
வெற்றிக்கு தடையாக இருக்கும் விஷயங்களில் முதன்மையானது விமர்சனங்கள். நாம் எந்த செயல் செய்தாலும் அதை விமர்சிப்பதை சிலர் வேலையாக வைத்திருப்பார்கள். மழை நேரத்தில் குடை பிடித்தாலும், வெயில் நேரத்தில் குடை பிடித்தாலும் இவர்களுக்கு ஒன்றுதான். குடை என்பது பாதுகாப்புக்கு என்பதை அறியாமல் ஏதேனும் விமர்சனங்களை முன் வைப்பது இவர்களின் பழக்கம்.
பாபு எப்போதும் உதவும் மனம் உள்ளவன். சிறு வயதிலிருந்து அவனுக்கு யாராவது கஷ்டப்பட்டால் பிடிக்காது. உடனே ஓடிப்போய் தன்னால் முடிந்த உதவிகளை செய்வான். இப்படித்தான் ஒருமுறை ஒரு வீட்டில் திருடிய ஒருவரைப் போட்டு மக்கள் அடித்துக் கொண்டிருக்க இவன் ஓடிப்போய் அதை தடுத்து காவலருக்கு சொல்லி அவரை காப்பாற்றினார்.
உடனே அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் பாபுவின் மீது பல விமர்சனங்களை வைத்தனர். ஒரு திருடனுக்கு உதவ வேண்டுமா? இதுதான் பொது நலமா? இவனுக்கு எதற்காக இந்த வேலை? என்றெல்லாம் அவர்களது கேள்வி எழுப்பினர். இது ஒரு சான்றுதான்.
இதேபோல் இன்னும் பல்வேறு விஷயங்களில் சேவை மனப்பான்மையுடன் உதவ அதை விமர்சனம் என்ற பெயரில் கேலியும் கிண்டலும் செய்து அவன் மனதை புண்படுத்திவிட்டனர் சிலர்.
இப்பொழுதெல்லாம் சேவையிலிருந்து விலகி தான் உண்டு தன் வேலை உண்டு என இருக்கிறான். ஏனெனில் வலியமாக உதவ போய் வாங்கி கட்டிக் கொள்ளும் அப்பாவி என தான் பெயர் பெறுவதை அவன் விரும்பவில்லை. அந்த அளவுக்கு ஒரு நல்ல மனிதனின் மனதை மாற்றியிருக்கிறது விமர்சனங்கள்.
வெற்றிக்கு உதவும் விமர்சனம் என்பது தேவை இல்லையா? என நினைக்கலாம். நிச்சயம் தேவைதான். ஆனால் அந்த விமர்சனம் என்பது எப்படி இருக்க வேண்டும் தெரியுமா? ஒரு பொருளையோ அல்லது ஒரு செயலையோ அது தவறு எனும் பட்சத்தில் தேங்காய் உடைத்ததுபோல் பட்டென்று இது சரியல்ல என்று கூறி அவர்களின் மனம் நோக செய்வதை விட நாசுக்காக மேலோட்டமாக அதை பாராட்டுவதுபோல் பாராட்டி நம் கருத்துக்களை கூறவேண்டும்.
இதற்கு நல்ல உதாரணம் சொல்ல வேண்டும் எனில். ஒரு சாண்ட்விச்சை எடுத்துக் கொள்ளுங்கள். சாண்ட்விச்சைப் பார்த்தால் மேலும் கீழும் உள்ள பிரெட் மட்டுமே நமக்குத் தெரியும். அதன் உள்ளே இருக்கும் காய்கறி கலவைகளோ அல்லது சாஸ் போன்ற ஐட்டங்களோ நமக்கு தெரியாது. ஆனால் அதன் சுவை அபாரமாக இருக்கும். அதே போல்தான் விமர்சனங்களும் இருக்கவேண்டும். உள்ளே இருக்கும் அம்சங்கள் பளிச்சென்று வெளியே தெரியாமல் அதே சமயம் விமர்சனத்தின் தன்மையை அவர்கள் ஏற்றுக் கொள்ளும்படி இருக்க வேண்டும்.
இதனால் விமர்சிப்பவரின் மனமும் நிறையும். விமர்சனத்தை ஏற்பவரின் மனதும் புண்படாது. இது போன்ற சாண்ட்விச் விமர்சனங்கள் மற்றவரை பண்படுத்தி உயரவைக்கும். ஊக்கமுடன் வெற்றியை நோக்கி நகர்த்தும் என்பது உண்மை. இனி விமர்சனங்களை அள்ளி வீசும் முன் சாண்ட்விச்சை நினைவில் வைத்துக் கொள்வோமா?