
வாழ்க்கையில் முன்னேற வேண்டுமென்றால் ஓயாமல் முயற்சியும் பயிற்சியும் எடுக்கவேண்டும். பல வெற்றியாளர்களின் பின்னால் ஒளிந்திருக்கும் ரகசியம் இதுவே.
உங்களால் எப்படி இந்த வெற்றியை சாத்தியப்படுத்த முடிந்தது என்று கேட்டால் அவர்கள் கூறும் ஒரே பதில். நான் இலக்கை நோக்கி இடைவிடாமல் முன்னேறினேன். ஓய்வின்றி பயிற்சி எடுத்தேன் நான் எதில் சாதிக்க வேண்டும் என்று நினைத்தேனோ அதில் மட்டுமே கவனம் செலுத்தினேன் என்று சொல்வார்கள். உண்மைதான்.
ஒரு ஓட்டப்பந்தய வீரர்களிடம் உங்கள் வெற்றியைப் பற்றி கேட்டுப் பாருங்கள் நான் தினமும் ஓடிக்கொண்டே இருப்பேன் என்று கூறுவார். மாரத்தான் போட்டியில் சாதனை படைத்த டோஷிஹிகோ சேகோவின் செயல்பாடுகளும் கூட நமக்கு உத்வேகத்தைத்தரும் இதோ இப்பதிவில் அதை படியுங்கள்.
1981ஆம் ஆண்டு பாஸ்டன் நகரில் நடந்த மாரத்தான் போட்டியிலும், 1983ஆம் ஆண்டு டோக்கியோவில் நடந்த மாரத்தான் போட்டியிலும் முதலிடம் பெற்று உலகச் சாதனை படைத்தவர் டோஷிஹிகோ சேகோ என்பவர். இவர் இரண்டு ஓட்டப் போட்டிகளிலும் வெற்றி பெற்றதற்கு முக்கியமாக “ஒரு வாக்கியத்தில் அடங்கும் கொள்கைதான் காரணம்" என்றார். "அவரது கொள்கை என்ன?" என்று பேட்டி எடுத்தவர்கள் கேட்டபோது "நான் தினமும் காலையில் பத்து கிலோமீட்டர் தூரமும், மாலையில் இருபது கிலோமீட்டர் தூரமும் ஓடுகின்றேன்” என்று கூறினார்.
"உண்மையில் மிகப்பெரும் சாதனைகளை ஓட்டப் போட்டியில் செய்பவர்கள் இதைவிட அதிக தூரம் ஓடுகின்றார்கள், பயிற்சி செய்கிறார்கள். எனவே, இது ஒன்றும் புதுமையானதாக இல்லையே!" என்று கேட்டபோது அவர் "வருடம் முழுவதும் 365 நாட்களும் நான் இந்த ஓட்டத்தினை ஒருநாளும் விடாது தொடர்கின்றேன்” என்று கூறினார். தொடர்ந்த பயிற்சி மட்டுமே இந்த வெற்றிக்குக் காரணம் என்பதைப் புலப்படுத்தினார் டோஷிஹிகோ சேகோ.
ஓட்டப்பந்தய வீரர்கள் ஓயாது பயிற்சி எடுத்துத்தான் பந்தயங்களில் வெற்றி பெறுகிறார்கள். இவர்களில் சிலர் வெயிலோ, மழையோ, குளிரோ என்று ஏதையும் பொருட்படுத்தாமல் அயராது உழைக்கிறார்கள். இப்படி உழைப்பவர்கள்தான் முதலிடத்தில் நிற்கிறார்கள். எல்லாச் சூழ்நிலைகளிலும் பயிற்சி மேற்கொள்ளத் தங்களைத் தயாரித்துக் கொள்கிறார்கள்.
"எது இலக்கோ அதில் முழுக் கவனத்துடன் இருந்தால் இலக்கை அடைவது எளிதாகி விடுகின்றது!"