

முப்பது வருட உழைப்பில் பதினெட்டு முறை பதவி நீக்கம் செய்யப்பட்டவரை அறிவீர்களா? ஏறத்தாழ வருடத்திற்கு இருமுறை இவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.
பொதுவாக, நாம் வருடத்திற்கு ஒருமுறை சம்பள உயர்வு பெறுவதை உரிமையாகக் கருதுகிறோம்; உத்தியோக காலத்திற்குள் நாலைந்து பதவி உயர்வுகள் பெறுவது சகஜம். ஆனால், வருடத்திற்கு இருமுறை பதவி நீக்கப்பட்டும், இன்று சொந்தமாக ஒரு தொலைக்காட்சி நிலையத்தையே அமைத்து வெற்றி கொண்டிருக்கிறார் இவர். பதவி நீக்கம் இவர் உழைப்பை முடக்கி விடவில்லை; மாறாக, இவரது உழைப்பிற்கு உரமாக அமைந்தது.
இவர் பெயர் சாலி ஜெஸ்ஸி ராபேல். ஒவ்வொரு முறையும் பதவி நீக்கம் செய்யப்பட்ட பொழுதெல்லாம், முந்தையதைவிடச் சிறந்த ஓர் இடத்தை இலக்காகக் கொள்வாராம்.
எதிர்கொண்ட தடைகள்: இவர் அமெரிக்காவில் வானொலி ஒலிபரப்பாளராகப் பணியாற்றியவர். "பெண் இப்பணியைச் செய்ய முடியாது" என ஒதுக்கப்பட்டார். "குரல் வளம் சரியில்லை" எனத் தூக்கி எறியப்பட்டார். "உச்சரிப்பு நன்றாயில்லை" என்ற காரணத்துக்காக ஒருமுறை பதவி நீக்கம்; "நேரத்திற்கு ஆஜராகவில்லை" என்று குறை கூறப்பட்டு மற்றொரு முறை பதவி நீக்கம். இப்படிப் பலப்பல காரணங்களுக்காக அவர் நீக்கப்பட்டார்.
வெற்றிக்கான ரகசியம்: தன்னைப் பதவி நீக்கம் செய்த நிலையங்களை ஜெஸ்ஸி (Sally Jessy Raphael) குறை கூறவில்லை; அதற்குக் காரணமானவர்கள் மீதும் கோபம் கொள்ளவில்லை. ஒவ்வொரு முறை பதவி நீக்கம் பெற்ற பொழுதும் வானொலி, தொலைக்காட்சி தொடர்பான வேறு வாய்ப்புகளைக் கண்டுபிடித்தார்.
பிடிவாதமாக முயற்சிக்கு மேல் முயற்சி செய்து புகழ்பெற்றார். சொந்த நிலையத்தை உருவாக்கினார். இரண்டு முறை 'எமி பரிசு' (Emmy Award) எனும் சாதனையாளர் பரிசையும் பெற்றார். தோல்வி கண்ட ஒவ்வொரு முறையும், இன்னும் சிறப்பான ஒரு நிலையை எட்டிப் பிடித்தார்.
நாம் கற்க வேண்டிய பாடம்:
சாதிக்க வேண்டும் என்ற வேட்கை, சாதித்தே தீருவேன் என்ற பிடிவாதம், சாதிக்க முடியும் என்ற மனத்துணிவைப் பெறுங்கள்.
வெற்றிப்படியை எட்டிப் பிடிக்கத் தோல்வியும் ஒரு கருவி என்று ஏற்றுக் கொள்ளுங்கள்.
தோல்வியைக் கண்டு துவளாதீர்கள்; தோல்வி துணிவை வளர்க்கட்டும். தோல்வியை வெற்றியின் வாய்க்காலாக மாற்றுவது உங்கள் கைகளில் தான் இருக்கிறது.
'கடவுள் துணை' என எழுதுவதைப் போல, 'தோல்வியும் துணை' என உங்கள் வீட்டு மேசையில் இருக்கும் நோட்டில் எழுதி வைத்துக் கொள்ளுங்கள். லட்சியத்தில் வெற்றி காணும் வரை தளராது உழைக்கின்ற மனோபாவத்தை வளர்த்துக் கொண்டு, தோல்வியையும் துணையாக்குபவனே உயர்ந்த உழைப்பாளன்!