
இந்தியாவில் தங்கத்தின் விலை கடந்த சில மாதங்களாக ராக்கெட் வேகத்தில் கிடுகிடுவென உயர்ந்து வரும் நிலையில், வெள்ளி விலையும் அதனோடு சேர்ந்து வரலாறு காணாத வகையில் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் கடந்த 10 நாள்களில் மட்டும் வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.30,000 அதிகரித்துள்ளது கவனிக்கத்தக்கது.
இதன் மூலம் 2025-ம் ஆண்டில் வெள்ளியின் விலை முதலீட்டாளர்களுக்கு அபரிமிதமான லாபத்தை கொடுத்துள்ளது என்றே சொல்லலாம். நேற்று (அக்டோபர் 12-ம்தேதி) ஒரு கிராம் ரூ.187-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 87 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டது. கடந்த 4 நாட்களில் மட்டும் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.20-ம், கிலோவுக்கு ரூ.20 ஆயிரமும், கடந்த 10 நாள்களில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.30ம், கிலோவுக்கு ரூ.30,000 அதிகரித்துள்ளது கவனிக்கத்தக்கது.
தங்கத்தின் விலை கடுமையாக உயர்ந்து வருவதால், அதற்கு மாற்றாக வெள்ளியில் முதலீடு செய்ய மக்கள் அதிக ஆர்வம் காட்டுவதே இதற்குக் காரணம் என்று தமிழ் நகை வியாபாரிகள் சம்மேளனம் கூறியுள்ளது. இதனால் தங்கத்தை விட வெள்ளியில் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
தற்போதைய நிலவரப்படி, அண்மைக் காலமாக தொழிற்சாலைகளில் வெள்ளியின் பயன்பாடு அதிகரித்து வருவதால், அதன் விலை முன்னெப்போதும் இல்லாத வகையில் கடுமையாக உயா்ந்து வருவதாக கூறப்படுகிறது. அதாவது தொழில்துறை தேவை அதிகரிப்பு, முதலீட்டாளர்களின் ஆர்வம், மற்றும் பண்டிகை காலங்களில் முதலீட்டாளர்களின் தேவை அதிகரிப்பு போன்ற பல காரணங்கள் உள்ளன. அந்த வகையில், தொழில்துறையில் சூரிய மின்தகடு(Solar Panels), லித்தியம் பேட்டரி, மின்சார வாகனங்கள், மின்கம்பிகள், கைப்பேசிகள், கணினிகள், செயற்கை நுண்ணறிவு சாதனங்கள் என அனைத்து வகையான மின் மற்றும் மின்னணு சாதனங்களில் வெள்ளியின் பயன்பாடு அதிகரித்துள்ளதால் தேவை அதிகரித்து வெள்ளியின் விலையும் உயா்ந்து வருகிறது என்கின்றனர்.
பொருளாதார சூழ்நிலை, அமெரிக்க டாலரின் மதிப்பு, வட்டி விகிதங்களில் ஏற்படும் மாற்றங்கள், தங்கம், வெள்ளியில் முதலீடு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு அவற்றின் விலை தீா்மானிக்கப்படுகின்றன.
கடந்த சில மாதங்களாக தங்கம்தான் உயருகிறது என்றால், அதற்கு இணையாக வெள்ளியும் விலை உயா்வைக் கண்டு வருவது கவனிக்கத்தக்கது. கடந்த 2023-ல் ஒரு கிலோ வெள்ளி ரூ.63,000-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இப்போது (அக்டோபர் 12-ம்தேதி)ரூ.1.87 லட்சத்தை தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தங்கத்துக்கு நிகராக வெள்ளியின் விலையும் உயர்ந்து வருவது வரலாற்றில் இதுபோல் முன்னெப்போதும் இல்லாதது என்று வியாபாரிகளும், பொருளாதார நிபுணா்களும் கூறி வருகின்றனர். அதுமட்டுமின்றி உலகளவில் தொழில் துறை பயன்பாட்டிற்கான வெள்ளியின் தேவை அதிகரிப்பதே விலை உயா்வுக்கு காரணம் என துறை சாா்ந்தவா்கள் கருத்தாக உள்ளது.
உலகளவில் இந்தியா, அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகள் தொழிற்சாலை பயன்பாட்டுக்காக வெள்ளியை அதிகளவில் கொள்முதல் செய்து வருகின்றன.
2023-ல் சூரிய மின்தகடு (சோலாா்) துறையில் வெள்ளியின் பயன்பாடு 142 மில்லியன் அவுன்ஸாக இருந்த நிலையில், 2024-ல் அதுவே 197.6 மில்லியன் அவுன்ஸாக உயா்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதாவது, ஒரே ஆண்டில் சுமாா் 40 சதவீதம் அதிகரித்துள்ளதாக துறை சாா்ந்தவா்கள் கூறுகின்றனா்.
அதேபோல், சோலாா் ஆற்றல் விரிவாக்கம், மின்சார வாகனங்கள் மற்றும் மின்சார கட்டமைப்பு வளா்ச்சி உள்ளிட்ட காரணங்களால் அடுத்த 3 ஆண்டுகளில் தொழில் துறையில் வெள்ளி நுகா்வு 7 முதல் 12 சதவீதம் வரை உயரும் வாய்ப்பு உள்ளதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.
வெள்ளியின் விலை அதிகரித்துக்கொண்டே வருவதால் நடுத்தர மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்கள் தங்கத்தைவிட வெள்ளி கட்டிகள் மற்றும் வெள்ளி நகைகளை வாங்க ஆா்வம் காட்டுகின்றனா்.
வெள்ளியின் விலை வரும் ஆண்டுகளில் தொடர்ந்து உயரும் என்பதால் நீண்ட கால முதலீட்டிற்கு வெள்ளியில் முதலீடு செய்வது லாபகரமாக இருக்கும் என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர். தற்போது, வெள்ளி விநியோகம் தேவையை விட குறைவாக உள்ளது. இரண்டாவதாக, தங்கத்தைப் போலவே, வெள்ளியும் கடினமான காலங்களில் நிதிப்பாதுகாப்பை வழங்குகிறது. இதனால் நீங்கள் இன்னும் வெள்ளி ETF-களில் முதலீடு செய்யத் தொடங்கவில்லை என்றால், இப்போதே தொடங்குவது நல்லது.
இந்நிலையில் வெள்ளியின் தேவை அதிகரித்து வரும் நிலையில் தமிழ்நாட்டில் வெள்ளி கட்டிகள் விற்றுத் தீர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் வெள்ளியில் முதலீடு செய்வதற்காக வெள்ளி கட்டி வாங்க ஆர்வமாக உள்ள மக்கள் 10 நாள்கள் வரை காத்திருக்க வேண்டும் என தமிழ்நாடு நகை வியாபாரிகள் சம்மேளனம் அறிவித்துள்ளது.