உப்பு மூட்டை விளையாட்டு முதல் ஜெயகாந்தன் தத்துவம் வரை: 70s பள்ளிப் பருவ நினைவலைகள்!

சிறுவயது நினைவலைகளில் தொடங்கி, வாழ்க்கையின் ஆகச்சிறந்த தத்துவத்துடன் கதையை முடித்திருப்பது படிப்பவர்களின் மனதைத் தொடுகிறது.
Uppu Muttai
Uppu MuttaiAI Image
Updated on

"உப்பு மூட்டை விளையாடுவதற்கு தான் நான் உன்னை சோறு போட்டு வளர்க்கிறேனா? யார் அந்த பையன்? இதே மாதிரி நீ அவனை முதுகில் தூக்கி விளையாடுவது தெரிந்தால்; நான் வந்து உங்க பள்ளி ஆசிரியரிடம் சொல்லி உண்டு இல்லை என்று பார்த்து விடுவேன்? ஜாக்கிரதை!!" - இப்படியாக வசை பாட்டு பாடிய என் அம்மாவை இப்போது நினைத்தாலும் அந்த காட்சிகள் என் நினைவுகளில் பசுமையாக இருக்கின்றன.

வாசகர்களுக்காக; இந்த தலைமுறை GEN-Z க்களுக்காக சொல்கிறேன்.

உப்பு மூட்டை விளையாட்டு என்பது 70களில் ஒருவன் முதுகில் ஏறிக்கொண்டு எதிரே வரும் உப்பு மூட்டை சுமப்பவனிடம் எதிரும் புதிருமாக மோதிக்கொள்வது.

இதில் சுவாரஸ்யம் என்று பார்த்தால், இந்த விளையாட்டில் தடுமாறி விழுபவர்களை பார்த்து மற்ற மாணவர்கள் கேலியும், கிண்டல் செய்து சிரிப்பது தான்.

விழுவதும், மீண்டு எழுவதும், திரும்பவும் மோதிக் கொள்வதும் இந்த விளையாட்டினுடைய ஒரு அங்கம்.

இதன் மூலம் உடல் மற்றும் அணிந்திருக்கும் உடைகளில் படிந்து இருப்பது மண்வாசனை மட்டுமே!

அம்மாவிற்கு என்மீது பாசம் - எல்லா அம்மாவும் போல...

அதன் காரணமாக அப்படி சொன்னாள்.

இது அம்மாவிற்கு எப்படி தெரிந்தது? என்பதை நான் சில நாட்களில் தெரிந்து கொண்டு விட்டேன்.

அதாவது என் 'பெரியப்பா மகள்' நான் படித்த அதே பள்ளியில் சக மாணவியாக படித்துக் கொண்டு வந்தாள்.

இப்படி நல்லது செய்ய வந்த என் சகோதரி இடம் நான் பல நாட்கள் பேசாமல் இருந்தேன் என்பது ஒரு புறம்.

இதை நான் எப்படி என் நண்பனிடம் (நண்பன் என்று சொல்ல முடியாது; காரணம் அவன் என்னை மிரட்டி உப்பு மூட்டை சுமக்க வைத்தவன்) புரிய வைப்பது அல்லது இந்த அவஸ்தையில் இருந்து தப்பிப்பது என்பது ஒரு சவாலாக இருந்தது.

முடிவெடுத்தேன். ஒவ்வொரு இரவும் படுக்கும் முன் என் அக்குள் பகுதியில் சில வெங்காயத்தை வைத்துக்கொண்டு தூங்கினேன்.

இது காலையில் எழுந்தவுடன் என் உடலில் வெப்பத்தை அதிகரித்து பிறகு காய்ச்சலாக மாறியது.

இப்படியாக ஒரு வாரம் பள்ளிக்கு விடுப்பு எடுத்துக் கொண்டேன்.

இதையும் படியுங்கள்:
பெற்றோர்களுக்கும் வளர்ந்த பிள்ளைகளுக்கும் இடையே ஏன் பேச்சு குறைகிறது? அதிர்ச்சியூட்டும் காரணங்கள்!
Uppu Muttai

மீண்டும் நான் பள்ளிக்கு செல்லும்போது என் உடம்பில் 'மகமாயி' வந்து விட்டதாகவும், ஆதலால் மற்றவரிடம் பழகும் போது தூரத்தில் இருக்கும் படியும் மருத்துவர் சொன்னதாக பொய் சொன்னேன்.

இப்படியாக என் 'சுபாவம்' (நடிப்பு) எனக்கு ஒத்துழைத்ததால் அந்த சம்பவங்களிலிருந்து சமாளித்து வெளியேறினேன் என்பது ஒரு கதை.

இன்று நினைத்தாலும் இந்த சமாச்சாரங்களை பகிர்ந்து கொள்ள 'என் அம்மாவும் என்னுடைய உண்மையான அந்த நண்பனோ' இல்லை என்பது எனக்கு ஒரு பெரிய வெட்டவெளியை ஏற்படுத்தி இருக்கிறது.

இவ்வாறாக நாம் எல்லோரும் பல காலங்களில், பல சுமைகளை, சோதனைகளை, வேதனைகளை சுமந்து வாழ்க்கையில் போராடி வெற்றி பெற்று இருக்கிறோம்.

இதில் உண்மையான 'ரசனை' என்பது நம்முடைய அவமானங்கள் தான்.

அவை தான் நம்மை ஆழமாக சிந்திக்கவும், செயல்படவும் வைத்திருக்கிறது என்கிற உண்மையை யாராலும் மறைக்கவும் மறுக்கவும் முடியாது.

இங்கே என்னுடைய ஆசான் ஜெயகாந்தனுடைய (JK) வரிகளுடன் என் கதையை முடிக்கிறேன்.

அவமானங்கள் என்பது எல்லோருக்கும் அந்த நேரத்து நியாயங்கள்.

இதை புரிந்து கொண்டால் நாம் காலத்தோடு கலந்து கரையாமல் கரை சேரலாம் - கால தேவனுக்கு நன்றி!

logo
Kalki Online
kalkionline.com