
ராபர்ட் கிரீன் இங்கர்சால் அமெரிக்காவின் பகுத்தறிவு மேதை என அழைக்கப்படுபவர். சிறு வயதிலேயே சிந்தனைத்திறன் மிக்கவராக விளங்கினார். அமெரிக்க உள்நாட்டுப் போரில் ஈடுபட்ட போர் வீரர், கர்னல் பதவியில் இருந்தவர், அமெரிக்க அரசியல் தலைவர் மற்றும் தலைசிறந்த பேச்சாளர் போன்ற பன்முகங்களுக்கு சொந்தக்காரர். ஆசிரியராக பணியைத் தொடங்கினார். பின்னர் சட்டம் பயின்று வழக்கறிஞர் ஆனார். தனது அறிவாலும், திறமையாலும் அமெரிக்காவை ஒரு கலக்கு கலக்கியவர். அவரின் ஆக்கப்பூர்வமான பொன்மொழிகள்.
மகிழ்ச்சியாக இருப்பதற்கான நேரம் இப்பொழுதே. மகிழ்ச்சியாக இருப்பதற்கான இடம் இங்கேயே. மகிழ்ச்சியாக இருப்பதற்கான வழி மற்றவர்களை மகிழ்ச்சிப்படுத்துவதே.
வாழ முடிவு செய்யுங்கள். முடியும் என்று ஆக்கப்பூர்வமாக சிந்தித்தால். துன்பங்களை துன்பப்பட வைத்துத் தொடர்ந்து செயலாற்றல் கொண்டவர்களாக வாழலாம்.
மனம் நல்லதாக, சுத்தமானதாக, பண்புடன் பழக்கக் கூடியதாக, நம்பிக்கை உள்ளதாக இருந்தால். நாம் கோயிலை தேடிப்போக வேண்டியதில்லை.
நன்மைக்கு நன்மை செய்! தீமைக்கு நீதி வழங்கு!.
13 என்பது பயபடக்கூடிய எண்ணாக இருந்தால், அதற்கு இரண்டு மடங்கான 26 இரண்டு மடங்கு ஆபத்தானதா? நான்கு மடங்கான 52 நான்கு மடங்கு ஆபத்தானதா?.
மூளையை குழப்புவது பயம், தைரியத்தின் பிறப்பு முன்னேற்றம்.பயம் எதையும் நம்புகிறது, தைரியம் சந்தேகிக்கிறது.பயம் கீழே விழுந்து வணங்குகிறது. ஊக்கம் நேரே நிமிர்ந்து சிந்திக்கிறது, பயம் பின்வாங்குகிறது. ஊக்கம் முன்னேறிச் செல்கிறது. பயம் அநாகரீகமானது. தைரியமே நவ நாகரிகம், பயம் மாயத்திலும் சூனியத்திலும், பேயிலும், பிசாசிலும் நம்பிக்கை கொள்கிறது. தைரியமே அறிவு நூல்.
இயற்கையெனும் பிரமாண்டமான புத்தகம் எல்லோருடைய கண்களுக்கும் முன்னே திறந்து வைக்கப்பட வேண்டும். ஆனால், இந்த அரிய நூலை அறிவாளிகளும், நேர்மையாளர்களும் மட்டும்தான் வாசிக்க முடியும். துர்ரபிமானம் உடையவர்களுக்கு அந்த நூலின் ஒவ்வொரு பக்கமும் இருள் மயமாகவே இருக்கும். மோசக்காரர்கள் அந்தப் புத்தகத்தைப் படித்து தப்பர்த்தம் பண்ணுவார்கள். குருட்டு அப்பாவிகள் அந்த தப்பர்த்தங்களை நம்புவார்கள், குருட்டு நம்பிக்கை கொண்டவர்களால் அந்த நூலில் ஒரு வரியைக்கூட வாசிக்க முடியாது. ஆனால், அந்த நூலில்தான் எல்லா அறிவும் நிரம்பிக் கிடக்கின்றன. எல்லா உண்மைகளும் புதைந்து கிடக்கின்றன. சிந்தனையின் ஊற்றுக்கண்ணும் அந்த நூல்தான். இந்த நூலை எல்லோரும் படிக்க இருக்கும் உரிமைக்கு மனச்சுதந்திரம் என்று பெயர்.
பழமையை அழிக்கிறவர்கள் புதுமையைச் சிருஷ்டிக்கிறார்கள். அறியாமைதான் துயரத்தின் தாய்.
அறியாமையைத் தவிர்த்து வேறொர் அடிமைத்தனம் இல்லை. சுதந்திரம் என்பது அறிவின் குழந்தை.
சுயமாகச் சிந்தனை செய்யாத மனிதன் அடிமை.அவன் தனக்கு மட்டும் துரோகியல்ல; மற்றவர்களுக்கும் துரோகம் செய்தவனாகிறான்.
ஒவ்வொரு மனிதனும், நீல வானத்தின் கீழே, நட்சத்திரப் பிரகாசத்தின் கீழே, எல்லையற்ற இயற்கை வனத்தின் கீழே, சகோதர மனிதனுக்கு சமமாகத் தலை நிமிர்ந்து நிற்க வேண்டும்.
ஒரு மனிதனின் உண்மையான தன்மையை அறிய விரும்பினால் அவனுக்கு அதிகாரத்தை கொடுத்துப்பாருங்கள்.
பிறருடைய குற்றங்களை நாம் கவனித்துக்கொண்டே இருந்தால் அதே குற்றங்குறைகள் நாளடைவில் நம்மிடம் தொற்றிக்கொள்ளும்.
இந்த பூமியில் தைரியத்திற்கான மிகப்பெரிய சோதனை என்பது இதயத்தை இழக்காமல் தோல்வியினை தாங்கிக்கொள்வதே.
உங்களுக்காக நீங்கள் கோரும் உரிமைகளை, நீங்களும் ஒவ்வொரு மனிதருக்கும் கொடுத்திடுங்கள். உனக்காக பொய் சொல்பவன். உனக்கு எதிராகவும் பொய் சொல்வான்.
புறக்கணிப்பு என்ற நோய்க்கு மருந்து கிடையாது. எனவே யாரையும் அலட்சியப்படுத்தாதீர்கள்.
சுதந்திரமே முன்னேற்றத்தின் சுவாசம். யாருக்கு ஆர்வம் இல்லையோ அவர்களிடம் செயல்பாடும் இல்லை. நீங்கள் பெற்றுக்கொள்ளும் சுதந்திரத்தைவிட அதிகமான சுதந்திரத்தை விட்டுகொடுக்க வேண்டும்.
பொது அறிவு இல்லாத கல்வியைவிட, கல்வி இல்லாத பொது அறிவானது ஆயிரம் மடங்கு சிறந்தது.