
மனித வாழ்வில் நாம் எவ்வளவோ விக்ஷயங்களில் முன் யோசனையுடனும் நிதானமாகவும் அன்பாகவும் பலருக்கு உதவி செய்யக்கூடிய நபர்களாகவும் வாழ்ந்துவருகிறோம்.
அதேபோல சில சமயங்களில் சில இடங்களில் நாகரீகமாகவும் விட்டுக்கொடுத்துப்போகும் மனப் பக்குவத்துடனும் பலவிஷயங்களில் அனுசரித்து போகும் தன்மையுடனும் வாழவேண்டிய சூழல்கள் ஏற்படும்.
அதையெல்லாம் சமாளித்து சமயோஜிதமாக வாழ்வதும் ஒரு கலைதான். அதை ஒட்டியே குழந்தை வளா்ப்பிலும் நாம் கவனம் செலுத்தி வாழ்ந்து வருவதுதான் மிகவும் நல்லது.
பொதுவாக நமது பிள்ளைகளுடன் நமது உறவினா் மற்றும் நண்பர்கள் இல்லங்களுக்குச் செல்வதாய் இருந்தால் முன்கூட்டியே நாங்கள் உங்கள் இல்லத்திற்கு வரலாம் என இருக்கிறோம் நீங்கள் ப்ரீதானே வேறு எங்காவது பயணம் போக இருக்கிறீா்களா? என கேட்டு அதன்பிரகாரம் செல்வது ஆரோக்கியமான விஷயமாகும்.
அப்படி சென்ற நிலையில் நமது பிள்ளைகள் அவர்கள் வீட்டிலுள்ள டிவி ரிமோட்டை எடுத்து டிவியை போடுவது, மின் விசிறியை வேகமாக வைப்பது, அவர்கள் வீட்டு குழந்தைகள் வைத்திருக்கும் விளையாட்டுப் பொருட்களை எடுப்பது போன்ற இன்னபிற தேவையில்லாத விஷமங்களை செய்ய விடாமல் பாா்த்துக்கொள்ளவேண்டும்.
குழந்தைகள் என்றால் விஷமம் செய்யத்தான் செய்வாா்கள், அது நம் வீட்டோடு அளவாக இருக்கலாம். அதையே அடுத்தவர் வீடுகளில் நிகழ்த்துவது சங்கடத்தை உண்டாக்கலாம்.
அவர்களோ சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் தர்ம சங்கடத்திற்கு ஆளாக்கக்கூடிய நிலை நம்மால் வரக்கூடாது.
மேலும் அவர்கள் வீட்டுப்பிள்ளைகளுக்கு தேவையில்லாத அட்வைஸ் செய்யக்கூடாது. சொல்ல வேண்டிய விஷயத்தை யாா்மனதும் புண்படாதவாறு நயமாக எடுத்துச்சொல்வது அனைவருக்கும் நல்லதே!
இதுபோலவே நமது வீட்டுப்பிள்ளைகளோடு அவர்கள் வீட்டுப்பிள்ளைகளை ஒப்பிட்டுப்பேசக்கூடாது.
அத்தகைய நிலையில் அவர்கள் சொல்லும் விஷயங்களை நன்கு காதுகொடுத்து கேட்பதோடு நமது குடும்ப பெருமைகளைப்பற்றி பேசவேகூடாது.
அவர்கள் நமக்காக என்ன உணவு தயாாித்திருக்கிறாா்களோ அதை சாப்பிடவேண்டும். அதில் குறையிருந்தாலும் பொத்தாம் பொதுவாக போட்டு உடைக்கக்கூடாது. நமது செய்கையால், செயலால், அடுத்தவர் மனது உடையாத வகையில் பாா்த்து கவனமாக இருப்பது நல்லது.
இது ஒருபுறம் இருக்க ஒருவரிடம் தொலைபேசியில் பேச நினைக்கும்போது, இடம் பொருள் பாா்த்து பேசவேண்டும்.
தாங்கள் ஓய்வாக இருக்கிறீா்களா, பேசலாமா, தொல்லை எதுவும் இல்லையே, வாகனத்தில் போய்க் கொண்டிருந்தால் இறங்கிப் பேசுங்கள் இல்லாவிடில் அப்புறம் பேசுகிறேன் என நாசூக்காக பேசுவதே நல்லது.
இதுவே பண்பாடான, நாகரீகமான செயலாகும். இதுபோல நாம் கடைபிடிக்க வேண்டிய விஷயங்கள் நிறையவே பல விஷயங்களில் உள்ளது. அதற்கு ஏற்ப நாம் இங்கித மனப்பான்மையுடன் நடந்து கொள்வதே வரவேற்கத்தக்க விஷயமாகும்.
நாம் ஏன் வருகிறோம் என அவர்கள் நினைப்பதைவிட, ஏன் வருவதே இல்லை என்ற நிலைபாடுகளை அவர்கள் கடைபிடிக்கும் வகையில் நமது பண்பாடான செய்கைகள், அணுகுமுறைகள், அமைவதும் அமைத்துக் கொள்வதும் நம்கையில்தான் உள்ளது. அதுவே ஆரோக்கியமான நட்பை வளா்க்க வல்ல அருமருந்தாகும்!