
பல வருடங்களுக்கு முன்பு நடைபெற்ற உண்மை நிகழ்வின் அடிப்படையில் எழுதப்பட்டது.
அந்த காலகட்டத்தில் இல்லத்தரசிகள் அந்த புகழ்பெற்ற பஜாருக்கு வீட்டிற்கு தேவையான காய்கறிகள், துணிகள், பாத்திரங்கள் போன்றவற்றை வாங்க காலை பத்து மணிக்கு மேல் வருவார்கள். அந்த. இடத்தில் பல பிரபல கடைகள் இயங்கி வந்தன. பெரிய வீதியின் இரண்டு பக்கங்களும் கடைகள் வரிசையாக இருக்கவே பல மக்களுக்கும் சவுரியமாக இருந்தது.
ஒரு நாள் இரண்டு பெண்மணிகள் ஒரு பாத்திரக் கடையில் வந்து பாத்திரங்களை பார்வையிட்டனர். அவர்கள் விரும்பிய ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தை தேர்ந்து எடுத்து அந்த பகுதியில் இருந்தவரிடம் , "என்ன விலை?" என்று வினவினர். அவரும் அதை இப்படியும் அப்படியும் சுற்றிப் பார்த்தவிட்டு ஒரு குறிப்பிட்ட விலையை கூறினார். அந்த விலையைக் கேட்ட இருவருக்கும் மகிழ்ச்சி. அதை வாங்கிக் கொள்வதாக கூறிவிட்டு மாடிக்கு சென்று வேறு பொருட்களை காண சென்றனர்.
கீழே வந்து கேஷ் கவுண்டரில் அந்த பாத்திரத்திற்கு ஆன விலை கொடுக்கும் பொழுது, அங்கு இருக்கையில் இருந்த முதலாளி கூறிய விலையை கேட்டதும் ஆடிப்போய்விட்டனர்.
ஏனென்றால் அவர் கூறிய விலை அங்கு கவுண்டரில் கூறிய விலையை விட மிக அதிகமாக இருந்தது. இருவர் முகத்திலும் அந்த விலை கேட்ட மாத்திரத்தில் களை இழந்துவிட்டது.
அனுபவஸ்தரான முதலாளிக்கு புரிந்துவிட்டது, தவறு நடந்து விட்டது என்று. பதட்டப்படாமல், ஒரு நிமிடம் இருங்கள், என்று அவர் அந்த பாத்திரத்தை கையில் எடுத்துக்கொண்டு அந்த குறிப்பிட்ட கவுண்டருக்கு சென்று அந்த ஆசாமியிடம் (விலை கூறிய நபர்) சிறிது நேரம் உரையாடிவிட்டு வந்தார்.
அந்தக் காலகட்டத்தில் பாத்திரங்களின் மேல் விலை குறிப்பிட்டு இருக்காது. அதற்கு பதிலாக தமிழ் எழுத்துகளில் க, அ, உ, இ, ஆர் என்று சங்கேத பாணியில் (இரகசிய முறையில்) குறிப்பிட்டு இருக்கும். அந்த கடையில் பணிபுரிபவர்கள் மற்றும் முதலாளிக்கு புரியும். அந்த குறியின் அடிப்படையில் வரும் வாடிக்கையாளர் களுக்கு விலை விவரம் கூறி வியாபாரம் நடைபெறும்.
ஆனால் அன்று கவுண்டரில் இருந்தவர் அவ்வளவாக அனுபவம் இல்லாததால் சரியான விலைக்கு பதிலாக குறைந்த விலை கூறிவிட்டார்.
அவரிடம் உரையாடிய முதலாளி திரும்ப வந்து அந்த. பெண்மணிகள் இருவரிடமும் அதே குறைந்த
விலைக்கு அந்த பாத்திரத்தை கொடுத்தார். அவர்கள் இருவர் முகங்களிலும் மகிழ்ச்சி மீண்டும் குடிபுகுந்தது.
அவர்கள் பணம் கொடுத்ததும் பாத்திரத்தை கொடுத்துவிட்டு, நடந்த தவறு என்ன என்பதை அந்த முதலாளி அவர்களிடம் விளக்கி கூறினார்.
