
ஒரு மனிதனுக்கு வாழ்க்கையில் தன்னம்பிக்கை மிக முக்கியமான ஒன்று தன்னம்பிக்கை இல்லாத மனிதன் நிச்சயமாக வாழ முடியாது வாழ்க்கையில் வெற்றி பெறவும் முடியாது. வாழ்க்கையில் தன்னம்பிக்கையை உடைக்கும் அளவிற்கு பிரச்சனை வந்தால் கூட ஒரு சின்ன சின்ன காரியங்களில் நாம் கவனம் செலுத்தினால் நம்முள் இருக்கும் தன்னம்பிக்கை உடைந்து போகாது.
நிறைய தன்னம்பிக்கை வரிகள் படித்திருப்பீர்கள் அவைகளில் இருந்து வித்தியாசமாக உங்கள் செயல்பாடுகளிலேயே தன்னம்பிக்கையை உருவாக்க முடியும் எப்படி என்று தானே யோசிக்கிறீர்கள்....
வேக நடைங்க
அட வேக நடையில் என்ன ஆகப்போகிறது என்றுதானே நினைக்கிறீர்கள். ஒருவரது நடையை வைத்தே அவர் தெம்பாக வருகிறாரா, சோம்பலாக வருகிறாரா என்று கண்டு பிடித்துவிட முடியும். சற்று வேகமான நடையை பார்த்ததுமே எதிரே இருப்பவருக்கு நம்மால் எதையும் சுறுசுறுப்பாக முடித்துவிட முடியும் என்றநம்பிக்கையை ஏற்படுத்தும். ஆகவே இன்றிலிருந்து 25 சதவிகித வேகத்தை உங்கள் வழக்கமான நடையில் கூட்டுங்கள்.
நிமிர்ந்த நிலையில் இருங்க
எப்போதுமே நிமிர்ந்த நிலையில் நிற்கவோ, அமரவோ வேண்டும். தோள்களை தொங்கியபடியே வந்தால் அவரால் தன்னம்பிக்கையோடு எதையும் செய்யமுடியாது என பார்ப்பவர் எண்ணிவிடுவர். நிமிர்ந்து நிற்பது, தலையை தொங்கப்போடாமல் இருப்பது, எதிர் உள்ளவர் களின் கண்களை நேரே பார்த்து பேசுவது போன்றவை தன்னம்பிக்கை உள்ளது என்பது சொல்லாமல் சொல்லும் குணமாகும். பார்ப்பவருக்கும் நாம் நல்ல தன்னம்பிக்கை உடையவர் என்ற உணர்வை உண்டாக்கும். ஆகவே சரியான நிலையில் நடப்பது, உட்கார்வது, நிற்பது நல்லது.
மற்றவர்களை மனதார பாராட்டுங்கள்
நம்மை நாமே "நெகட்டிவ்"வாக நினைக்கும்போது, மற்றவர்களை பார்ப்பதும், பேசுவதும்கூட நெகட்டிவ்வாக இருக்கும்! இதிலிருந்து விடுபட முதலில் மற்றவர்களை மனதார பாராட்டக் கற்றுக் கொள்ளுங்கள். சின்ன விஷயமாக இருந்தாலும், பெரிதாக பாராட்டுங்கள், மற்றவர்கள் பற்றி குறைகூறுவதை விடுங்கள்.
இப்படி நடந்துகொண்டால் உங்களை மற்றவர்களுக்கு பிடித்துப் போகும். இதனால் நமக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும். மற்றவர்களின் நல்ல குணாதிசயங்களை காணும் போது, நமக்குள்ளே மறைந்திருக்கும் நல்ல குணாதிசயங்களும் தானே தெரியவரும்.
எங்கு சென்றாலும் நேரத்தில் செல்லுங்கள் இதுதான் மிக முக்கியமான ஒன்று. பள்ளி, கல்லூரி, விழா மற்றும் கூட்டங்களில் அமரும்போது, எப்போதும் பின் இருக்கையில் அமரவே விரும்புவர். இது தன்னம்பிக்கை குறைபாடாகும். ஆகவே இனிமேல் எங்கு சென்றாலும், முன் இருக்கையில் தைரியமாக உட்காருங்கள். இதனால் உங்கள் மனதில் உள்ள பயம் போய்விடும். தன்னம்பிக்கை கூடும்.
பயமில்லாமல் பேசுங்க
சிலர் பலர் கூடி இருக்கும்போது பேசவே தயங்குவர். மற்றவர்கள் நம்மை முட்டாள் என நினைத்து விடுவார்களோ என்ற பயம்தான். இனி பயம் இன்றி உங்கள் மனதில் பட்டதை தைரியமாக சபைகளில் எடுத்துப் பேசவும். இதனால் நமது எண்ணத்தில் ஒரு நம்பிக்கை பிறக்கும். மற்றவர்களும் உங்களை தலைவராக ஏற்றுக் கொள்வர். எல்லோரிடத்திலும் தைரியமாக பேச ஆரம்பித்தாலே, தன்னம்பிக்கை உங்களை தேடி, ஓடிவரும்.
உடல்வாகு மெயின்டெய்ன் பண்ணுங்க
நமது உடையும், உடல் வனப்பும், தன்னம்பிக்கைக்கு கை கொடுக்கும். அளவுக்கு மீறி குண்டாகவோ, மிக ஒல்லியாகவோ இருந்தால் நம்மீதே நமக்கு நம்பிக்கை இழக்க நேரிடும். சக்தி குறையும். ஆகவே உடற்பயிற்சி செய்து, நமது உடலை பாதுகாப்பாக வைத்துக் கொண்டால், தன்னம்பிக்கை உங்களுக்கு கிரீடமாக அமரும்!