்படி விரட்டினால் உங்கள் வீட்டு மகாலட்சுமியே பின்வாசல் வழியாக வெளியேறி விடுவாள் என்பது பெரியோர்களின் வாக்கு.
அதற்குப் பதிலாக, ”நாளைக்கு வாப்பா! உனக்கு சோறு போடுகிறேன்” எனச் சொல்லிப் பாருங்கள். அவர் முகத்தில் இருள் படியாது; சூரியனைப் போல முகம் மலரும்.
உங்கள் வீட்டில் ஒரு சுப நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளீர்கள். அதை உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் அலைபேசி வழியாகத் தெரிவிக்க வேண்டும். அப்போது அழைப்பை ஏற்றுப் பேசும்போது, ”ஹலோ! ஒண்ணுமில்லப்பா...” எனத் தொடங்காதீர்கள்.
பேசத் தொடங்கும்போதே, “ஹலோ! வணக்கம், ஒரு நல்ல சுப விஷயம்தான்!” என்று ஆரம்பியுங்கள். அந்த நேர்மறைத் தொடக்கம், உங்கள் வீட்டு நிகழ்வு இறுதி வரை தங்குதடையின்றி மகிழ்ச்சியாக நிறைவேற வழிவகுக்கும்.
ஒரு சாலையோரத் தேநீர்க்கடை. வியாபாரம் படுஜோராகத்தான் நடந்து வந்தது. ஆனால், கடைக்காரர் ஒரு அறிவிப்புப் பலகையை வைத்த சில நாட்களில் வியாபாரம் சரிந்துவிட்டது. அவர் கவலையில் ஆழ்ந்தார். ஒருநாள் அதிகாலையில் அவருக்குப் புரிந்தது—அந்த அறிவிப்பு வாசகம்தான் வியாபாரத்தைப் பாதித்துள்ளது என்று!
முதலில் அவர் வைத்திருந்த வாசகம்:
”மூன்று போண்டா எடுத்துவிட்டு, இரண்டு போண்டா எனச் சொல்பவன் திருடன்!”
இதை மாற்றத் தீர்மானித்து, இப்படி எழுதினார்:
”எடுத்ததை மறைக்காமல் சொல்லுங்கள் ஏற்றம் பெறும் எம் வாழ்வு!”
இந்த மாற்றத்திற்குப் பிறகு மீண்டும் வியாபாரம் அமோகமானது.
எந்த வணிக நிறுவனமாக இருந்தாலும் வாடிக்கையாளர்கள் கடன் கேட்பது இயல்பு. கடனைத் தவிர்க்க, "கடன் அன்பை முறிக்கும்", "கடன் உடன் பகை" போன்ற வாசகங்களை வைத்திருப்பார்கள்.
ஆனால், மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள ஒரு அலைபேசி கடையில், வாடிக்கையாளர்கள் மனம் புண்படாதவாறு நேர்த்தியாகவும் நேர்மறையாகவும் இப்படி எழுதியிருந்தார்கள்:
“இந்தியா வல்லரசு ஆகும் வரை கடன் கிடையாது!”
இந்த வாசகம் அனைவரின் பாராட்டையும் பெற்றது. அதுபோலவே நீங்களும் எதிர்மறை வார்த்தைகளைத் தவிர்த்து, மாற்றி யோசித்து நேர்மறை வார்த்தைகளைப் பயன்படுத்துங்கள். பாராட்டுக்களை அள்ளுங்கள்!