வெற்றியை எளிதில் அடையாளம் காண உதவும் கணித சூத்திரம் தெரியுமா?
வாழ்க்கையில் அனைவருக்கும் ஏதோ ஒரு வகையில் சாதிக்க வேண்டும் என்ற விருப்பம் இருக்கும். வெற்றி என்னும் இலக்குக்கு பலரும் பல்வேறு விதமான வழிமுறைகளை கண்டறிந்து அதை பின்பற்ற சொல்லி இருப்பார்கள்.
அந்த வழிமுறைகள் அனைத்தும் அவரவர் அனுபவித்தது மட்டுமல்லாமல் கேட்டும், கற்றும் அறிந்ததும் ஆகும். சாதிக்கும் விஷயத்துக்கு பல்வேறு விஷயங்களை கற்றுக்கொள்ள வேண்டும் அதுவே வெற்றிக்கு வழி என்பதும் பெரும்பாலானவர்களின் கருத்து. ஆனால் அது உண்மையா? இதோ இந்த பதிவில் காண்போம்.
பொதுவாக பள்ளியில் நாம் படிக்கும் பாடங்கள் அனைத்தும் வாழ்வியல் சம்பந்தப்பட்டதை உணர்த்தும் விதமாகவே அமையும். அது வருமானத்தை கற்றுத்தரும் கணிதம், பகுத்தறிவு க்கு உதவும் அறிவியல் , சாதித்தவர்கள் பற்றிய வரலாறு என கல்வி நமக்கு வெற்றிக்கான பாதையை சரியாக வகுத்து தரும் .
அதிலும் கணிதம் என்பது வாழ்க்கைக்கு அத்தியாவசியமான தேவை. கணிதத்தின் சூத்திரங்கள் தெரிந்து கொண்டால் பணத்தை பெருக்குவதிலும் லாபத்தை சம்பாதிப்பதிலும் பொருளாதார வெற்றியை நாம் பெறலாம் . வாழ்வில் பொருளாதாரமே நிறைவு என நினைப்பவர்களுக்கு இந்தக் கூட்டல், பெருக்கல், கழித்தல் சூத்திரங்கள் மிகவும் உதவியாக இருக்கும் .
சரி வருமானத்திற்கு மட்டும்தான் இந்த விதியா என்றால் கிடையாது . முதல் பாராவில் சொன்னது போல் நேங்களை செலவழித்து பல விஷயங்களை கற்று திறமையை கூட்டிக் கொண்டே இருந்தால் வெற்றியை அடைவதற்கான நேரம் அதிகமாகி விடும் என்பதுதான் உண்மை. இந்த இடத்தில் தான் கழித்தல் (subtraction) எனும் கணிதம் முதல் இடம் பிடிக்கிறது எப்படி தெரியுமா?
"எனக்கு எப்போதுமே நேரமே இருப்பதில்லை. ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தால் கூட கையில் செல்போன் எடுத்தால் நேரம் ஓடிப் போய் விடுகிறது" என்று சொல்லும் இளைஞர்களை பார்த்திருப்பீர்கள். அதேபோல் "ஏதாவது வீட்டில் இருந்தே புதுசா செய்யலாம் என்றால் அந்த பக்கத்து வீட்டு மாமியிடம் போய் கொஞ்ச நேரம் பேசிட்டு வரலாம்னு போனா நேரமே போயிடுது நாம நினைக்கிற விஷயங்கள் செய்யவே முடியல " என்று சொல்லும் படித்த பெண்களை பார்த்திருப்போம்.
இவர்கள் அனைவருமே கடைப்பிடிக்க வேண்டிய ஒரு விஷயம் தான் இந்த கழித்தல் என்னும் தவிர்க்க வேண்டிய விஷயங்கள். நம்முடைய உண்மையான வளர்ச்சி என்பது நாம் திறமைகளை கூட்டிக் கொண்டே இருக்க அதில் நேரங்களை செலவழிப்பது அல்ல. ஏதேனும் ஒரு விஷயத்தில் தன்னிறைவு அடைந்தால் அதுவே நமது உண்மையான வளர்ச்சி என்கிறார்கள் தன்னம்பிக்கை பயிற்சியாளர்கள்.
ஏதேனும் ஒரு விஷயத்தில் மனதை ஒருமுகப்படுத்தி முழு ஈடுபாடுடன் செய்தால் அந்த விஷயத்தில் ரிசல்ட் 100% வெற்றியைத் தரும். பல விஷயங்களில் நம் திறமைகளை பிரிக்கும் பொழுது எதிலும் முழுமை பெறாமல் பின் தங்கிப் போய் விடுபவர்களும் உண்டு .
ஆகவே எளிதான வெற்றிக்கு உங்களை சுய பரிசோதனை செய்து கொள்ளுங்கள். உங்களிடம் உள்ள தேவையற்ற ,நேரங்களை எடுத்துக் கொள்ளக்கூடிய விஷயங்களை முதலில் பட்டியலிடுங்கள்.
அது நண்பர்களாகவும் இருக்கலாம் உறவுகளாகவும் இருக்கலாம் அல்லது கைகளில் இருக்கும் அலைபேசி மடிகணினி போன்றவைகளாகவும் இருக்கலாம். இவைகளினால் உங்கள் கவனம் சிதறடிக்கப்பட்டு நேரங்கள் விரயம் ஆகிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள் . வெற்றியை பெற தாமதம் தரும் இந்த மாதிரி விஷயங்களை கழித்தால் நீங்கள் முழுமையாக சுவாசிக்கும் உங்களுக்கான நேரம் வெற்றியை நோக்கி மட்டுமே இருக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள் .
முதலில் இது மிகவும் கடினமான செயலாக தான் இருக்கும். ஏனெனில் எப்போதும் நம்மை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் அலைபேசியையும் உற்ற நண்பர்களையும் தவிர்ப்பது என்பது மிக மிக கடினமான செயலாக இருக்கும். ஆனால் நீங்களே உங்களுக்குள் ஒரு மனக்கட்டுப்பாடு விதித்து கொண்டு இதை பின்பற்றினால் இதன் ரிசல்ட் முதலில் 20% அடுத்தது 40% அடுத்தது 80% வந்து 100% உங்களுக்கு வெற்றியை தரும் என்பதில் சந்தேகம் இல்லை .
முயற்சித்து தான் பாருங்களேன் இந்த வெற்றி தரும் கழித்தல் முறையை..