உங்கள் விதி உங்கள் கையில்: வெற்றியை ஈர்க்கும் 6 உளவியல் விதிகள்!

உங்கள் எண்ணங்களை மாற்றினால் உங்கள் உலகம் மாறும்; அற்புதங்களை நீங்களே உருவாக்குங்கள்!
வெற்றிக் கொள்கை
வெற்றிக் கொள்கைAI image
Updated on

பெரும்பாலான மனிதர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதையும் ஒரு பொன்னான வாய்ப்புக்காகவோ, எதிர்பாராத பண வரவிற்காகவோ அல்லது ஏதேனும் ஒரு திடீர் அதிர்ஷ்டம் கதவைத் தட்டாதா என்றோ காத்துக் கொண்டே கழித்து விடுகிறார்கள். ஆனால், தேடப்படும் அந்த "அற்புதம்" வெளியில் இருந்து நடப்பது அல்ல; மனித ஆற்றலால் தனக்குள்ளே உருவாக்கப்பட வேண்டிய ஒன்று என்பதே உண்மை.

நெப்போலியன் ஹில் எழுதிய புகழ்பெற்ற புத்தகமான 'யூ கேன் ஒர்க் யுவர் ஓன் மிராக்கிள்ஸ்' (You Can Work Your Own Miracles) மனித ஆற்றலின் உச்சக்கட்ட உண்மையை வெளிச்சம் போட்டுக்காட்டுகிறது. செல்வம், வெற்றி, மற்றும் மன அமைதி ஆகியவை தற்செயலாகவோ அல்லது பிறப்பின் அடிப்படையிலோ கிடைப்பவை அல்ல. அவை திட்டமிட்டு மனதில் உருவாக்க வேண்டிய உளவியல் நிலைகள் ஆகும்.

ஹில் தனது புத்தகத்தில் மிக அழகாகக் குறிப்பிடுகிறார்: “மனிதன் தன் மனதில் தானே ஏற்படுத்திக்கொள்ளும் எல்லைகளைத் தவிர, வேறு எந்த எல்லைகளும் அவனுக்கு இல்லை.”

வெறும் விருப்பங்களோடு நின்றுவிடாமல், வாழ்க்கையில் அற்புதங்களை நிகழ்த்தி, வெற்றியை எளிதாக அடைய வழிகாட்டும் 6 வாழ்வியல் பாடங்கள்:

1. தெளிவான இலக்கை உருவாக்குவதே மிகச்சிறந்த வெற்றிக் கொள்கை:

தெளிவற்ற குறிக்கோள்கள் சுமாரான முடிவுகளையே தரும். வெறும் ‘பணக்காரன் ஆகவேண்டும் என இலக்கு நிர்ணயிக்காமல் எவ்வளவு பணம் வேண்டும், அது எப்போது வேண்டும், அதை வைத்து என்னவெல்லாம் வாங்குவோம், அதற்குப் பதிலாக என்ன மாதிரியான உழைப்பைக் கொடுக்க வேண்டும் என்பதைத் துல்லியமாக வரையறுக்க வேண்டும்.

வெற்றிக் கொள்கை
வெற்றிக் கொள்கைAI image

2. மனதைக் கட்டுப்படுத்துதல்:

மனித மனம் என்பது ஒரு வளமான தோட்டம் போன்றது. அதில் விழிப்புணர்வோடு வளம் மற்றும் நேர்மறை எண்ணங்களின் விதைகளை விதைக்காவிட்டால், வறுமை மற்றும் சுயசந்தேகம் என்ற தேவையில்லாத களைகள் தானாகவே முளைத்துவிடும். பொருளாதார ஒழுக்கத்திற்கு முன்னால் மன ஒழுக்கம் மிகவும் அவசியம். எண்ணங்களை ஆள முடியாவிட்டால், பெரிய செல்வத்தை நிர்வகிக்க முடியாது.

