பற்றாக்குறை பட்ஜெட்டும் பகட்டான செலவுகளும்: நாட்டை மீட்கும் வழிகள்!

The Secret to Banishing Debt
The Secret to debt management Img credit: AI Image
Published on
Kalki Strip
Kalki Strip

வீடோ… நாடோ… வருமானத்திற்குள் செலவு செய்தால் பிரச்னையின்றி அமைதியாக வாழலாம். செலவுகள் அதிகரிக்கும் பொழுது கடன் வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு விடுகிறது. அந்தக் கடனை நாம் இரண்டாகப் பிரித்துப் பார்க்கலாம். தவிர்க்க முடியாத கடன் மற்றும் தவிர்க்கக் கூடிய கடன். திடீரென்று குடும்பத்தில் ஒருவருக்கு எதிர்பாராத நோய், கார், பைக் விபத்துகளால் மருத்துவச் செலவு, குழந்தைகளின் படிப்புச் செலவு ஆகியவற்றைச் செய்ய கையில் காசில்லை என்றாலும் கடன் வாங்கியாவது செய்துதான் ஆக வேண்டும். இவையெல்லாம் தவிர்க்க முடியாத கடன்.

இருக்கின்ற ‘டூ வீலரே’ போதுமென்றாலும், கார் வைத்திருந்தால் ப்ரஸ்டீஜ் கூடுமென்று நினைத்துக் கடனில் கார் வாங்குவது; ஏற்கெனவே 55 இன்ச் டிவி இருந்தாலும் எதிர்த்த வீட்டில் 65 இன்ச் வாங்கி விட்டார்கள் என்பதற்காக உடனடியாக அதனைக் கடனில் மாற்றுவது; பெருமைக்காக, அதிகப் பயன் தராத பொருட்களைக் கடனிலாவது வாங்கி வீட்டை அடைப்பது என்று தவிர்க்கக் கூடிய கடன் லிஸ்டில் ஏகப்பட்டது வரும்.

வீடுகளில் இப்படியென்றால், இதுவே நாட்டு நிர்வாகத்துக்கும் பொருந்தும். மருத்துவம், கல்வி, வேளாண்மை, நீர்ப்பாசனம் போன்ற துறைகளைக் கடன் வாங்கியாவது முன்னேற்றத்தான் வேண்டும்.

தங்கள் காலத்தில் கட்டப்பட்டதாகப் பெருமை பீற்றிக் கொள்ள வேண்டுமென்பதற்காகத் தேவையற்ற கட்டடங்களை அதிகப் பொருட் செலவில் கட்டுதல்; ஒரு முச்சந்தியையும் விட்டு விடாமல் சிலைகள் அமைத்தல்; தங்கள் கட்சியும் ஆட்சியும் நிலைக்க வேண்டுமென்பதற்காகத் தேவைப்படாதோருக்கும் இலவசங்களைக் கொடுத்து, கஜானாவைக் காலி செய்து விட்டு, கடன் வாங்கும் விதமாகப் பற்றாக்குறை வரவு-செலவுத் திட்டம் (Deficit Budget) போடுதல் என்று ஆட்சியாளர்களின் தவிர்க்கப்படக் கூடிய கடனையும் அடுக்கிக் கொண்டே போகலாம்.

இதையும் படியுங்கள்:
நீதித்துறையின் மீது மக்கள் நம்பிக்கை இழப்பது ஏன்? NCERT பாடப்புத்தக விவகாரத்தில் நடந்தது என்ன?
The Secret to Banishing Debt

செலவு அதிகரிக்கும்போது, வருமானத்தை உயர்த்தச் சிந்தனை செய்து அந்த வழிகளைப் பின்பற்ற வீட்டாரும், நாட்டாரும் முன்வர வேண்டும்.

நாட்டு வருமானத்தை உயர்த்த நமக்குத் தெரிந்த சில உபாயங்களைப் பார்ப்போமா?

யாம் பார்த்தவரை, எல்லா நகரங்களிலும் மேல் நிலை நீர்த்தொட்டிகள் (Over Head Tanks) சுமார் நான்கைந்து மாடிகள் உயரத்தில் கட்டப்பட்டுள்ளன.

மிகப் பெரிதான அவை, கீழேயிருந்து எழுப்பப்பட்டுள்ள பல கான்க்ரீட் தூண்களின் பலத்தில்தான் நிற்கின்றன. அதிக அளவு நீரின் எடையைத் தாங்கும் விதமாக உறுதியாகவே அவை கட்டப்பட்டுள்ளன. பல அடுக்குகளைக் கொண்ட ப்ளாட்டுகள் போலவே அவை காட்சியளிக்கின்றன. நடுவில் ஒவ்வொரு அடுக்கும் வெற்றிடமாக விடப்பட்டுள்ளது.

