

கார் ஒன்றில் மதிய வேளையில் இருவர் பயணித்துக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென்று வேறு கார் ஒன்று தவறான பாதையில் வந்து, முதல் காரின் மீது இடித்துவிட்டது. அந்த காரின் ஓட்டுநரோ தன் தவறுக்கு மன்னிப்புக் கேட்காமல், காரில் பயணித்தவர்களை வாய்க்கு வந்தபடி திட்டினார்.
இடி வாங்கிய காரின் ஓட்டுநரோ அவர் பேசிய எதற்கும் பதில் கூறாமல் அமைதியாக இருந்தார். இந்நிலையில், திட்டிவிட்டு காரை எடுத்துக்கொண்டு, எந்தவிதமான குற்ற உணர்ச்சியும் இன்றி வசைபாடியவர் சென்றுவிட்டார்.
அப்போது காரில் பயணம் செய்த நபர், ஓட்டுநரிடம், "உங்கள் காரை இடித்துவிட்டு அந்த நபர் கோபமாகப் பேசியபோது உங்களுக்குக் கொஞ்சம் கூட கோபம் வரவில்லையா?" எனக் கேட்டார்.
அதற்கு ஓட்டுநரோ, "இவரைப் போல சில மனிதர்களை நாம் தினந்தோறும் பார்க்க வேண்டியிருக்கிறது. அவர்கள் பேசுவதெல்லாம் அபத்தமாக இருப்பதால், அவர்களோடு போட்டி போட்டுக்கொண்டு நாமும் நின்று பேசினால் நமக்கு அவமானம் தான் மிஞ்சும். ஒருவித மனநோயாளியான இந்த மனிதரைப் போன்றவர்களை, நாம் அப்படியே ஏற்றுக்கொள்ளும் அணுகுமுறையைத் தான் கையாள வேண்டும். நாம் ஒரு முக்கியமான நிகழ்ச்சிக்குச் சென்று கொண்டிருக்கிறோம். செல்கின்ற பாதையில் இது போன்ற சாக்கடைகளையும் அழுக்குகளையும் சுமந்து கொண்டு சென்றால் நம்மால் மகிழ்ச்சியாக இருக்க முடியாது," என்று விளக்கினார்.
முரண்பாடுகள் கொண்ட மனிதர்களை நாம் வாழ்க்கையில் பல்வேறு சமயங்களில் சந்திக்க வேண்டியிருக்கிறது. அத்தகையவர்களிடம் நாம் பேச்சுக்கு பேச்சு, செயலுக்கு செயல் என எதிர்வினையாற்றும்போது, வார்த்தை தடித்து ஒருவருக்கொருவர் கைகலப்பு ஆகும் நிலைக்குச் சென்றுவிடும். இதனால் மன அமைதி கெட்டு, மகிழ்ச்சி என்ற ஒன்று இல்லாமலே போய்விடும்.
அதற்குப் பதிலாக, காரின் ஓட்டுநரைப் போல முரண்பட்டவர்களை அப்படியே ஏற்றுக்கொள்ளும் அணுகுமுறை நமக்கு எவ்வித அழுத்தத்தையும் கொடுக்காது. இதனால் அடுத்து செய்ய வேண்டிய செயல்களைப் பற்றி யோசித்து, வாழ்வில் வெற்றி பெறுவதோடு மகிழ்ச்சியும் அடையலாம்.
நமது அன்றாட வாழ்வியல் சூழலில் மாறுபட்ட மனிதர்களை இனி சந்திக்கும் போது, அவர்களை ஏற்றுக்கொள்ள முயற்சி செய்வோம்(Let's accept those who disagree). ஒருவர் எதற்கெடுத்தாலும் குறை சொல்பவராக இருந்தால், "இந்த நபர் குறை சொல்லக் கூடாது என்பதற்காக நாம் இன்னும் சிறப்பாகச் செயல்பட நமக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது" என்று எண்ணிச் சரியாகச் செயல்படலாம்.