3. கூடுதல் உழைப்பின் ரகசியம்:

உண்மையான வெற்றி என்பது, வாங்கும் சம்பளத்திற்கு மட்டும் வேலை செய்யாமல், ஒரு படி மேலே போய் ஆர்வத்தோடு உழைப்பவர்களுக்கே கிடைக்கும். இதை மற்றவர்கள் நம்மை ஏமாற்றும் செயலாக நினைக்கக் கூடாது; நமக்கென்று ஒரு நல்லப் பெயரை உருவாக்கும் வழி. வாங்கும் சம்பளத்தைவிட அதிகமாக உழைக்கும் போது, இந்த உலகம் அதற்கான பலனை நிச்சயம் நமக்கு வட்டியும் முதலுமாகத் திருப்பித் தரும்.

4. தோல்விகளை எரிபொருளாக மாற்றுதல்:

ஒவ்வொரு இக்கட்டான சூழ்நிலையும், தோல்வியும் தனக்குள்ளே அதற்கு இணையான ஒரு பெரிய நன்மையின் விதையைச் சுமந்து கொண்டிருக்கின்றன. வாழ்க்கை மிகச்சரியாக இருப்பதால் அற்புதங்கள் நிகழ்வதில்லை. ஒரு கடுமையான வீழ்ச்சியிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு, முயற்சித்து, வெற்றியடைவதில்தான் அற்புதம் ஒளிந்திருக்கிறது.

இதையும் படியுங்கள்:
'இதுவும் கடந்து போகும்!' - உங்கள் பதற்றத்தை மாற்றும் வாழ்வியல் ரகசியம்!
வெற்றிக் கொள்கை

5. உளவியல் சூழலைப் பாதுகாத்தல்:

முடங்கிப்போன சிந்தனை மற்றும் தங்களை எப்போதும் பாதிக்கப்பட்டவர்களாகவே நினைத்துக்கொள்ளும் மனிதர்களுடன் பழகிக்கொண்டு, ஒரு வெற்றிகரமான வாழ்க்கையை வாழ முடியாது. சுற்றியுள்ள மனிதர்களின் சிந்தனைகள் எண்ணங்களை உயர்த்தும் அல்லது சாதாரணமான நிலைக்குக் கீழே இழுத்துத்தள்ளும். எனவே, நட்பு வட்டாரத்தை மிகக் கவனமாகத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

6. செயல் வடிவம் பெறாத நம்பிக்கை பயனற்றது:

நம்பிக்கை என்பது தொடக்கப்புள்ளி மட்டுமே, ஆனால் செயல்வடிவம் பெற்ற நம்பிக்கையே இலக்கை நோக்கி வேகமாக நகர்த்தும். அற்புதங்களுக்கு இயக்கம் தேவை. படிக்கட்டின் முதல் படியை எடுத்து வைக்க, முழு படிக்கட்டும் கண்ணுக்குத் தெரியவேண்டிய அவசியமில்லை. உழைப்பு நிச்சயம் பலன் தரும் என்ற முழுமையான உறுதியோடு முதல் படியை எடுத்து வைக்கவேண்டும்.

இதையும் படியுங்கள்:
கோபம் வந்தா கத்தாதீங்க... இந்த ஒரு விஷயம் தெரிஞ்சா நீங்க தான் கெத்து!
வெற்றிக் கொள்கை

மனதிற்குள் ஓடும் எண்ணங்களின் அலைவரிசையை மாற்றாத வரை, வெளியில் உள்ள உலகம் யாருக்காகவும் மாறப்போவதில்லை. யாரோ வந்து அற்புதம் செய்வார்கள் என்று காத்திருப்பதை நிறுத்தி, தனக்குள் இருக்கும் பேராற்றலை உணர்ந்தால்தான் அற்புதங்களை நிகழ்த்தலாம்.

தற்காலிகத் தோல்விகளைக் கண்டு அஞ்சாமல், அவற்றை வெற்றிக்கான படிக்கட்டுகளாக மாற்றும் மனப்பக்குவத்தை அடைவீர்கள். இது உங்கள் நட்பு வட்டாரத்தை மேம்படுத்தி, வாழ்நாள் முழுவதும் உங்களை உத்வேகத்துடன் வைத்திருக்க உதவும்.

logo
Kalki Online
kalkionline.com