அந்த வெற்றிடங்களை அறைகளாக்கினால், தங்கும் விடுதிகளாக மாற்றி விடலாம். நீர், தலைக்கு மேலேயே இருக்கிறது. தேவை, கழிவறைகள் மட்டுந்தான். பெரு நகரங்களில் இது போன்ற வாட்டர் டாங்குகள் விஸ்தாரமான இடங்களைக் கொண்டவையாகவே உள்ளன. ஓர் ஓரத்தில் ‘ரெஸ்ட் ரூம்கள்’ போட்டு விட்டு, மீதியுள்ள இடங்களை ‘பார்க்கிங் லாட்’ டாகப் பயன்படுத்தலாம்.

நகரங்களுக்கு வந்து செல்வோர் தங்கவும், அதிகாலை வருவோர் காலைக் கடன்களை முடித்துக் குளித்துத் தங்கள் பணிகளை மேற்கொள்ளச் செல்லவும், இது உதவிகரமாக அமையும். நியாயமான கட்டணங்களை நிர்ணயம் செய்து, ஒழுங்காகப் பராமரித்தால், கணிசமான வருவாயை ஈட்டலாம். வெளியூர்களிலிருந்து பணி நிமித்தம் நகரங்கள், பெரு நகரங்களுக்கு வருபவர்கள் இவற்றின் மூலம் பயனடைவார்கள். இவை, பலருக்கு வேலை வாய்ப்பையும் வழங்கும்.

தற்போது, இந்தியாவில் கார் உற்பத்தியும் அதிகம்; வாங்குவோர் எண்ணிக்கையும் அதிகம். நிறைய பைனான்சியர்கள் எளிய தவணை முறையில்(EMI) கடனைத் திருப்பிச் செலுத்தும் திட்டங்களைக் காட்டி, மக்களை ஈர்த்து விடுகின்றனர்.

இதையும் படியுங்கள்:
சிறுகதை: தகுதிகள் முக்கியம்!
The Secret to Banishing Debt

ஒளியை நோக்கிப் பறக்கும் விட்டில் பூச்சியாய் அவர்கள் ஆகி விடுகின்றனர். கார்களை வாங்கி விடுகிறார்களேயொழிய அவற்றை நிறுத்த அவர்கள் வீடுகளைச் சுற்றி இடம் இருப்பதில்லை. சாலைகளில்தான் நிறுத்துகிறார்கள். அவர்களைக் கார் வாங்க வேண்டாமென்று சொல்ல வரவில்லை. சாலைகளைப் பயன்படுத்திக் கொள்ள ஒரு மாத வாடகையை நிர்ணயம் செய்து, அதனைக் கார் உரிமையாளர்களிடமிருந்து வசூலிக்க வேண்டும். இதன் மூலமாக அரசுக்கு ஒரு வருமானம் கிடைக்கும்.

அத்தோடு, பழைய கார்களை வருடக் கணக்கில் சாலைகளில் நிறுத்துவதும் தடுக்கப்படும். போக்கு வரத்து நெரிசலை ஓரளவுக்குக் குறைக்க இதுவும் பயன்படும்.

இவை போன்று சின்னச் சின்ன விஷயங்களில் கவனம் செலுத்தி, அந்தந்தத் துறை அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து இன்னும் நிறைய வருமானத்தைக் கொண்டு வர, வழிவகை செய்யலாம்.

என்னதான் பெண்களுக்கு ஏகப்பட்ட சலுகைகளை அரசுகள் அள்ளியள்ளி வழங்கினாலும், டாஸ்மாக் கடைகளை மூடாதது இல்லத்தரசிகளின் இதயங்களில் ஒரு குறையாகவே உள்ளது. தமிழ் நாட்டில் கடந்த 2024-25 ஆம் நிதியாண்டில் மதுபான விற்பனை மூலம் கிடைத்த வருவாய் ₹ 48,344 கோடி என்கிறது ஓர் அறிக்கை. அது முந்தைய ஆண்டு வருமானமான ₹45,885.70 ஐ விட ₹2488.30 அதிகமாம். ஒட்டு மொத்த மாநில வருவாயில் (GSDP) டாஸ்மாக்கின் வருமானம் 1.53% லிருந்து 1.62% என்று மேலும் விளக்குகிறது அந்த அறிக்கை.

நாம் சுட்டிக் காட்டியுள்ள இரு திட்டங்களின் மூலம் வருகின்ற வருவாயை வைத்து, வழிபாட்டுத் தலங்கள், பள்ளிகள் ஆகியவற்றுக்கு அருகிலுள்ள டாஸ்மாக் கடைகளை மூடலாம். இவ்வாறு வேறு துறைகளின் மூலம் வருவாயைப் பெருக்கி, மெல்ல மெல்ல பல கடைகளையும் மூடி நமது இல்லத்தரசிகளின் இதயங்களில் பால் வார்க்கலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com