அந்த பெண்மணிகள் இருவரும் உரிய பணத்தை கொடுக்க முன் வந்தும், முதலாளி மறுத்துவிட்டார். தவறு தங்களது மேலும், எங்களை வாழவைக்கும் உங்களைப்போல வாடிக்கையாளர்கள் எங்களுக்கு முக்கியம் என்று, "நன்றி கூறி , புன்முகத்துடன் வணங்கி..!"வழி அனுப்பி வைத்தார்.
பிறகு நடந்த நிகழ்வுதான் முக்கியம்.
அந்த குறிப்பிட்ட பணி செய்பவரை முதலாளி கூப்பிட்டு திட்டுவார் என்று எதிர்பார்த்து இருந்த மற்ற பணியாளர்களுக்கும் (அந்த குறிப்பிட்ட நபருக்கும்) இன்ப அதிர்ச்சி அளித்தார் முதலாளி.
அன்று கடைமூடும் சமயத்தில் எல்லோரையும் கூப்பிட்டு நடந்த தவறு என்ன என்பதை விவரித்துவிட்டு, இனி கவனமாக பணி செய்யும்படி கேட்டுக்கொண்டார்.
அன்று இரவு தனது மனைவியிடம் அன்றைய நிகழ்வை விவரித்த அந்த முதலாளி வியாபாரத்தில் லாபம், நஷ்டம் இரண்டையும் சந்தித்து இரண்டிலிருந்தும் பாடம் கற்றுக்கொண்டு நகரவேண்டும்.
அந்த குறிப்பிட்ட நபர் தவறுதலாக விலை கூறியது எனக்கு புரிந்துவிட்டது. இருந்தும் அவரை கேஷ் கவுண்டருக்கு கூப்பிட்டு வாடிக்கையாளர்கள் எதிரில் சத்தம் போட்டு இருக்கலாம். அல்லது அவர்களுக்கு கூறிய விலையில் விற்க மறுத்து இருக்கலாம். இரண்டும் நான் செய்யவில்லை.
நானே அந்த நபரின் கவுண்டருக்கு சென்று பணிபுரிபவருக்கு உரிய மரியாதை அளித்தேன். அந்த பெண்மணிகளுக்கு உரிய மரியாதையும், முக்கியத்துவமும் அளித்தேன். அந்த பணிபுரிபவர் மற்றும் இந்த வாடிக்கையாளர்களின் ஏமாற்றங்களை தவிர்த்தேன். என் செய்கை மூலம் வாடிக்கையாளர்களின் நம்பிக்கை அதிகரித்தது. அவர்கள் நம் கடை பற்றி உயர்வாக அவர்களுக்கு தெரிந்தவர்கள், அறிந்தவர்கள், உறவினர்கள், நண்பர்கள் இவர்களிடம் கட்டாயம் கூறுவார்கள். இது நமக்கு ஒரு அரிய வாய்ப்பு. நழுவ விடக்கூடாது.
வியாபாரத்தில் லாபம் சம்பாதிப்பது மட்டும் குறிக்கோளாக இருக்க கூடாது. அடுத்த தலைமுறையினருக்கு நெளிவு, சுளுவுகளை தக்க சமயத்தில் கற்றுக்கொடுத்து அவர்களை திறம் பட வளர்ப்பதும் நமது கடமை. அதைதான் செய்தேன்.
அந்த குறிப்பிட்ட பணியாளரிடம் சத்தம் போட்டு இருந்தால் அவரால் சரிவர பணி செய்ய முடியாமல் போய் இருக்கும். பணிபுரிய வேண்டிய ஆர்வமும் குறைந்து இருக்கும்.
நான் பிறகு கூப்பிட்டு எப்படி கையாள வேண்டும் என்று.
அவருக்கும் மற்றவர்களுக்கும் எப்படி தொழிலில் கவனமாக பணிபுரிய வேண்டும் என்று விளக்கியும் வாடிக்கையாளர்களின் முக்கியத்துவம் பற்றியும் விளக்கி அவர்களுக்கும் சந்தர்ப்பம் ஏற்படுத்தி கொடுத்தேன்.
இப்படிபட்ட நிகழ்வுகளும் அடுத்த தலைமுறையினரை தயார் செய்ய உதவும் என்று மன நிறைவோடு கூறி முடித்தார் , அந்த முதலாளி.